டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது இனி அவ்வளவு ஈஸி இல்லை... 75% மார்க் கட்டாயமாக்க திட்டம்!
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான மாற்றமாக, பழகுநர் உரிமம் (Learner's Licence) பெறுவதற்கான பாதுகாப்பான வாகன ஓட்டுதல் பயிற்சி மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்பே சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த அடிப்படை அறிவை உறுதிப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின்படி, பாதுகாப்பான வாகனத்தை ஓட்டுதல் தொடர்பான பயிற்சியை முடித்து, அதற்கான மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 75 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதனால், பயிற்சியில் இடம்பெறும் பாதுகாப்பு விதிகளை விண்ணப்பதாரர்கள் கூடுதல் கவனத்துடன் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும், பாதுகாப்பான வாகன ஓட்டுதல் குறித்த ஆன்லைன் பயிற்சியானது குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை முடிப்பதற்கான கால அவகாசத்தை ஏழு நாட்களில் இருந்து 15 நாட்களாக நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்ணப்பதாரர்கள் பயிற்சியை முடித்து மதிப்பீட்டு பரீட்சையில் பங்கேற்க கூடுதல் அவகாசம் கிடைக்கும்.
இந்தப் பயிற்சியில் சாலை அடையாளங்கள், போக்குவரத்து விதிகள், பாதுகாப்பான வாகன இயக்கம் மற்றும் விபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறுவது மட்டுமின்றி, சாலையில் பொறுப்புடன் செயல்படுவதற்கான அறிவையும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த மாற்றங்களின் நோக்கமாக இருக்கும்.
ஓட்டுனர் உரிம அட்டையிலும் புதிய மாற்றங்கள்
பழகுநர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளுடன், ஓட்டுனர் உரிம அட்டையின் வடிவமைப்பிலும் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் உரிம அட்டைகளில் வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் பின்னணி வண்ணங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உரிம அட்டைகள் லேமினேட் செய்யப்பட்ட அட்டையாகவோ அல்லது பிவிசி அட்டையாகவோ வழங்கப்படும்.
ஓட்டுனர் உரிம அட்டையில் உள்ள தகவல்களைப் படிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, கியூஆர் குறியீடு மூலம் தகவல்களைப் படிக்கும் வசதியை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. உரிமம் பெற்றவரின் குடியுரிமை, மருத்துவ விபரங்கள், ரத்த வகை, உறுப்புத் தானம் தொடர்பான விருப்பம் மற்றும் அவசரகாலத் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
நடைமுறைகள் எளிமையாகுமா?
ஓட்டுனர் உரிமத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகப் புதிய விண்ணப்பப் படிவத்தை அறிமுகப்படுத்தவும், குறிப்பிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில் இணையவழியில் பெறப்படும் சில சேவைகளுக்கும் கட்டண விலக்கு வழங்கப்படலாம்.
முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்றும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை நிராகரிக்கும் பட்சத்தில் அதற்கான காரணங்களைத் தெரிவிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், உரிமம் தொடர்பான சில சேவைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க உதவும்.
மருத்துவ விவரங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம்
ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டிய மருத்துவ விவரங்களையும் விரிவுபடுத்த முன்மொழியப்பட்டுள்ளது. மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, உடலில் பொருத்தப்பட்டுள்ள மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை விண்ணப்பதாரர்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும். ரத்த வகை மற்றும் அவசரகாலத் தொடர்பு எண் போன்ற விவரங்களையும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
வலிப்பு நோய் தொடர்பான மருத்துவ விவரங்களுக்கும் வரைவு விதிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சில மருத்துவ நிலைகள் மற்றும் சமீபத்திய வலிப்பு நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள், ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவத் தகுதியைத் தீர்மானிப்பதில் கவனத்தில் கொள்ளப்படும். இருப்பினும், இந்த விதிகளின் இறுதி வடிவம் மற்றும் அவை நடைமுறைக்கு வரும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே உறுதியாக தெரிய வரும்.
எப்போது அமலுக்கு வரும்?
இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது வரைவு அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகள், ஆட்சேபனைகள் ஆகியவற்றை பரிசீலித்த பின்னர் மத்திய அரசு இறுதி அறிவிப்பை வெளியிடும். அதன்பிறகே எந்தெந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அவை எப்போது அமலுக்கு வரும் என்பது தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஓட்டுனர் உரிமம் தொடர்பான மத்திய அரசின் முன்மொழிவு அம்சங்கள் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது, பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பது போன்ற நடைமுறைப் பழக்கங்களும் ஓட்டுனர்களுக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.
எனவே, கோட்பாட்டுப் பயிற்சியுடன் தரமான நடைமுறை ஓட்டுனர் பயிற்சியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உரிமம் பெறும் நடைமுறையைச் சிக்கலாக்குவதைவிட, சாலையில் பொறுப்புடன் வாகனம் ஓட்டத் தகுதியானவர்களை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications


