வெறும் 4 லட்சம் ரூபாய் விலையில் இந்த சூப்பர் காரை வீட்டுக்கு ஓட்டி வரலாம்
இந்தியாவில் முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு என சில நிறுவனங்கள் மட்டுமே குறைவான விலையில் கார்கள் விற்பனை செய்து வருகிறது. மாருதி, ஹூண்டாய், டாடா ஆகியவை அதில் சில. ஆனால் எதிர்பாராத வகையில் பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரனும் மிகவும் குறைவான விலையில் இந்தியாவில் தங்களுடைய ஹேட்ச்பேக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த மாதம் கூடுதல் சலுகைகளுடனும் அந்தக் காரை நாம் வாங்கலாம்.
சிட்ரன் இந்தியாவில் விற்பனை செய்து வரும் C3 ஹேட்ச்பேக் காரைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கத்தை நீங்கள் மூடும் முன் ஒரு விஷயம் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், இந்தியாவில் தற்போது நல்ல பெர்ஃபாமன்ஸ் மற்றும் சொகுசுடன் குறைவான விலை கொண்ட கார்களில் இந்த சிட்ரன் C3-யும் முக்கியமான ஒன்று என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

சரி, அவ்வளவு நல்ல கார் என்றால் ஏன் மிகவும் குறைவாக விற்பனையாகிறது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. விலை குறைவாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நிறைய இடங்களில் வாடிக்கையாளர்கள் அடிப்படை என்று நினைக்கும் சில வசதிகளைக் கூட சிட்ரன் இந்தக் காரில் முன்னர் கொடுக்காமல் இருந்து. தற்போது கொஞ்சம் அதனை அப்டேட் செய்திருக்கிறது. மேலும், விலை மலிவான பாகங்களின் பயன்பாட்டை நீங்கள் ஆங்காங்கே பார்க்கலாம்.
ஆனால் இன்ஜின் மற்றும் பயண அனுபவம் என்று வரும் போது இந்த C3 ஹேட்ச்பேக் மற்ற எந்தக் காருக்கும் சற்றும் சளைத்தது அல்ல. இன்னும் சொல்லப் போனால் பட்ஜெட் கார்களிலேயே மிகவும் சிறப்பான ஒரு இன்ஜினாக C3-யின் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜினைக் கூறலாம். 81 hp பவர் மற்றும் 115 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை இந்த இன்ஜின் கொண்டுள்ளது.

ஆனால் இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே கொடுத்து வருகிறது சிட்ரன். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை. லைவ், ஃபீல், ஷைன் என மூன்று வேரியன்ட்களாக இந்த ஹேட்ச்பேக் காரை சிட்ரன் விற்பனை செய்து வரும் நிலையில், டாப் எண்டான ஷைன் வேரியன்டில் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வைக் கூட அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.
இதன் 1.2 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினானது 110 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் 190 Nm டார்க்கையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் 205 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேண்டும் என்றால் C3-யின் லைன்-அப்பில் விலை அதிகமாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
மிகவும் குறைவான இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டிருப்பது, குறைவான விலையிலேயே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வழங்காதது, மலிவான பொருட்களை ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது ஆகியவை இந்தக் கார் அதிகம் விற்பனையாகாமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்களாக நாம் கூறலாம். மிக முக்கியமாக இதன் ஷோரூமைத் தேடிக் கண்டுபிடிப்பது தான் பெரிய வேலை.
கார் தயாரிப்பில் மாருதியின் ஃபார்முலாவை பின்பற்றிய சிட்ரன், சர்வீல் செண்டர் மற்றும் ஷோரூம் செயல்பாடுகளை அறவே மறந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். மிகவும் குறைவான அளவிலேயே ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களை இந்தியாவில் கொண்டிருக்கிறது சிட்ரன். மேலும், நிறைய இடங்களில் நகரங்கள் அல்லது மக்கள் கூடும் இடங்களை விட்டு தொலைவில் தள்ளியிருக்கின்றன இதன் ஷோரூம்கள்.
இது நிறைய நேரங்களில் வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் முடிவை மாற்றிவிடும் ஒரு விஷமயாக இருக்கிறது. நீங்கள் ஒரு வாடிக்கையாளராக இருக்கும்பட்சத்தில் அருகில் இருக்கும் மாருதி ஷோரூமிற்கு செல்வீர்களா அல்லது ஊரை விட்டுத் தள்ளியிருக்கும் சிட்ரன் ஷோரூமிற்குச் செல்வீர்கள். எனினும் இந்தக் காருக்காக செல்லலாம். C3 ஹேட்ச்பேக்கின் பெர்ஃபாமன்ஸ் அவ்வளவு சிறப்பாக இருப்பதாக இந்தக் காரைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களே சொல்கிறார்கள்.
இந்த ஜூன் மாதம் C3 ஹேட்ச்பேக் மாடலுக்கு 1.10 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளையும் வழங்குகிறது சிட்ரன். இந்தக் காரை தற்போது 4.99 லட்சம் ரூபாய் முதல் 9.45 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். மேற்கூறிய சலுகைகளுடன் 4 லட்சம் ரூபாய்க்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்தக் காரை நாம் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் முதல் முறையாக கார் வாங்கப் போகிறீர்கள். உங்களுக்குப் பிடித்தமான காரை வாங்க வேண்டும் இல்லையா. அனைத்து விதமான கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். அந்த வரிசையில் இந்த சிட்ரன் C3 காரையும் ஒரு முறை டெஸ்ட் செய்யுங்கள். பின்னர் உங்கள் முடிவை எடுங்கள். முதல் கார் வாங்கும் அனுபவம், கொஞ்சம் சிறப்பாக இருக்கட்டுமே.
கட்டுரையில் 'இத்தாலி' என தவறான தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது 'பிரெஞ்சு' என சரியாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications