இப்போ டாடா மற்றும் மஹிந்திரா தான் டாப்.. வெளிநாட்டு நிறுவனங்களால இனி பக்கத்துல கூட வர முடியாது!
இரண்டாவது முறையாக ஒரே மாதத்தில் அதிகபட்ச எலெக்ட்ரிக் கார் விற்பனையைப் பதிவு செய்துள்ளது இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தை. மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் 85% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது இந்திய எலெக்ட்ரிக் வாகன விற்பனை சந்தை. அதனை அப்படியே கடந்த ஏப்ரல் மாதமும் தொடர்ந்திருக்கிறது.
17 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக 23,163 எலெக்ட்ரிக் கார்களை கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்திருக்கிறார்கள். மார்ச் 2026-க்குப் பிறது இது தான் ஒரே மாதம் அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் அளவாகும். 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 73% அதிகமாகும். 2025 ஏப்ரலில் 13,409 எலெக்ட்ரிக் கார்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகியிருந்தன. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

வழக்கம்போல் இந்த முறையும் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் தான் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8,506 எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இது 77% விற்பனை வளர்ச்சியாகும். 2025 ஏப்ரலில் 4,816 எலெக்ட்ரிக் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையுடன் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் 36% விற்பனை பங்குகளைக் கொண்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.
இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக மஹிந்திரா நீடிக்கிறது. இதுவரை JSW எம்ஜி மோட்டார் நிறுவனம் தான் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மஹிந்திரா அந்த இடத்தைப் பிடித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 5,394 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது மஹிந்திரா.

கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 63% விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு ஏப்ரலில் 3,301 எலெக்ட்ரிக் கார்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த ஏப்ரல் விற்பனையுடன் 24% சந்தைப் பங்குகளைப் பெற்றிருக்கிறது மஹிந்திரா. தற்போது BE 6, XEV 9e, XEV 9S, XUV 400 மற்றும் XUV 3XO ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் JSW எம்ஜி மோட்டார் நிறுவனமானது ஏப்ரலில் 4,978 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இது 32% விற்பனை உயர்வாகும். இந்தியாவில் காமெட் EV, ZS EV மற்றும் விண்ட்ஸர் EV ஆகிய மூன்று மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது.
விண்ட்ஸர் EV-க்குப் பிறகு குறைவான விலையில் வேறெந்த எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவில்லை. முன்னணியில் இருக்கும் மற்ற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஆண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விண்ட்ஸர் EV-யே தற்போது எம்ஜி மோட்டாருக்கு அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வருகிறது.
நான்காம் இடத்தில் வின்ஃபாஸ்ட்டும், ஐந்தாம் இடத்தில் மாருதி சுஸூகியும் உள்ளன. வின்ஃபாஸ்ட் நிறுவனமானது கடந்த ஏப்ரல் மாதம் 1,231 எலெக்ட்ரிக் கார்களையும், மாருதி நிறுவனமானது 1,222 யூனிட்டுகள் e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியையும் விற்பனை செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களுமே கடந்த ஏப்ரல் மாதம் தான் முதல் முறையாக ஒரே மாதத்தில் 1,000 யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லைக் கடந்திருக்கின்றன.
கடந்த ஆண்டிலிருந்தே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் வின்ஃபாஸ்ட் இப்போது தான் முதல் முறையாக அதிகளவிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஏற்கனவே VF 6 மற்றும் VF 7 ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த மாதம் MPV 7 என்ற எலெக்ட்ரிக் எம்பிவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மாருதி நிறுவனத்தின் e விட்டாராவிற்கு நல்ல டிமாண்டு இருந்தாலும் இந்திய விற்பனைக்கென 2,000 கார்களையே அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. e விட்டாரா மாடலை இந்தியாவில் இருந்து மாருதி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. 2026ம் நிதியாண்டில் 25,549 e விட்டாரா கார்களை வெளிநாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், இது தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐந்தாவது கார் மாடலாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் ஹூண்டாய், BYD இந்தியா மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனமானது அயானிக் 5 மற்றும் கிரெட்டா எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்களுக்கு பெரிய அளவில் டிமாண்டு இல்லை என்றே தெரிகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 31% குறைவாக 512 யூனிட்டுகளையே கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்துள்ளது ஹூண்டாய்.
அதனைத் தொடர்ந்து BYD நிறுவனமானது 467 யூனிட்டுகளையும், கியா நிறுவனமானது 341 எலெக்ட்ரிக் கார்களையும் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனை செய்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து BMW, மெர்சிடீஸ் பென்ஸ், டெஸ்லா மற்றும் வால்வோ உள்ளிட்ட சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களே உள்ளன. இதில் BMW மற்றும் மெர்சிடீஸைத் தொடர்ந்து மற்ற அனைத்த நிறுவனங்களும் 50 யூனிட்டுகளுக்கும் கீழாகவே கடந்த ஏப்ரல் மாதம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்தாண்டுடன் ஒப்பிடும் அதிகளவிலேயே எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதைவிட வேகமாகவே எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா, டாடா, மாருதி, டொயோட்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications