15 ஆண்டு பழைய மாருதி ரிட்ஸ்... ஓட்டிய சில நிமிடங்களில் மனதை மாற்றிய எஞ்சின்! இந்தியாவின் 'தேசிய டீசல் எஞ்சின்'

சில கார்களை நாம் பார்த்து ரசிப்போம்; சில கார்களை ஓட்டி ரசிப்போம். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பழைய காரை மீண்டும் ஓட்டும்போது, அது நம்முடைய பழைய நினைவுகளையே மீட்டுக் கொடுத்தால்? சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றபோது, அப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு பழைய மாருதி ரிட்ஸ்.

எப்போதுமே சொந்த ஊருக்கு காரில் செல்வதுதான் வழக்கம். இந்த முறை குடும்பத்தினர் யாரும் உடன் வராததால் ரயிலில் சென்றேன். ஊரில் உள்ள வீட்டுக்குச் சென்று சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து நின்றது. அதில் வந்த டிரைவர், நண்பரின் பெயரை சொல்லி, காரை கொடுத்து விட்டு வரச்சொன்னார் என்று கூறினார். காரில் வராததை அறிந்த அந்த நெருங்கிய நண்பர் ஒருவர் தனது மாருதி ரிட்ஸ் காரை ஓட்டுனர் மூலம் அனுப்பி வைத்தார். நான் மறுத்தும் ஊருக்குச் செல்லும் வரை வைத்துக்கொள்ளச் சொன்னார்.

Fiat Engine

அந்த கார் 15 ஆண்டுகள் பழமையானதாக பழமையானது. ஹெட்லைட் ஹவுசிங்கில் தெரிந்த வயதும், உடல் முழுவதும் இருந்த கீறல்களும் அதற்குச் சாட்சியாக இருந்தன. இருந்தாலும், கையில் இருக்கட்டுமே என்று சாவியை வாங்கி வைத்துக்கொண்டேன்.

அன்று இரவு விசேஷம் ஒன்றிற்கு செல்வதற்காக அந்த காரை ஸ்டார்ட் செய்தேன். இது ஸ்டார்ட் ஆகுமா, வழியில் ஏதேனும் பிரச்னை கொடுக்குமா என்ற பல்வேறு ஐயங்களுடன்தான் காரை எடுத்தேன். ஆனால், சிறிது தூரம் சென்றவுடனே அந்த தயக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

Fiat Engine

காரின் தோற்றம் வயதை வெளிப்படையாக காட்டினாலும், அதன் செயல்திறனும் குறிப்பாக டார்க்கும் வேறு கதையைச் சொன்னது. படையப்பாவில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் சொல்வது போல, "வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்ன விட்டு போகல" என்று சொல்ல வைத்தது அந்த கார். குறிப்பாக 1,500 ஆர்பிஎம் தாண்டியதும், வயதை மறந்து தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினின் சீற்றத்தை காட்டத் தொடங்கியது.

'ஓ இது அந்த 1.3 டீசல்தானே?' என்ற எண்ணம் உடனே வந்தது. எரிபொருள் நிரப்புவதற்காக நண்பரிடம் கேட்டபோது, அவர் டீசல்தான் என்று உறுதி செய்தார். தற்போது பெரும்பாலும் பெட்ரோல் கார்களையே பயன்படுத்தி வரும் நிலையில், அந்த பழைய டீசல் காரை ஓட்டிய அனுபவம் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து, ஓட்டி ரசித்த கார்களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.

Also Read

ஆம். என் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது, அந்த காரில் இருந்த ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான். ஒரு காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான டீசல் கார்களில் உயிர்கொடுத்த அந்த எஞ்சின் மீண்டும் ஓட்டும்போது கிடைத்த அனுபவம் அந்த கார் குறித்த அத்துனை பிம்பங்களையும் மாற்றியது. செயல்திறன், மைலேஜ், நம்பகத்தன்மை என பல அம்சங்களிலும் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்த இந்த சிறிய எஞ்சின், ஒரு காலத்தில் இந்தியாவின் 'தேசிய டீசல் எஞ்சின்' என்று அழைக்கப்பட்டது.

Maruti Swift

இந்த எஞ்சின் ஒரு கார் நிறுவனத்தில் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. மாருதி சுஸுகி, ஃபியட், டாடா மோட்டார்ஸ், செவர்லே மற்றும் பிரீமியர் என பல நிறுவனங்களின் மாடல்களில் இது இடம்பெற்றது. மொத்தமாக இந்தியாவில் 24 கார் மாடல்களுக்கு இந்த எஞ்சின் உயிர்கொடுத்தது.

மாருதி சுஸுகி கார்களில் இது DDiS என்ற பெயரில் பிரபலமானது. ஸ்விஃப்ட், டிசையர், ரிட்ஸ், SX4, எர்டிகா, சியாஸ், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, S-Cross உள்ளிட்ட பல மாடல்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. சிறிய ஹேட்ச்பேக் முதல் ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மற்றும் எஸ்யூவி வரை பல்வேறு வகை கார்களில் இது தனது திறனை நிரூபித்தது.

Tata Zest

ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ, கிராண்டே புன்ட்டோ, புன்ட்டோ ஈவோ, லீனியா, 500, பாலியோ ஸ்டைல், அவென்ச்சுரா, அர்பன் க்ராஸ் போன்ற மாடல்களிலும் இந்த எஞ்சின் இடம்பெற்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்டிகா விஸ்டா, மான்ஸா, போல்ட், ஸெஸ்ட் போன்ற கார்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதனால் பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களை சென்றடைந்தது.

செவர்லே நிறுவனத்தின் பீட், செயில், செயில் யுவா, என்ஜாய் உள்ளிட்ட மாடல்களிலும் இதே எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. பிரீமியர் ரியோ எஸ்யூவியிலும் இது இடம்பெற்றது. பெயர்கள் மற்றும் எஞ்சின் டியூனிங் மாறினாலும், அடிப்படையில் ஒரே எஞ்சின் பல நிறுவனங்களின் வெவ்வேறு கார்களில் பயணித்தது என்பது இதன் மிகப்பெரிய தனிச்சிறப்பாகும்.

Also Read

இன்று ஒரு எஞ்சின் பல நிறுவனங்களின் கார்களில் பயன்படுத்தப்படுவது ஆச்சரியமான விஷயமாக இருக்காது. ஆனால் 2000ம் ஆண்டு வாக்கில், குறிப்பாக இந்தியாவின் சிறிய கார் சந்தையில், இப்படியொரு பரவலான பயன்பாடு மிகப்பெரிய விஷயமாகவே கூற முடியும். மிக அடக்கமான வடிவம், குறைவான எடை, நல்ல டார்க், சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் பல்வேறு கார்களில் பொருத்தக்கூடிய தன்மை ஆகியவை இந்த எஞ்சின் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

இந்த 1.3 லிட்டர் எஞ்சின் நான்கு சிலிண்டர்களுடன் கூடிய 1,248 சிசி காமன் ரயில் டர்போ டீசல் எஞ்சினாக உருவாக்கப்பட்டு இருந்தது. ஃபியட் நிறுவனத்தின் Multijet தொழில்நுப்டம் ஒரு நவீன Common Rail Direct Injection (CRDi) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு எரிபொருள் சுழற்சியில் (Combustion cycle) டீசலை ஒரே நேரத்திற்கு பதிலாக, பலமுறை பிரித்து செலுத்துகிறது.

இதனால் குறைந்த எரிபொருள் நுகர்வு, அதிக ஆற்றல், குறைவான சப்தம் மற்றும் குறைந்த புகை உமிழ்வு பெறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் சிறிய டீசல் எஞ்சினுக்கு இது மிகவும் நவீனமான தொழில்நுட்பமாக இருந்தது. பின்னர் வந்த பல காமன் ரயில் டீசல் எஞ்சின்களின் வளர்ச்சியிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்தன.

காமன் ரயில் டீசல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஃபியட் நிறுவனத்துக்கு முக்கியமான பங்கு இருந்தது. அதன் Unijet தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் Multijet உருவாக்கப்பட்டது. ஃபியட் மற்றும் பாஷ் உள்ளிட்ட அதன் தொழில்நுட்ப கூட்டணி நிறுவனங்கள் உருவாக்கிய இந்த புதிய தொழில்நுட்பம், சிறிய டீசல் எஞ்சினில் செயல்திறன் மற்றும் சிக்கனத்தை ஒரே நேரத்தில் வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

Maruti Dzire

கடந்த 2007ம் ஆண்டு இந்த மல்டிஜெட் டீசல் எஞ்சின் இந்தியாவில் அறிமுகமானது. முதலாவதாக மாருதி ஸ்விஃப்ட் காரில் 1.3 லிட்டர் இந்த டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ஸ்விஃப்ட் டீசல் வழங்கிய 75 பிஎஸ் பவரும், 190 என்எம் டார்க்கும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக 2,000 ஆர்பிஎம் பகுதியில் கிடைத்த 190 என்எம் டார்க், அன்றைய சிறிய கார் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த அம்சமாக இருந்தது. குறைந்த வேகத்திலிருந்து கார் சுறுசுறுப்பாக நகர்வதும், எளிதாக முந்திச் செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கியதுடன், நல்ல மைலேஜும் இந்த எஞ்சினை வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமாக்கியது.

இந்தியாவில் இத்தகைய நவீன டீசல் எஞ்சினை பெரிய அளவில் தயாரிப்பதற்காக சுஸுகி மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்டது. ஹரியானா மாநிலம், மானேசரில் புதிய எஞ்சின் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக சுமார் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான முதலீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் எஞ்சின்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தேவை அதிகரித்தால் உற்பத்தியை ஆண்டுக்கு மூன்று லட்சம் எஞ்சின்கள் வரை உயர்த்தும் வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டது. அதைவிட சுவாரஸ்யமான விஷயம், ஆரம்பத்திலேயே சுமார் 75 சதவீத உள்நாட்டு பாகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதில், பாஷ் மற்றும் இந்திய சப்ளையர்கள் இணைந்து இந்த எஞ்சின் பாகங்களை வழங்கினர்.

மாருதி சுஸுகி மட்டும் இந்த எஞ்சினைப் பயன்படுத்தவில்லை. ஃபியட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கூட்டணியின் மூலம் மகாராஷ்டிராவின் ரஞ்சன்கான் ஆலையிலும் இந்த எஞ்சின் தயாரிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் அதன் உற்பத்தி அளவு மேலும் அதிகரித்தது. டாடா கார்களில் இது Quadrajet என்ற பெயரில் வாடிக்கையாளர்களை சென்றடைந்தது.

Also Read

ஒரே எஞ்சின் பல நிறுவனங்களின் கார்களில் பயன்படுத்தப்பட்டதால், அதன் உற்பத்தி அளவும் மிகப்பெரியதாக மாறியது. ஃபியட் மற்றும் டாடா இணைந்த ஆலையில் மட்டும் இந்த 1.3 லிட்டர் எஞ்சின் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி வரலாற்றில் இது முக்கியமான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த எஞ்சினின் இன்னொரு சிறப்பு அதன் அடக்கமான வடிவமைப்பாக இருந்தது. சிறிய அளவிலான கார்களின் எஞ்சின் அறையில் பொருத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டதால், ஹேட்ச்பேக் முதல் செடான், காம்பேக்ட் எஸ்யூவி, எம்பிவி வரை பல்வேறு உடல்கூடு வகைகளில் இதைப் பயன்படுத்த முடிந்தது.

அதன் செயல்திறனும் ஒவ்வொரு காரிலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது காரின் எடை, கியர்பாக்ஸ் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எஞ்சினை வெவ்வேறு விதமாக டியூனிங் செய்துகொண்டன. இதனால் ஒரே 1.3 லிட்டர் எஞ்சின் இருந்தாலும், ஸ்விஃப்ட், ரிட்ஸ், டிசையர், எர்டிகா போன்ற கார்களில் வித்தியாசமான ஓட்டுதல் அனுபவம் கிடைத்தது.

Also Read

ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் அதன் பயணமும் முடிவை நோக்கி நகர்ந்தது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் BS6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருந்த நிலையில், பழைய டீசல் எஞ்சின்களை புதிய விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவது மிகப்பெரிய முதலீட்டு விஷயமாக இருந்தது. ஆனால், அதற்கு ஏற்ப சந்தையில் தேவை இல்லை. இதுவே அதன் அடுத்த கட்டத்தை சிக்கலாக்கியது. கடுமையான மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த டீசல் எஞ்சின் உற்பத்தியை கைவிட முடிவு செய்து ஃபியட் நிறுவனத்துடன் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.

இதனால் 1.3 Multijet-ஐ புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான வணிகத் தேவை குறைந்தது. இதன் முடிவாக இந்தியாவில் 1.3 Multijet எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜனவரியில் ரஞ்சன்கான் ஆலையில் கடைசி BS4 1.3 லிட்டர் Multijet எஞ்சின் தயாரிக்கப்பட்டது. அதனுடன் இந்தியாவில் இந்த சிறிய டீசல் எஞ்சினின் நீண்ட பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் கதை அங்கே முடியவில்லை.

இன்றும் இந்தியாவின் பல சாலைகளில் ஸ்விஃப்ட், டிசையர், ரிட்ஸ், புன்ட்டோ, லீனியா, விஸ்டா, ஸெஸ்ட், எர்டிகா, பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பழைய கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் எஞ்சின் அறைக்குள் இன்னும் அதே 1.3 லிட்டர் டீசல் உயிருடன் இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தாக்கம் தொடர்கிறது.

சமீபத்தில் அந்த 15 ஆண்டுகள் பழமையான மாருதி ரிட்ஸை ஓட்டியபோது, அதன் பழைய ஹெட்லைட், கீறல்கள், வயதான உடல் என எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. ஆக்சிலரேட்டரை அழுத்தியபோது கிடைத்த டார்க்தான் முதலில் மனதில் பதிந்தது. அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நல்ல எஞ்சினியரிங் உருவாக்கிய இதுபோன்ற தயாரிப்புகளுக்கு வயது ஒரு தடையல்ல.

அதனால்தான் ஒரு பழைய மாருதி ரிட்ஸை ஓட்டிய அந்த இரவு, அது வெறும் பழைய காரை ஓட்டிய அனுபவமாக இருக்கவில்லை. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை மீண்டும் அனுபவித்த தருணமாக இருந்தது. ஒருகாலத்தில் இந்தியாவின் தேசிய டீசல் எஞ்சின் என்று அழைக்கப்பட்ட அந்த 1.3 Multijet, இன்னும் பல கார்களின் இதயத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.

Article Published On: Saturday, October 3, 2026, 12:51 [IST]
English summary
Driving experience 15 year old maruti ritz fiat 1 3 multijet national diesel engine india
மேலும்... #maruti suzuki #tata motors #fiat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X