மின்சார கார் விற்பனையில் டாடா முதலிடம்: கட்டக்கடைசிக்கு தள்ளப்பட்ட மாருதி!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, E20 பெட்ரோல் மீதான அச்சம் காரணமாக, புதிய கார் வாங்குவோர் தங்களது கவனத்தை மின்சார கார் சந்தையின் பக்கம் திருப்பி உள்ளனர். இதனால், இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார கார்கள் புதிய மாதாந்திர சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் வாகன் தளத்தின் அடிப்படையிலான சில்லறை விற்பனஐ பதிவு தரவுகளின்படி, செப்டம்பரில் மொத்தம் 35,995 மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான 18,520 கார்கள் விற்பனை பதிவான நிலையில், கடந்த மாதம் 94 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

டாடா முதலிடம்
இந்தப் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நிறுவனம் செப்டம்பரில் 14,769 மின்சார கார்களைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மொத்த மின்சார கார் சந்தையில் டாடாவின் பங்கு 41.03 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 7,353 கார்களைப் பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு விற்பனை 101 சதவீதம் உயர்ந்துள்ளது.

மஹிந்திரா அசத்தல்
டாடாவுக்கு அடுத்ததாக மஹிந்திரா 7,779 கார்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 21.61 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,972 கார்களைப் பதிவு செய்திருந்த மஹிந்திரா, தற்போது தனது மின்சார கார் விற்பனையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. பிஇ 6, எக்ஸ்இவி 9இ, எக்ஸ்இவி 9எஸ் உள்ளிட்ட புதிய தலைமுறை மின்சார எஸ்யூவி மாடல்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
எம்ஜி கார்களுக்கும் வரவேற்பு
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா 5,242 பதிவுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனத்தின் சந்தைப் பங்கு 14.56 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது எம்ஜியின் விற்பனை 9 சதவீதம் உயர்ந்துள்ளது. விண்ட்சர் மின்சார கார் அந்நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வேகமாக வளரும் வின்ஃபாஸ்ட்
இந்தப் பட்டியலில் கவனம் ஈர்க்கும் மற்றொரு நிறுவனம் தூத்துக்குடியில் ஆலை அமைத்து கார்களை விற்பனை செய்து வரும் விய்ட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம். ஆம், இந்திய சந்தையில் புதிய வரவாக தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ள இந்த வியட்நாம் நிறுவனம் செப்டம்பரில் 2,963 மின்சார கார்களைப் பதிவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்தியாவில் அந்நிறுவனம் பதிவு செய்துள்ள அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கையாகும். விஎஃப்6 மற்றும் விஎஃப்7 மின்சார எஸ்யூவி மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முட்டிமோதும் கியா
கியா இந்தியா 1,263 கார்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்து மாருதி சுஸுகியை பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 598 கார்களைப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது 111 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சைரோஸ் மின்சார கார் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் மின்சார கார் போன்ற புதிய மாடல்களின் வருகை கியாவின் மின்சார வாகன விற்பனைக்கு கூடுதல் வேகத்தை வழங்கியுள்ளது.
பின்தங்கிய மாருதி
மாருதி சுசூகி 1,103 இ விட்டாரா மின்சார கார்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில் பிஒய்டி 836, ஹூண்டாய் 792, பிஎம்டபிள்யூ 502 மற்றும் டெஸ்லா 291 பதிவுகளுடன் உள்ளன. சொகுசு மின்சார கார் சந்தையிலும் செப்டம்பர் முக்கியமான மாதமாக அமைந்துள்ளது. பிஎம்டபிள்யூ 502 கார்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டெஸ்லா 291 கார்களைப் பதிவு செய்து மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் 125 பதிவுகளை முந்தி, சொகுசு மின்சார கார் சந்தையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்திய மின்சார பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து நான்காவது மாதமாக 30,000க்கும் அதிகமான மாதாந்திர விற்பனைப் பதிவுகளைப் பெற்றுள்ளது. புதிய மின்சார கார் மாடல்களின் வருகை, சார்ஜிங் கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்கள் மீதான அதிகரித்து வரும் வாடிக்கையாளர் ஆர்வம் ஆகியவை இந்த சந்தையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளன.


Click it and Unblock the Notifications



