மாற்றுத்திறனாளிகளுக்கு இனி 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் FASTag! மத்திய அரசு புதிய விதிகள் அறிவிப்பு!
சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான ஆவணங்கள் மற்றும் ஃபாஸ்டேக் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இந்நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் அடிக்கடி ஃபாஸ்டேக்கை புதுப்பித்தல் செய்ய வேண்டிய சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஃபாஸ்டேக்கின் செல்லுபடிக் காலத்தில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, மாற்றுத்திறனின் சதவீதத்தைப் பொறுத்து மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வேலையை குறைக்க முடியும். இந்த மாற்றம் எப்போது அமலுக்கு வந்தது, யாருக்கெல்லாம் சலுகை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

5 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஃபாஸ்டேக்?
மாற்றுத்திறன் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வழங்கப்படும் கட்டண விலக்கு ஃபாஸ்டேக் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தகுதியுள்ள பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
குறைவான மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு சலுகை?
மாற்றுத்திறன் 40 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்கும் இடையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஃபாஸ்டேக் மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது மாற்றுத்திறன் சதவீதத்தின் அடிப்படையில் செல்லுபடிக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் நடைமுறை சுமையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
யாரெல்லாம் இந்த ஃபாஸ்டேக்கைப் பெறலாம்?
உடல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமையாளர் வகையில் 'Divyangjan' எனப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வருகின்றன. வாகனத்தின் தகுதியும் அரசின் விதிமுறைகளும் முக்கியம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
செல்லத்தக்க மாற்றுத்திறனாளர் சான்றிதழ், தனித்துவ மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை (UDID Card) அல்லது பொருந்தக்கூடிய பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறன் சதவீதத்தின் அடிப்படையில் ஃபாஸ்டேக் வழங்கப்படும். எனவே, விண்ணப்பிக்கும் முன்பு ஆவணங்களில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பது அவசியம். புதுப்பித்தலின்போதும் தகுதிக்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எப்போது முதல் புதிய விதிகள் அமல்?
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த 1ந் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய வழிகாட்டுதல்கள் கடந்த 2ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ஃபாஸ்டேக் புதுப்பித்தல் நடைமுறையை எளிமைப்படுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண விலக்கு வழங்குவதில் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவது இதன் நோக்கமாகுமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதலாக, இந்த மாற்றம் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலத்திற்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தும். இருப்பினும், ஃபாஸ்டேக் வழங்கப்படுவதற்கு வாகனத்தின் பதிவு விவரங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களை தயாராக எடுத்துச் செல்வது தேவையற்ற அலைச்சலை குறைக்கும். எனவே, இந்த நடைமுறை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது அவசியம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய நடைமுறை மாற்றுத்திறனாளிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் விஷயமாக இருக்கும். ஆண்டுதோறும் புதுப்பித்தல் என்பது அவர்களுக்கு அதிக நேர விரயத்தையும், நடைமுறை சிக்கல்களையும் தருவதாக இருந்தது குறிப்பிடத்தக்க விஷயமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications


