பெட்ரோல், டீசல் கார்களை முந்திய எலெக்ட்ரிக் கார்கள்! பண்டிகை கால விற்பனையில் அதிரடி வளர்ச்சி!
இந்திய கார் சந்தையில் தற்போது முக்கியமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை சரிவைச் சந்தித்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மட்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமீபத்திய பண்டிகை காலத்தில் மின்சார கார்களுக்கான வரவேற்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நவராத்திரி முதல் பாய் தூஜ் பண்டிகை நாள் வரையிலான 32 நாட்களில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் கார் சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இந்திய வாடிக்கையாளர்களின் கார் தேர்வில் மின்சார வாகனங்கள் முக்கிய இடத்தைப் பிடித்து வருவது தெளிவாகியுள்ளது.

பண்டிகை கால விற்பனை
டைனமிக்ஸ் (Dynamics) வெளியிட்டுள்ள சில்லறை விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு இதே பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் கார்களின் விற்பனை 69 சதவீதம் உயர்ந்து 40,122 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. நவம்பர் 11ந் தேதியுடன் முடிவடைந்த 32 நாட்களுக்கான பண்டிகை காலத்தில் இந்த விற்பனை பதிவாகி இருக்கிறது.
இதற்கு நேர்மாறாக பெட்ரோல் கார்களின் விற்பனை 14.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.52 லட்சமாக இருந்த பெட்ரோல் கார் விற்பனை, தற்போது 3.01 லட்சமாக குறைந்துள்ளது. டீசல் கார்களின் விற்பனையும் 6.8 சதவீதம் சரிந்துள்ளது. சிஎன்ஜி கார் விற்பனையும் 2.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களுக்கு மவுசு
இந்திய பயணிகள் கார் சந்தையில் எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மொத்த கார் விற்பனையில் 3.8 சதவீதமாக இருந்த எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு, தற்போது 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
ஆனால், ஒட்டுமொத்த பயணிகள் கார் சந்தையின் நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. கடந்த ஆண்டு இதே பண்டிகை காலத்தில் 6.26 லட்சமாக இருந்த மொத்த கார் டெலிவரிகள், தற்போது 7.2 சதவீதம் குறைந்து 5.81 லட்சமாக பதிவாகியுள்ளன. விற்பனை சுருங்கியபோதும் எலெக்ட்ரிக் கார்கள் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இருப்பினும், கடந்த ஆண்டின் விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கடந்த 2025 செப்டம்பர் 22ந் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி குறைப்பால், கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகமாக இருந்தது. எனவே, தற்போதைய சரிவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
டாடா, மஹிந்திரா ஆதிக்கம்
எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மின்சார கார் விற்பனை 71 சதவீதம் அதிகரித்து 16,220 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான வாடிக்கையாளர் ஆதரவு தொடர்ந்து வலுவாக இருப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.
மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் மின்சார வாகன விற்பனை 84 சதவீதம் உயர்ந்து 9,407 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து மொத்த எலக்ட்ரிக் கார் விற்பனையில் சுமார் 80 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.
திணறும் நிறுவனங்கள்
எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், உற்பத்தி நிறுவனங்களுக்கே தற்போது புதிய சவால் உருவாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி தேவைக்கு தக்கவாறு இல்லாததால், வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் மொத்த தேவையில் 60 முதல் 65 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடிவதாக தெரிவித்துள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் மாதாந்திர எலக்ட்ரிக் கார் வினியோகத்தை தற்போதைய 16,000 யூனிட்டுகளிலிருந்து அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் 20,000 யூனிட்டுகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனை சுமார் 90 சதவீதம் அதிகரித்து 47,000 யூனிட்டுகளைக் கடந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனமும் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு 8,000 எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்நிறுவனம், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 4,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று மஹிந்திரா நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜெஜூரிகர் தெரிவித்துள்ளார். குறைவான பராமரிப்புச் செலவு, பயன்பாட்டுச் செலவு மிச்சம் மற்றும் மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
Via- ET Auto


Click it and Unblock the Notifications


