மாருதிக்குப் போட்டியாக வெறும் 5 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்தக் காரை வாங்கலாமா? கூடாதா?
இந்தியாவில் மிக மிகக் குறைவான விலை கொண்ட கார்களில் இதுவும் ஒன்று. ஆனால் மாருதி இது மாருதி கார் இல்லை, ரெனோவின் க்விட்டும் இல்லை. நாம் பேசிக் கொண்டிருப்பது சிட்ரன் நிறுவனத்தின் C3 கார் மாடலைப் பற்றித் தான். 5 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது சிட்ரன். தற்போது இதன் விலையை கணிசமான அளவில் உயர்த்தியும் கூட 5 லட்சத்தைத் தாண்டவில்லை.
உடனே எழுந்து போய்விடாதீர்கள். குறைவான விலை, அதிகம் பேர் வாங்கவில்லை என்றாலும், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகச்சிறப்பான கார்களுள் இதுவும் ஒன்று என தாராளமாகக் கூறலாம். பட்ஜெட் விலையில் கார் வாங்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால் தொடர்ந்து படியுங்கள். முதலில் இது ஏன் சிறப்பான கார் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு காருக்கு முக்கியமான அம்சம் என்றால் அதன் இன்ஜின் தான். அதன் பிறகு பயணம் செய்யும் போது இருக்கும் சொகுசுத்தன்மை. இரண்டிலுமே நல்ல மார்க் வாங்கும் ஒரு காராகவே இருக்கிறது சிட்ரன் C3 ஹேட்ச்பேக். இந்தக் காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டுமே பயன்படுத்துவதற்க அவ்வளவு சூப்பராக இருக்கக்கூடிய ஸ்மூத்தான இன்ஜின்களே.
இதில் டர்போ பெட்ரோல் இன்ஜினானது ஸ்மூத்னஸுடன் கூடுதல் பவரையும் அசால்ட்டாக தூக்கிக் கொடுக்கிறது. இதன் சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் பயண சொகுசுத்தன்மையும் சிறப்பாகவே இருக்கிறது. எனவே அடிப்படையாக நாம் ஒரு காரை ஏன் வாங்குகிறோம் என்பதில் இந்த சிட்ரன் C3 பாஸ் செய்து விட்டது. அடுத்ததாக வசதிகளுக்கு வருவோம்.

இந்தக் காரில் சிட்ரன் கோட்டை விட்டது இங்கே தான். மாருதியைப் பார்த்து மாருதியைப் போலவே பட்ஜெட் விலையில் இந்தக் காரை வெளியிட்டது சிட்ரன். ஆனால் மாருதியைப் போல வாடிக்கையாளர்களுக்குப் போதுமான வசதிகளைக் கொடுக்காமல், அனைத்து வசதிகளையும் உரித்தெடுத்துவிட்டுக் கொடுப்பது போல இதனை வடிவமைத்தது தான் பிரச்சினை.
காரின் உண்மையான ப்ரீமியம் வசதிகள் இல்லையென்றால் கூட பரவாயில்லை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது ப்ரீமியமான உணர்வைக் கொடுக்கும் வசதிகளை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அதனை செய்யத் தவறி மிகவும் அடிப்படையான ஒரு காரைக் கொடுத்தது. அது வாடிக்கையாளர்களிடம் நல்ல வகையில் எதிரொலிக்கவில்லை. ஆனால் பின்னர் அந்தத் தவறைத் திருத்திக் கொண்டு ஓரளவிற்கு அப்டேட செய்து விட்டது.
முன்பு விற்பனையில் இருந்த சிட்ரன் C3-யுடன் ஒப்பிடும் போது தற்போது விற்பனையில் இருக்கும் காரை பரவாயில்லை எனக் கூறலாம். போதுமான வசதிகளைக் கொண்டுள்ளது. முன்பு 7 லட்சம் ரூபாய்க்கு அருகில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை இருந்தது. இப்போது அப்படியில்லை ரூ.4.99 லட்சம் என்ற விலையிலேயே தொடங்குகிறது. எனவே இந்த விலையை மனதில் கொண்டு வசதிக் குறைவினை மன்னித்து விடலாம்.
தற்போது இந்தக் காரினை லைன், ஃபீல் மற்றும் ஷைன் என சில வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது சிட்ரன். ரூ.4.99 லட்சம் முதல் ரூ.9.45 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் காரினை வாங்கலாம். இதில் அனைத்து வேரியன்ட்களிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினும் அத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
டாப் எண்டான ஷைன் வேரியன்டில் மட்டுமே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. NA பெட்ரோல் இன்ஜினானது 82 hp பவரையும், டர்போ பெட்ரோல் இன்ஜினானது 110 hp பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
மேலே கூறியது போல குறைவான வசதிகளைக் கொண்டிருக்கும் கார் என்றாலும் விலையும் குறைவாக இருப்பதை நாம் பார்க்க வேண்டும். டாப் எண்டில் விலை 10 லட்சம் ரூபாயை நெருங்கும் போது வசதிகளையும் அதேஅளவிற்குக் கொடுத்து சரிக்கட்டிவிடுகிறது சிட்ரன். டாப் எண்டு வேரியன்டில், ஆட்டோ டிம்மிங் IRVM, க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்ல இன்ஜினுடன் குறைவான விலையில் ஒரு கார் வாங்க வேண்டும் என்று கூறும் வாடிக்கையாளர்கள் இந்த சிட்ரன் காரைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இந்தக் கார் அதிகம் விற்பனையாகாமல் இருப்பதற்கு மூன்றாவதாக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அது ஷோரூம்களின் எண்ணிக்கை. இந்தியா முழுவதுமே 200-க்கும் குறைவான ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களையே கொண்டுள்ளது சிட்ரன்.
இதன் கார்களை வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கூட அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஷோரூம் அல்லது சர்வீஸ் செண்டர்கள் இல்லாதது, வாங்கும் முடிவை மாற்றிவிடுகிறது. தற்போது முதற்கட்ட மற்றும் முக்கிய நகரங்களில் மட்டுமே சிட்ரன் ஷோரூம்கள் இருக்கின்றன. உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இதன் ஷோரூம் இருந்தால் இந்த C3 ஹேட்ச்பேக் காரை நீங்களும் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications