எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் E20 திட்டத்தின் இலக்கை நாடு எட்டியுள்ள நிலையில், அடுத்து E85 மற்றும் 100 சதவீத எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் (Flex-Fuel) வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி மாநாட்டில் பங்கேற்ற பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் எத்தனால் உற்பத்தித் திறன் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. இதனால் உபரியாக உள்ள எத்தனாலை முறையாகப் பயன்படுத்த E20 பெட்ரோலை தாண்டி, அதிக அளவில் எத்தனால் கலந்து இயங்கும் வாகனங்களை சாலைக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, பெட்ரோலில் 20 சதவீதத்திற்கும் அதிக அளவு எத்தனால் கலப்பு அல்லது முழுமையாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்கு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்களானது சாதாரண பெட்ரோல் அல்லது எத்தனால் கலந்த எரிபொருள் என எதில் வேண்டுமானாலும் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்படுகின்றன. அதாவது 20 சதவீதத்தில் இருந்து 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த எரிபொருளையோ அல்லது 100 சதவீத தூய்மையான எத்தனாலையோ ஒரே ஃபியூயல் டேங்கில் ஊற்றிப் பயன்படுத்த முடியும்.
வாகனத்தின் எரிபொருள் செலுத்தும் அமைப்பு மற்றும் ECU மென்பொருள் ஆகியவை எரிபொருளில் உள்ள எத்தனால் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்ப எஞ்சின் செயல்பாட்டைத் தானாகவே மாற்றியமைத்துக் கொள்ளும். இதன் மூலம் பெட்ரோல் பயன்பாடும், அதனை சார்ந்து இருக்கும் போக்கும் பெருமளவில் குறையும்.
இந்தியாவின் முன்னணி கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் இருசக்கர வாகனங்களை சந்தைக்குக் கொண்டுவர ஏற்கனவே தயாராகி வருகின்றன. இதற்கேற்ப எரிபொருள் நிலையங்களிலும் தூய்மையான எத்தனால் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்கா- ஈரான் போர் உள்ளிட்ட அரசியல் சவால்களுக்கு மத்தியில், உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்துவது நாட்டிற்குப் பொருளாதார ரீதியாகவும் பெரும் பயனளிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் மற்றும் எஞ்சின் ஆயுள் பாதிக்கப்படுவதாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த தருண் கபூர், அவை தவறான தகவல்கள் என்றும் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு பெட்ரோல் வாகனங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், டீசல் வாகனங்களிலும் உயிரி எரிபொருளைக் கலப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஐசோபியூட்டனால் (Isobutanol) கலப்பு தொடர்பான சோதனைகள் வெற்றிபெறும்போது, டீசல் வாகன சந்தையிலும் பெரிய அளவில் மாற்று எரிபொருள் பயன்பாடு சாத்தியமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்கள் பரவலாக அறிமுகமாகும் போது, பெட்ரோலை விட குறைந்த விலையில் கிடைக்கும் எத்தனாலை மக்கள் பயன்படுத்த முடியும். இது வாகனப் பராமரிப்புச் செலவையும், மாசு உமிழ்வையும் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications


