புது கார் வாங்குபவர்களுக்கு 1 லட்சம்! வாரி வழங்க போகும் அரசு! டூவீலர் வாங்கறவங்களுக்கும் இவ்ளோ கிடைக்குமா!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள், இந்தியாவிற்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தி வருகின்றன. காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனை ஒரு பக்கம் என்றால், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து கொண்டே வருவது மற்றொரு பிரச்சனையாக உள்ளது.
எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை, மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் (Subsidy) உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இடங்களில் ஒன்றாக டெல்லி (Delhi) உள்ளது. டெல்லி அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கை (Electric Vehicle Policy) மூலம், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இதன் காரணமாகவே டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் டெல்லியில் கூடிய விரைவில் மேம்படுத்தப்பட்ட புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலுக்கு வரவுள்ளது. அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பிஎஸ் 4 அல்லது அதற்கும் பழைய வாகனங்களை ஸ்கிராப் (Scrap) செய்து விட்டு, அதாவது அழித்து விட்டு, புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு, சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இந்த புதிய திட்டத்தின் கீழ், நீங்கள் எலெக்ட்ரிக் டூவீலரை வாங்கினால் 10 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கும்.
அதுவே எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்கினால் 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். மறுபக்கம் நீங்கள் வாங்குவது எலெக்ட்ரிக் கார் என்றால், அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும். உங்கள் பழைய வாகனத்தை 'ஸ்கிராப்' செய்த சான்றிதழ் பெறப்பட்டதில் இருந்து 6 மாதங்களுக்கு உள்ளாக எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கினால், இந்த சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆனால் எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 15 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களை வாங்கும்போது மட்டுமே, 1 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். அதேபோல் முதலில் விண்ணப்பிக்கும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே அரசு இந்த சலுகையை வழங்கவுள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் காற்று மாசுபாடு பிரச்சனையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. எனவே அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இது போன்ற சலுகைகள் வழங்கப்படுவதை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வரவேற்கிறது.


Click it and Unblock the Notifications








