4.69 லட்சம் ரூபாய் விலையில் டாடா டியாகோ EV போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா?
கடந்த வாரம் தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்றால் அது டியாகோ EV தான். ஸ்மார்ட், ப்யூப் பிளஸ் மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் என மூன்று வேரியன்ட்களாக இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இதில் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்ட் நமக்குப் போதுமான வசதிகளைக் கொண்டிருக்குமா? பார்க்கலம் வாங்க.
பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒரு புதிய கார் அல்லது அப்டேட் குறித்து விளம்பரப்படுத்தும் போது அதன் தொடக்க விலையைக் கூறித் தான் விளம்பரப்படுத்துகின்றன. தொடக்க விலை என்பது மிகவும் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கேற்ற வகையில் வசதிகளும் குறைவாகவே கொடுக்கப்பட்டிருக்கும். நீங்களும் அந்த தொடக்க விலையைப் பார்த்து புதிய கார் ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடலின் அடிப்படையான ஸ்மார்ட் (Smart) வேரியன்டானது 6.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. BaaS திட்டத்துடன் இதனை 4.69 லட்சம் ரூபாய் என்ற விலையில் நாம் வாங்கலாம். BaaS என்றால் பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்தும் வகையிலான ஒரு திட்டமாகும். இதில் பேட்டரியின் பயன்பாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் இந்த BaaS திட்டத்தின் கீழ் பேட்டரி கெட்டுப் போகுமோ என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேட்டரியில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் டாடா நிறுவனமே அதனை சரி செய்து கொடுத்துவிடும் அல்லது மாற்றிக் கொடுத்துவிடும். காரை மட்டும் நீங்கள் வாங்கிவிட்டு, பேட்டரியை டாடாவிடமிருந்து வாடகைக்குப் பெற்று பயன்படுத்துகிறீர்கள் அவ்வளவு தான். டியாகோ EV-யில் பேட்டரியைப் பயன்படுத்துவதற்கு கிமீ-க்கு 2.6 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறது டாடா.

சரி இப்போது டியாகோ EV-யின் ஸ்மார்ட் வேரியன்டிற்கு வருவோம். வேரியன்ட்களைப் பொறுத்தவரை, காரின் உட்புறமும் வெளிப்புறமும் கொடுக்கப்படும் வசதிகளிலேயே மாற்றங்கள் இருக்கும். நாம் கொடுக்கும் 4.69 லட்சம் ரூபாய்க்கு என்னென்ன வசதிகளை டியகோ EV ஸ்மார்ட் வேரியன்டில் டாடா கொடுத்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
புதிய வடிவிலான டேஷ்போர்டு, இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஃபேப்ரிக் சீட்கள், டோர் ஹேண்டில்களில் குரோம் லைன், 14 இன்ச் ஸ்டீல் வீல்கள், 6 ஏர்பேக்குகள், EBD-யுடன் கூடிய ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், (சிட்டி மற்று்ம ஸ்போர்ட்) என இரண்டு டிரைவிங் மோடுகள், மல்டி மோடு ரீஜென் (ரீஜென் செலக்டாருடன்), iRA கனெக்டட் கார் தொழில்நுட்பம், அண்டர் தை சப்போர்ட் கொண்ட சீட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களை டியாகோ EV-யின் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்ட் கொண்டிருக்கும்.
என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்காது. அதாவது டியாகோ EV-யின் மற்ற வேரியன்ட்களில் கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் ஸ்மார்ட் வேரியன்டில் இல்லாத முக்கிய அம்சங்கள். டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள், பவர் விண்டோக்கள், டைப்-C சார்ஜிங் போர்ட்கள், LED DRLகள், LED முகப்பு விளக்குகள், 6 வே அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், க்ரூஸ் கண்ட்ரோல், ESP-யுடன் கூடிய ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை நாம் மிஸ் செய்வோம்.
பவர்ட்ரெயினில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. டியாகோ EV-யில் 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி பேக்குகள் மற்றும் அதற்கேற்ற வகையில் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகளை டாடா கொடுத்திருக்கிறது. ஸ்மார்ட் வேரியன்டை வாங்கினால் 19.2 kWh பேட்டரி பேக் தேர்வு மட்டுமே இருக்கும். பெரிய பேட்டரி பேக்கை தேர்வு செய்ய முடியாது.
இந்த சிறிய பேட்டரி பேக்குடன் 60 hp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்படுகிறது. பெரிய பேட்டரி பேக்குடன் இன்னும் சற்று கூடுதலாக 74 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்படுகிறது.
19.2 kWh பேட்டரி பேக் மற்றும் அதற்குரிய எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் மூலம் 226 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை டியாகோ EV ஸ்மார்ட் வேரியன்டில் நாம் பெறலாம். சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை விட நிஜ உலகில் தினசரி பயன்படுத்தும் போது குறைவான ரேஞ்சே நமக்குக் கிடைக்கும். அந்த வகையில், டியாகோ EV ஸ்மார்ட் வேரியன்டில் 140 கிமீ முதல் 170 கிமீ வரையிலான ரேஞ்சையே நாம் எதிர்பார்க்க முடியும்.
24 kWh பேட்டரி பேக் தேர்வானது கூடுதல் பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாக் செட்டப்பைப் பெற்றிருப்பதுடன் 285 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. நிஜ உலகப் பயன்பாட்டில் 180 கிமீ முதல் 220 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை இந்த பெரிய பேட்டரி பேக்கில் எதிர்பார்க்க முடியும். ஆனால் அடிப்படை வேரியன்டில் அது கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டியாகோ EV-யின் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்டை வாங்கச் செல்லும் முன் இதனையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டீர்கள் என்றால் அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டியதில்லை. டியாகோ EV மட்டுமல்ல, அனைத்து எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் கார்களுக்கும் இது பொருந்தும். குறைவான விலையை நிறுவனங்கள் சொல்வது போல் ஒரு கார் கொண்டுருக்கும். ஆனால் அது நாம் எதிர்பார்க்கும் அல்லது விளப்பரப்படுத்தப்படும் அனைத்து வசதிகளையும் கண்டிப்பாகக் கொண்டிருக்காது.


Click it and Unblock the Notifications