வெறும் ரூ.5.50 லட்சத்தில் கிடைக்கும் காரை புக் பண்ணா தான் தயாரிக்கவே முடியுமாம்! இந்தியாவில் சிட்ரோனின் நிலைமை
சிட்ரோன் இந்தியா (Citroen India) நிறுவனம் தனது 'சிட்ரோன் 2.0' யுக்தியின் ஒரு பகுதியாக, தனது பிரபலமான ஏர்கிராஸ் எக்ஸ் (Aircross X) மற்றும் சி3 (C3) ஹேட்ச்பேக் கார் மாடல்களில் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல்கள் 'புக்கிங்கிற்கு ஏற்ப உற்பத்தி' என்ற அணுகுமுறையின் கீழ், வாடிக்கையாளர்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களுக்கு ஏற்ப மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏர்கிராஸ் எக்ஸ் காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மேக்ஸ் 5-சீட்டர் (Max 5-seater) வேரியண்ட் ரூ.12.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையிலும், மேம்படுத்தப்பட்ட சி3 லைவ் (ஆப்ஷ்னல்) (Live (O)) வேரியண்ட் ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையிலும் கிடைக்கும். சிட்ரோன் நிறுவனத்தின் மாறுபட்ட உற்பத்தி முறையின்படி முன்பதிவுகளுக்கு ஏற்ப மட்டுமே இந்த வேரியண்ட்கள் வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையில் உருவாக்கப்படும்.

இதன் மூலம், டீலர்களின் கையிருப்புக்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைக்கு ஏற்ப உற்பத்தியை சீரமைக்கவும், நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் உதவும் என சிட்ரோன் நம்புகிறது. ஸ்டெல்லான்டிஸ் இந்தியா (Stellantis India) நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிராண்டுகளின் வணிகத் தலைவரும் இயக்குநருமான குமார் பிரியேஷ் (Kumar Priyesh) இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏர்கிராஸ் எக்ஸ் காரின் வேரியண்ட்கள் வரிசையில் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ள மேக்ஸ் 5-சீட்டர் வேரியண்ட், முழுமையான வசதிகளோடு இரண்டு வரிசை இருக்கை அமைப்பைத் தேர்வு செய்யும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், மூன்றாவது வரிசை இருக்கைகளை விட, பின் இருக்கையில் அதிக இடவசதியை விரும்புபவர்களை இது ஈர்க்கும்.

முன்னதாக, சி3 ஏர்கிராஸ் என அழைக்கப்பட்டுவந்த ஏர்கிராஸ் எக்ஸ் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்த இருக்கை அமைப்பு ஒரு ஆப்ஷனாக கிடைத்தது. ஆனால், இந்த காரின் சமீபத்திய புதுப்பித்தல்களில் இந்த வசதி நீக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த புதிய அப்டேட் மூலம், ஏர்கிராஸ் எக்ஸ் காரின் உயர் ரக 5-சீட்டர் வேரியண்ட்களில் இந்த ஆப்ஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே கூறியதுபோல் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் தேவைக்கு ஏற்பவே இந்த கார்கள் உற்பத்தி செய்யப்படும். 7-சீட்டர் மேக்ஸ் வேரியண்ட்களைப் போலவே, 5-சீட்டர் பதிப்பிலும் 108 bhp திறன் கொண்ட டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். 7-சீட்டர் பதிப்போடு ஒப்பிடும்போது, 5-சீட்டர் வேரியண்ட் பின் இருக்கை பயணிகளுக்கு 60 மிமீ அதிக முழங்கால் இடவசதியை வழங்குகிறது.
இதில், பின் இருக்கை வரிசையில் மத்தியில் கப் ஹோல்டர் உடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் மூன்று-நிலைகளில் சாய்க்கக்கூடிய பின் இருக்கைகள் போன்ற அம்சங்கள் பயணத்தின் வசதியை மேம்படுத்துகின்றன. மேலும், இந்த புதிய வேரியண்ட் போலார் ஒயிட், டீப் ஃபாரஸ்ட் க்ரீன் மற்றும் பெர்லா நேரா கருப்பு ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இது டார்க் பிரவுன் உட்புறங்களுடன் காருக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

சிட்ரோன் சி3 கார் மாடலில், அடிப்படை லைவ் வேரியண்ட்டை விட மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய புதிய லைவ் (O) வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை லைவ் வேரியண்ட்டை விட சுமார் ரூ.54,000 அதிகமாக புதிய லைவ் (O) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.49 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட் 10க்கும் மேற்பட்ட கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ளது.
இதில், ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 10.1 இன்ச் ஆண்ட்ராய்டு தொடுதிரை (சி3 காரின் டாப் வேரியண்ட்கள் 10.25 இன்ச் யூனிட்டைப் பெறுகின்றன), இதனுடன் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை. இதன் மூலம், டிரைவிங் அனுபவம் மேம்பட்டுள்ளது. மேலும், புதிய சி3 லைவ் (O) வேரியண்ட் லெதரெட் இருக்கை கவர்கள், ஃபாக் விளக்குகள், குரோம் இன்செர்ட்களுடன் கூடிய சைட் பாடி & வீல் ஆர்ச் மோல்டிங் போன்ற வெளிப்புற மேம்பாடுகளையும் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனத்தின் இந்த கார்களுக்கான புக்கிங் சார்ந்த உற்பத்தி முறை, வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்களை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது. அதேநேரம், சிட்ரோனின் இந்த அணுகுமுறை இந்திய சந்தையில் அதன் போராட்டத்தையும் காட்டுகிறது. ஏனெனில், இவ்வாறான விலை குறைவான கார்களை விற்பனை செய்த போதிலும் சிட்ரோன் நிறுவனத்திற்கு போதிய எண்ணிக்கையில் கஸ்டமர்கள் கிடைப்பதில்லை என்பது ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது.


Click it and Unblock the Notifications









