E20 குறித்து இன்னொரு உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு!
நாட்டில் எத்தனை வாகனங்கள் இ20 பெட்ரோல் வாகனங்களுக்கு இணக்கமாக தயாரிக்கப்பட்டவை என்று மதிப்பீடு எதுவும் செய்வில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இ20 பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரும்போது, அரசு சார்பில் எந்த ஒரு முழுமையான மதிப்பீடும் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பதில் அளித்துள்ளார். அதில், நாட்டில் எத்தனை வாகனங்கள் இ20 பெட்ரோலுக்கு இணக்கமானவை என்பது குறித்து மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் இதுவரை எந்த மதிப்பீடும் செய்யவில்லை. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் எந்த தரவுகளும் தற்போது இல்லை என்று," அவர் தெரிவித்துள்ளார்.

இ20 இணக்கமான வாகனங்கள் குறித்து மதிப்பீடு செய்யாவிட்டாலும், எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் குறித்து பல்வேறு அறிவியல்பூர்வமான ஆய்வுகள் செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறி இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் நிதி ஆயோக், அராய் அமைப்பு(ARAI), வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (SIAM), இந்திய பெட்ரோலிய தொழில்நுட்பக் கழகம் (IIP), எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இ20 பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் எவ்வளவு வாகனங்கள் இதற்கு இணக்கமானவை என்பது குறித்த மதிப்பீடு செய்யவில்லை என்பதும், இதுகுறித்த தரவுகள் இல்லை என்று மத்திய அரசு கூறி இருப்பது வாகன உரிமையாளர்கள் மத்தியில் மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
அண்மையில், இ20 பெட்ரோலுக்கு இணக்கமாக தயாரிக்கப்படாத வாகனங்களில் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து, தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவலும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் பிஎஸ்6 ஃபேஸ்-2 வாகனங்கள் இ20 பெட்ரோலுக்கு இணக்கமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் வந்த வாகனங்கள் இ20 பெட்ரோலுக்கு இணக்கமில்லாததாக இருக்கின்றன. இந்த நிலையில், இ20 பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வந்ததுடன், சாதாரண பெட்ரோலின் விலை அதிகமாக இருப்பதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இ20 பெட்ரோலால் பழைய வாகனங்களின் எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்புகளில் பழுது ஏற்படுவதற்கும், மைலேஜ் குறையும் என்ற கவலை வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications