ரூ.90 லட்சம் டென்ஸா டி9 காரில் 5 ஸ்பெஷல் வசதிகள்... வேற லெவல் சொகுசு அனுபவம்!
சொகுசு கார் என்றாலே பிரம்மாண்டமான தோற்றம், வசதியான இருக்கைகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி பயணிகளுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது பிஒய்டி நிறுவனத்தின் டென்ஸா டி9 எலெக்ட்ரிக் எம்பிவி கார்.
ரூ.90 லட்சம் விலையில் இந்தியா வந்துள்ள இந்த கார், டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் எம்ஜி எம்9 போன்ற சொகுசு எம்பிவி கார்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சில வசதிகள் வழக்கமான கார்களில் பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசமாக இருப்பது கவனத்தை ஈர்க்கிறது. அப்படியான ஐந்து முக்கிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

1. பேட்டரியின் பலம்
டென்ஸா டி9 காரின் மிகப்பெரிய பலமே அதன் பேட்டரி திறன் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இதில் 115.07kWh திறன் கொண்ட பிஒய்டி பிளேடு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 730 கிமீ தூரம் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரேஞ்ச் என்இடிசி சோதனை முறையின்படி கணக்கிடப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நீண்ட தூர பயணங்களை எளிதாக மாற்றும் என நம்பலாம்.
இந்த பேட்டரியுடன் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 462 எச்பி பவரையும், 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் வெறும் 8.5 விநாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். இந்த எலெக்ட்ரிக் சொகுசு எம்பிவி கார் செயல்திறனிலும் மிரட்டலாக இருக்கிறது.

2. மசாஜ் வசதியுடன் இருக்கைகள்
இந்த காரின் இரண்டாவது வரிசையில் பயணிகளுக்காக தனித்தனி கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 விதமான மின்சார அட்ஜெஸ்ட்மென்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், நீண்ட தூரப் பயணங்களின்போது பயணிகளின் களைப்பைப் போக்கும் வகையில் 10 புள்ளிகளில் செயல்படும் மசாஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இருக்கைகளில் வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் வெவ்வேறு காலநிலைகளிலும் பயணிகள் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். இருக்கைகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்ம்ரெஸ்ட்டில் தனித்தனி தொடுதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
3. ஃப்ரிட்ஜ் வசதி
பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டி வசதியை காருக்குள்ளேயே வழங்கியிருப்பது டென்ஸா டி9 காரின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக கூறலாம். இதன் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு இடையிலுள்ள சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டில் குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் வசதியுடன் கூடிய பிரத்யேக உணவுப் பொருட்களை கெடாமல் வைத்துக் கொள்ளும் சாதனம் இடம்பெற்றுள்ளது.
பயணத்தின்போது குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ள முடியும். தேவைக்கேற்ப பொருட்களை குளிர்ச்சியாகவோ அல்லது வெப்பமாகவோ வைத்திருக்கும் வசதி இருப்பதால் நீண்ட தூரப் பயணங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களுக்கு இந்த வசதி கூடுதல் பயனளிக்கும்.
4. ஃபாஸ்ட் சார்ஜர்
மின்சார கார்களை வாங்குவதற்கு பலரும் தயங்குவதற்கு முக்கிய காரணம் சார்ஜிங் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்பதாகவும் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் வகையில் டென்ஸா டி9 காரில் அதிவேக டிசி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 சதவீதத்திலிருந்து 97 சதவீதம் வரை வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும், இந்த சார்ஜிங் வேகத்தைப் பெறுவதற்கு அதற்கேற்ற அதிக திறன் கொண்ட சார்ஜிங் உள்கட்டமைப்பு அவசியமாகும். வழக்கமான வீட்டு சார்ஜிங் முறையில் இந்த வேகத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும், 11kW ஏசி சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
5. சிறப்பு தொழில்நுட்பத்துடன் சஸ்பென்ஷன்
சொகுசு கார்களில் பயணிகளுக்கு அதிர்வுகள் குறைந்த பயண அனுபவத்தை வழங்குவது மிகவும் முக்கியம். இதற்காக டென்ஸா டி9 காரில் டிசஸ்-சி (DiSus-C) எனப்படும் நவீன செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் வால்வு டேம்பர்கள் இடம்பெற்றுள்ளன. இவை சாலை நிலைமைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன.
இதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், பயணிக்கும் சாலையின் தன்மைக்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்பு தனது டேம்பிங் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளும். இதன் மூலம் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும் பயணிகளுக்கு மேம்பட்ட சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.
சொகுசு எம்பிவி கார் மார்க்கெட்டில் டொயோட்டா வெல்ஃபையர்தான் நம்பர் 1 மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பேட்டரி திறன், அதிவேக சார்ஜிங், மசாஜ் இருக்கைகள், குளிரூட்டும் பெட்டி மற்றும் நவீன சஸ்பென்ஷன் என பல வித்தியாசமான வசதிகளை டென்ஸா டி9 கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் நிச்சயமாக குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


