எலெக்ட்ரிக், சிஎன்ஜி வர்த்தக வாகனங்களுக்கு வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு புதிய முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பேட்டரி, ஹைட்ரஜன் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் நேஷனல் பர்மிட் பெற்ற வர்த்தக வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த எலெக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் வர்த்தக வாகனங்களை தற்போதைய வரம்பை விட நீண்ட காலத்திற்கு வர்த்தக பயன்பாட்டில் வைத்திருக்க முடியும். இதனால் வர்த்தக வாகன உரிமையாளர்கள் புதிய வாகனம் வாங்க வேண்டிய அவசியத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட முடியும்.

கூடுதல் வயது வரம்பு
தற்போதுள்ள விதிகளின்படி சில வகை வர்த்தக வாகனங்களுக்கு 12 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் என்ற வயது வரம்புகள் உள்ளன. புதிய வரைவு முன்மொழிவு அறிக்கையின்படி, பேட்டரி, ஹைட்ரஜன் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் குறிப்பிட்ட மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு இந்த வரம்புகள் முறையே 17 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படலாம்.
அதேநேரத்தில், இந்த புதிய சலுகையானது அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தாது. நேஷனல் பர்மிட் பெற்று இயங்கும் குறிப்பிட்ட வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் வயது வரம்பு நீட்டிப்பு சலுகையானது முன்மொழியப்பட்டுள்ளது. எனவே தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாங்கப்பட்ட கார்கள் அல்லது தனியார் வாகனங்களுக்கு இந்த விதி நேரடியாக பொருந்தாது.
வாகன உரிமையாளர்களுக்கு என்ன பயன்?
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் மாற்று எரிபொருளில் இயங்கும் வர்த்தக வாகனங்களை நீண்ட காலம் பயன்படுத்த முடியும் என்பதால், உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பலனாக அமையும் என்று கருதப்படுகிறது. பொதுவாக ஒரு வாகனத்தை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், புதிய வாகனம் வாங்குவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படும். இந்த முதலீட்டை புதிய சலுகையின் மூலம் சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட முடியும். அதே நேரத்தில், பாதுகாப்பு மற்றும் வாகனத்திற்கான தகுதிக்கான விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.
முழுவதும் டிஜிட்டல் மயம்
வாகனங்களின் வயது வரம்பை மாற்றுவதுடன், நேஷனல் பர்மிட் முறையையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. புதிய முறையில் பர்மிட்டுக்கு விண்ணப்பிப்பது முதல் அனுமதி சான்று வழங்கப்படுவது வரை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியும். இதன் மூலம் காகிதப்பணி மற்றும் அலுவலக நடைமுறைகள் வெகுவாக குறையும். வர்த்தக வாகனங்களை இயக்குவோருக்கும் இந்த செயல்முறை எளிதாக அமையும்.
மேலும், நேஷனல் பர்மிட் அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரே முறையில் பெறும் வாய்ப்பும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களை இயக்கும் உரிமையாளர்களுக்கும் இந்த நடைமுறை எளிதாகும்.
இன்னும் இறுதி முடிவு இல்லை
முக்கியமாக, இது தற்போது வரைவு அறிவிக்கையாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளை பெறும் நடைமுறை நடைபெறுகிறது. இதுதொடர்பான இறுதி விதிகள் அரசு பரிசீலனை செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகே நடைமுறைக்கு வரும்.
இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில், எலெக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை வர்த்தகப் போக்குவரத்துத் துறையில் அதிகமாக பயன்படுத்த ஊக்குவிப்பதுடன், நேஷனல் பர்மிட் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் அமையும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாற்று எரிபொருள் வாகனங்களைப் பயன்படுத்தும் வர்த்தக வாகன உரிமையாளர்களுக்கு சாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications