உங்கள் வீடு சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ளதா? புதிய லோக்கல் FASTag பாஸ் அறிமுகம்!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்களுக்கு பயன்படும் வகையில், மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தகுதியான தனியார் வாகன உரிமையாளர்கள், குறைந்த கட்டணத்தில் வருடாந்திர FASTag லோக்கல் பாஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புதிய நடைமுறை வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி, சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து வருடாந்திர பாஸ் கட்டணம் மாறுபடும். நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அல்லது உள்ளாட்சி நகர எல்லைக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டும். தற்போது 2026-27 நிதியாண்டுக்கான வழக்கமான FASTag வருடாந்திர பாஸ் கட்டணம் ரூ.3,075 ஆக உள்ள நிலையில், புதிய லோக்கல் பாஸ் சில வாகன உரிமையாளர்களுக்குக் குறைந்த செலவில் பயணம் செய்ய உதவும்.

இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. வாகன உரிமையாளர் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும், அவரது வாகனத்தில் செல்லத்தக்க நிலையில் உள்ள ஃபாஸ்டேக் இருக்க வேண்டும். தனிப்பட்ட பயன்பாட்டுக்கான தகுதியுள்ள கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் இந்த லோக்கல் பாஸ் பெறலாம். இருப்பினும், வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. வசிப்பிடத் தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி இந்தத் திட்டத்தில் இடம்பெறுகிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்லாச் சுங்கச்சாவடியிலும் இந்த லோக்கல் பாஸ் பயன்படுத்த முடியாது. வசிப்படத்திற்கு அருகில் எந்தச் சுங்கச்சாவடி பெயர் குறிப்பிட்டு பெறப்படுகிறதோ, அங்கு மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஒருவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள சுங்கச்சாவடிக்காக இந்தப் பாஸ் பெற்றிருந்தால், மற்றொரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியைக் கடக்க இந்தப் பாஸ் செல்லாது.
புதிய வருடாந்திர லோக்கல் பாஸை 2026 நவம்பர் 1 முதல் தகுதியுள்ள சந்தாராரர்கள் அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுங்கச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு, டிசம்பர் 1 முதல் ராஜ்மார்க்யாத்ரா (Rajmargyatra) செயலி மூலமாகவும் இந்தப் பாஸ் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மாதாந்திர பாஸ் அல்லது புதிய வருடாந்திர லோக்கல் பாஸ் ஆகியவற்றில் தகுதியுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்யலாம். இந்தப் பாஸுக்கான கட்டணத்தை மத்திய அரசு ஆண்டுதோறும் மாற்றியமைக்கவும் வாய்ப்புள்ளது. கட்டணத் திருத்தங்கள் செய்யப்பட்டால், அவை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
சுங்கச்சாவடிக்கு அருகில் வசிப்பவர்கள் வேலைக்குச் செல்வது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது அல்லது அன்றாடத் தேவைகளுக்காகப் பயணம் செய்வது என ஒரே சுங்கச்சாவடியை அடிக்கடி கடக்க வேண்டியவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 செலுத்தி பாஸ் பெற முடிவது குறிப்பிடத்தக்கது. ஆனால், பாஸ் வாங்குவதற்கு முன்பு உங்கள் வாகனம் தகுதியானதா, வசிப்பிட முகவரி நிர்ணயிக்கப்பட்ட 20 கி.மீ. வரம்புக்குள் வருகிறதா, நீங்கள் பயன்படுத்தும் சுங்கச்சாவடியில் இந்த வசதி உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications


