இனி டீசலுடன் இதை கலந்து விக்க போறாங்களா! நடுக்கத்தில் வாகன உரிமையாளர்கள்!
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோல் (Petrol) உடன் 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்படுகிறது. இது E20 எரிபொருள் என அழைக்கப்படுகிறது. பெட்ரோல் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவின் மத்திய அரசு பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவின் அந்திய செலாவணி (Foreign Exchange) கையிருப்பு பாதுகாக்கப்படும். அத்துடன் இது இந்தியாவின் உள்நாட்டு விவசாயிகளுக்கும் பயன் அளிக்க கூடியதாக இருக்கும். ஏனெனில் கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்தே எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக டீசல் (Diesel) உடன் ஐசோப்யூட்டனாலை (Isobutanol) கலந்து பயன்படுத்த மத்திய அரசு தற்போது முடிவெடுத்துள்ளது.

அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலப்பது கட்டாயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புது டெல்லியில் (New Delhi) நடைபெற்ற CII மாநாட்டில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் உமா சங்கர் இது குறித்து பேசியுள்ளார். தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்துவது தொடர்பாக பாரத் பெட்ரோலியம் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனாலை போலவே ஐசோப்யூட்டனாலும் கரும்பு போன்றவற்றில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இது ஆல்கஹால் அடிப்படையிலான எரிபொருள் ஆகும். பெட்ரோலில் எத்தனாலை கலப்பது போல, டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்த முடியும். ஆனால் ஆரம்பத்தில் டீசல் உடன் எவ்வளவு சதவீதம் ஐசோப்யூட்டனால் கலக்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.
எனினும் முதலில் 5 அல்லது 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே டீசல் உடன் ஐசோப்யூட்டனால் கலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்பு படிப்படியாக டீசல் உடன் கலக்கப்படும் ஐசோப்யூட்டனாலின் அளவு அதிகரிக்கப்படும். பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவையும் மத்திய அரசு படிப்படியாக அதிகரிப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதாவது இனி வரும் காலங்களில் பல்வேறு வகையான பெட்ரோல்-எத்தனால் கலவையில் எரிபொருள் விற்பனை செய்யப்படும். உதாரணத்திற்கு E22, E25 மற்றும் E30 என பல்வேறு வகையான எரிபொருள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் எந்த எரிபொருள் தங்கள் வாகனத்திற்கு உகந்ததோ, அதை வாகன ஓட்டிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் கார் மற்றும் டூவீலர்கள் போன்ற வாகனங்களில் மட்டுமே பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பஸ்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் போன்ற மற்ற பெரும்பாலான வாகனங்களில் டீசல்தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியாவில் பெட்ரோலை விட டீசல்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே டீசலின் இறக்குமதியும் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்துவதன் மூலமாக, டீசல் இறக்குமதியை வெகுவாக குறைக்க முடியும். இது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் டீசல்-ஐசோப்யூட்டனால் கலவை, வாகனங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்ற அச்சம் தற்போது வாகன ஓட்டிகளுக்கு எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதன் மூலம் இந்த அச்சத்தை போக்குவது மத்திய அரசின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications