400% உயர்ந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் விற்பனை.. ஷோரூம்ல கூட்டம் அள்ளுது!
இந்தியாவில் முன்பை விட எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2025ம் நிதியாண்டில் (FY2025) இந்தியாவில் 1,08,873 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருந்தன. இது 2026ம் நிதியாண்டில் (FY2026) 83.63% அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மே 31 வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் 1,99,923 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இது ஒட்டுமொத்த கார் விற்பனையில் 4.25% ஆகும்.
முன்னணி எலெக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனங்கள்: வழக்கம் போல கடந்த நிதியாண்டிலும் டாடா மோட்டார்ஸே அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அந்த நிறுவனம் சுமார் 78,811 எலெக்ட்ரிக் கார்களை இந்தக் குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 35.90% விற்பனை வளர்ச்சியாகும்.

இந்தியாவில் தற்போது அனைத்து வகையான கார் வாடிக்கையாளர்களும் வாங்கும் வகையில் பல்வேறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். டியாகோ இவி, டிகோர் இவி, பன்ச் இவி, நெக்ஸான் இவி, கர்வ் இவி மற்றும் ஹேரியர் இவி ஆகிய ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்களை தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். விரைவில் சியரா இவி மற்றும் சஃபாரி இவி மாடல்களையும் இந்தியாவில் வெளியிடவுள்ளது.
டாடா மோட்டார்ஸைத் தொடர்ந்து, எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்தரா ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. எம்ஜி மோட்டார் நிறுவனமானது 2025ம் நிதியாண்டை விட 73.67% அதிகமாக 53,089 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார். ZS இவி, காமெட் இவி மற்றும் விண்ட்ஸர் இவி ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம் தான் மிக அதிகமாக 407% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அட உண்மையாங்க. 2025ம் நிதியாண்டில் வெறும் 8,426 எலெக்ட்ரிக் கார்களையே விற்பனை செய்திருந்தது மஹிந்திரா. ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த அளவு 42,721 ஆக உயர்ந்துள்ளது. 2025ம் நிதியாண்டின் இறுதியில் தான் புதிய மேம்பட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது மஹிந்திரா. எனவே தான் விற்பனை உயர்வு அதிகமாக இருக்கிறது.
தற்போது BE 6, XEV 9e மற்றும் XEV 9S ஆகிய மூன்று மேம்பட்ட மாடர்ன் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும், XUV 400 மற்றும் XUV 3XO EV ஆகிய இரண்டு ட்ரெடிஷனலான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த மூன்று முன்னணி நிறுவனங்களைத் தவிர்த்து, ஹூண்டாய், BYD மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
இந்த மூன்று நிறுவனங்களும் முறையே 5,885, 5,361 மற்றும் 3,738 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே கடந்த நிதியாண்டு விற்பனை செய்துள்ளன. அனைவரும் ஆச்சரியப்படும் விதமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ கடந்த நிதியாண்டு கிட்டத்தட்ட கியாவுக்கு இணையாக 3,537 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. சொகுசு கார்களிலேயே அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வது பிஎம்டபிள்யூ தான்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி சமீபத்தில் தான் புதிய எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. பிப்ரவரி மாதமே e-விட்டாரா என்ற புதிய எலெக்ட்ரிக் காரினை வெளியிட்டது அந்நிறுவனம். மார்ச் மாதம் வரை இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை 1,416 யூனிட்டுகள் என்ற அளவிற்கு விற்பனை செய்துள்ளது மாருதி. நடப்பு நிதியாண்டின் அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை மாருதி விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பை விட அதிகளவிலான வாடிக்கையாளர்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், முன்பை போல இல்லாமல் சந்தையில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களும் பல்வேறு வகையிலும் மேம்பட்டிருக்கின்றன. வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கவே செய்யும். மாருதி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் வரவு எலெக்ட்ரிக் கார் சந்தையை மேலும் வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








