நாலரை லட்சத்துக்கு டாடா டியாகோவின் அடிப்படை வேரியன்ட் போதுமான வசதிகளைக் கொண்டுள்ளதா?
குறைவான விலை கொண்ட தொடக்கநிலை ஹேட்ச்பேக் வகை காரான டியாகோவை (Tiago) கடந்த மாதம் அப்டேட் செய்தது டாடா. புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த ஃபேஸ்லிப்ட் மாடல் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. 4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் 2026 டியாகோ ஃபேஸ்லிப்ட் மாடலை வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.
4.69 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலை கொண்ட டியாகோ வேரியன்ட் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா? இதனை வாடிக்கையாளர்கள் வாங்கலாமா? இந்த அடிப்படை வேரியன்ட் என்னென்ன வசதிகளை எல்லாம் கொண்டிருக்கிறது? என்னென்ன வசதிகளை எல்லாம் வாடிக்கையாளர்கள் மிஸ் செய்வார்கள்? ஆகிய தகவல்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் பிளஸ், ப்யூர் பிளஸ் A, கிரியேட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் என ஆறு வேரியன்ட்களாக டியாகோ காரை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். இதில் இங்கே நாம் பார்க்கப்போவது அடிப்படையான ஸ்மார்ட் (Smart) வேரியன்டைப் பற்றி மட்டும் தான்.
இந்த ஸ்மார்ட் வேரியன்டின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலை 4.69 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இதே வேரியன்டின் பெட்ரோல்+CNG பவர்ட்ரெயின் கொண்ட மாடலானது 5.79 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஒன்றாகவே இருக்கும். பவர்ட்ரெயின் மட்டுமே மாறுபடும்.

மேலும், ஸ்மார்ட் வேரியன்டை 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. அது ஸ்மார்ட் வேரியன்டிற்கு அடுத்தபடியாக இருக்கும் ப்யூர் வேரியன்டில் இருந்தே தொடங்குகிறது. இதன் பெட்ரோல் இன்ஜினானது 85 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனையும், CNG எரிபொருளில் இயங்கும் 74 hp பவர் மற்றும் 96 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
நாம் கொடுக்கும் விலைக்கு கீழ்க்காணும் வசதிகளை ஸ்மார்ட் வேரியன்டில் நாம் பெறலாம்.
- 6 ஏர்பேக்குகள்
- பகுதியான டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே
- LED பின்பக்க விளக்குகள்
- ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி
- ரியர் பார்க்கிங் சென்சார்கள்
- இரண்டு ஸ்போர்குகள் கொண்ட டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங் வீல்
- மேனுவல் கிளைமேட் கண்ட்ரோல்ட
- 13 இன்ச் ஸ்டீல் வீல்கள்
- ISOFIX சைல்டு சீட் மவுன்டுகள்
- அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் ரிமைண்டருடன்
- EBD-யுடன் கூடிய ABS
- 12V பவர் சாக்கெட்
ஆகிய வசதிகளை நாம் பெறலாம்.
என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்காது. டிரைவர்ஸ் டிஸ்பிளேக்கு ப்ளூடூத் வசதி, டிரைவர் சீட்டுக்கு உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, பவர் விண்டோக்கள், 2 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், USB சார்ஜிங் போர்ட்கள். இந்த அம்சங்கள் எல்லாம் வேண்டும் என்றால் இரண்டாவது தொடக்கநிலை வேரியன்டான ப்யூர் வேரியன்டை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர்வியூ கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP), க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், TPMS, கனெக்டட் டெயில் லேம்ப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், ரியர் பார்சல் டிரே, ஆகிய வசதிகள் எல்லாம் வேண்டும் என்றால் ப்யூர்+A வேரியன்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
360 டிகிரி கேமரா, பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், LED முகப்பு விளக்குகள், 15 இன்ச் அலாய் வீல்கள், ஒன் டச் டவுன் டிரைவர் விண்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேடு, கனெக்டட் கார் தொழில்நுட்பம், LED ஃபாக் விளக்குகள், 65W USB டைப்-C சார்ஜிங் போர்ட், டூயல் டோன் ஃபினிஷ் ஆகிய அம்சங்கள் எல்லாம் வேண்டும் என்றால் டாப் எண்டான கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ஒரு அடிப்படையான நான்கு சக்கர வாகனம் வேண்டும் என்பவர்கள் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்டைத் தேர்ந்தெடுக்கலாம். இன்னும் கொஞ்சம் பயணத்தை எஞ்சாய் வேண்டும் என்று கூடுதல் வசதியைக் கேட்பவர்கள், உயர்நிலை வேரியன்ட்களைத் தேர்ந்தெடுத்தால் தான் அந்த அம்சங்களை எல்லாம் பெற முடியும். மிகவும் குறைவான விலை என்னும் போது அடிப்படையான வசதிகளை மட்டுமே டியாகோவின் அடிப்படை வேரியன்ட் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications