எக்ஸ்பிரஸ்வேயில் 144 கிமீ வேகத்தில் போகலாமா? என்ன அமைச்சர் கட்காரி இப்படி சொல்லிட்டாரு?
இந்தியாவில் எக்ஸ்பிரஸ்வேயில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. குறிப்பிட்ட வேக வரம்பிற்குள் பயணித்தும் அபராதம் வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, வேகக் கட்டுப்பாடு தொடர்பாக புதிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ்வே என்று குறிப்பிடப்படும் அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பு பொதுவாக மணிக்கு 120 கிமீ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி வாகனம் ஓட்டுபவர்களுக்கு தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வேக மாறுபாடுகளுக்காக அபராதம் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கட்கரி கூறியுள்ளார்.

20% சலுகை?
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும், அதற்கு மேல் 20 சதவீதம் வரையிலான வேகத்திற்கும் அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன் என்று கூறி இருக்கிறார். இதன்படி கணக்கிட்டால், மணிக்கு 144 கிமீ வேகம் வரை அபராதம் இல்லாமல் செல்லலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.
எல்லா சாலைகளுக்கும் பொருந்துமா?
இந்த அறிவிப்பு மூலமாக அனைத்து சாலைகளிலும் வாகன ஓட்டிகள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லலாம் என்று அர்த்தம் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு சாலைக்கும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு வேறுபடும். நான்கு வழிச்சாலைகளில் கார்களுக்கான அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகவும், பிற சாலைகளில் 70 கிமீ ஆகவும் இருக்கிறது
உதாரணமாக, மணிக்கு 100 கிமீ வேக வரம்பு கொண்ட சாலையில் 20 சதவீத சலுகை நடைமுறைக்கு வந்தால், மணிக்கு 120 கிமீ வரை அபராதம் விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு கொடுக்கப்படலாம். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறை தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது. சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்புகளை பின்பற்றி செல்வதே நல்லதாக இருக்கும்.
சட்டம் என்ன சொல்கிறது?
மத்திய அரசின் தற்போதைய மோட்டார் வாகன விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேக வரம்பை 5 சதவீதத்திற்குள் மீறும்போது மட்டுமே அபராத நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, 20 சதவீத சலுகை என்பது தற்போதைய சட்டத்தில் உள்ள விதியைக் காட்டிலும் மிக அதிகமானது.
இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டுமானால், சட்ட ரீதியான மாற்றங்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தேவைப்படலாம். மேலும், மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் குறிப்பிட்ட சாலைகளில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப குறைவான வேக வரம்புகளை நிர்ணயிக்க அதிகாரம் உள்ளது.
சாலைப் பாதுகாப்பு கேள்விக்குறி
வேகக் கட்டுப்பாட்டில் தளர்வு அளிப்பது குறித்து சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 2024ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமானவை அதிவேக வாகனங்களால் ஏற்பட்டுள்ளதாக என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக வேகத்தில் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் மட்டுமின்றி, விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே, சாலையின் தரம், வளைவுகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேக வரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
கவனிக்க வேண்டியது?
கட்கரியின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 20 சதவீத வேக சலுகை நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதுவது சரியாக இருக்காது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
எனவே, வாகன ஓட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புக்கு உள்ளாகவே ஓட்டுவது மிக அவசியம். அது சாலைப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். அதிகாரப்பூர்வ அரசாணை அல்லது விதிமுறை திருத்தம் வெளியாகும் வரை 144 கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என்று நம்பி வாகனம் ஓட்டுவது அபராதம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை நிச்சயமாக ஏற்படும் என்பதை வாகன ஓட்டிகள் மனதில் இறுத்திக் கொள்வது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications


