இனி பெட்ரோல் கிடைக்குமோ கிடைக்காதோ... மக்களை மொத்தமா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைக்க அரசு திடீர் முடிவு!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசலின் (Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) தேவைக்கு இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 40 நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
எனவே இது இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) எதிர்மறையான பாதிப்புகளை மிக கடுமையாக ஏற்படுத்துகிறது. குறிப்பாக அந்திய செலாவணி (Forex) கையிருப்பில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக இயங்கும் வாகனங்களால், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையும் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனைகள் எல்லாம் போதாதென்று, இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் போர் பதற்றங்கள் மற்றும் உற்பத்தி குறைப்பு போன்ற காரணங்களாலும், ஒரு சில சமயங்களில் எரிபொருள் கிடைப்பதில் சந்தேகம் போன்ற சிக்கல்களையும் சந்திக்க வேண்டியதாகி விடுகிறது. எனவே இந்த பிரச்சனைகள் எதுவுமே வேண்டாம் என்று எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து கொண்டுள்ளன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விஷயத்தில், டெல்லி (Delhi) மாநில அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அங்கு தற்போது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை (Electric Vehicle Policy) ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதன்படி 30 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரும் 2030ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணங்களில் (Registration Fees) இருந்து முழுமையாக விலக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது 30 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால், சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எனவே மக்களுக்கு பணம் மிச்சம் ஆகும். இதன் காரணமாக நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 30 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான விலை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுதவிர வரும் 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து டெல்லியில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது டெல்லியில் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதாக இருந்தால், இது எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனமாக மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த வகையான மூன்று சக்கர வாகனமும் பதிவு செய்யப்படாது. தற்போதைய நிலையில் இவை அனைத்தும் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களாக மட்டுமே உள்ளன.
அதாவது இது ஒரு வரைவு கொள்கை (Draft Policy) ஆகும். எனவே அடுத்த 30 நாட்களுக்கு பொதுமக்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதற்கு பிறகு இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டெல்லி மாநில அரசின் இந்த திட்டங்கள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டியவை. இது மூலம் அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயரும் என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் டெல்லியில் தீவிரமாக இருந்து காற்று மாசுபாடு பிரச்சனை குறையலாம் என்பதும் எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








