ஆகஸ்ட்டில் EV கார் விற்பனையில் புதிய திருப்பம்: மாருதியை பின்னுக்குத் தள்ளி வின்ஃபாஸ்ட் அசத்தல்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பதை வாகன் பதிவு தரவுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவில் புதிதாக களமிறங்கிய வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, மின்சார கார் சந்தையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான வாகன் (VAHAN) தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 30,418 எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 20,095 கார்களுடன் ஒப்பிடும்போது இது 51 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மாதாந்திர EV கார் விற்பனை 30,000 யூனிட்டுகளை கடந்துள்ளது.

Tata Seirra EV

முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்

இந்திய EV கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 13,070 டாடா எலெக்ட்ரிக் கார்கள் நாடுமுழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,053 யூனிட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 62 சதவீத வளர்ச்சியை டாடா பதிவு செய்துள்ளது.

டாடாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மஹிந்திரா உள்ளது. அந்நிறுவனம் 6,408 எலெக்ட்ரிக் கார்களை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் கணிசமான பங்குடன் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Mahindra XEV 9e

மூன்றாவது இடத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் பிடித்துள்ளது. ஆனால் அதன் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 18 சதவீதம் குறைந்து 4,602 யூனிட்டுகளாக உள்ளது. இதனால் EV கார் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு சுமார் 15 சதவீதமாக குறைந்துள்ளது.

மாருதியை முந்திய வின்ஃபாஸ்ட்

இந்த மாதத்தின் முக்கியமான மாற்றம் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக மாறி இருக்கிறது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்கிய வின்ஃபாஸ்ட் நிறுவனம் படிப்படியாக விற்பனையில் வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் 2,198 வின்ஃபாஸ்ட் கார்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஜூலை மாதத்தில் 1,531 யூனிட்டுகள் பதிவான நிலையில், ஒரே மாதத்தில் சுமார் 44 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இதன் மூலம் வின்ஃபாஸ்ட் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக VF6, VF7 மற்றும் VF MPV 7 ஆகிய மாடல்கள் மூலம் நிறுவனம் இந்திய EV கார் சந்தையில் வலுவான நிலையை நோக்கி செல்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் இ விட்டாரா கார் ஆகஸ்ட் மாதத்தில் 1,405 யூனிட்டுகள் மட்டுமே பதிவு செய்துள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மாருதி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Maruti Vinfast Collage

தீவிரமாகும் சந்தைப் போட்டி

E20 பெட்ரோல் குறித்த கவலை, எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனத்தை திருப்பி உள்ளனர். கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் கார், இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால், பல புதிய மாடல்கள் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலமும் நெருங்கிவிட்ட நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வரும் மாதங்களில் இந்த பட்டியலில் மாறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Source: Vahan

Article Published On: Saturday, September 5, 2026, 9:21 [IST]
English summary
Ev sales august 2026 india vinfast overtakes maruti vahan data
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X