5 பேர் படுத்துக்கிட்டே போலாம்.. அவ்வளவு இடவசதி கொண்ட எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பிறகு சர்வதேச அளவில் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை (Electric car) அறிமுகப்படுத்தியிருக்கிறது சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி (Ferrari). எரிபொருள் காரைப் போலவே டாப் பெர்ஃபாமன்ஸைக் கொண்ட காராகவே தங்களது முதல் எலெக்ட்ரிக் காரையும் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. லூஸ் (Luce) என இந்த முதல் எலெக்ட்ரிக் காருக்குப் பெயரிட்டிருக்கிறது ஃபெராரி.
பார்த்தவுடன் என்னவென்று சொல்ல முடியாத வகையில் ஒரு கலவையான டிசைனை புதிய ஃபெராரி லூஸ் கொண்டிருக்கிறது. இதனை நன்றாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது, நன்றாக இல்லை என்றும் சொல்ல முடியாது. ரெட்ரோ தீமில் இந்த எலெக்ட்ரிக் காரை ஃபெராரி உருவாக்கியிருக்கிறது என்பதை மட்டும் கூற முடியும். ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் டியாகோவின் மாறுபட்ட வடிவமோ என்று சொல்லும் வகையில் கூட இந்த டிசைன் இருக்கிறது. அவ்வளவு சிறப்பானதாக இருப்பதாகக் கூற முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. வழக்கமாக தாங்கள் உருவாக்கும் எரிபொருள் கார் மாடல்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்ட வடிவமைப்புடன் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை உருவாக்க வேண்டும் என்று மட்டும் நினைத்து உருவாக்கியிருக்கிறது ஃபெராரி. பின்பக்கம் இருந்து, பக்கவாட்டில் இருந்தும் பார்க்கும் போது கொஞ்சம் ஓகேவாக இருக்கிறது இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் டிசைன்.
டிசைனை விட பவர் மற்றும் வசதிகள் தானே ரொம்ப முக்கியம். அந்த வகையில் ஒவ்வொரு வீலுக்கும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் என நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்களை இந்தக் காரில் ஃபெராரி கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த செட்டப்பானது 1050 hp பவர் மற்றும் 990 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. பின்பக்கமே அதிக பவர் உற்பத்தியாகும் வகையில் பவர்ட்ரெயினை வடிவமைத்திருக்கிறது அந்நிறுவனம். பின்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் மட்டும் 843 hp வரையிலான பவரை உற்பத்தி செய்கின்றன.

தேவைக்கேற்ப பவரை வெளிப்படுத்தும் வகையில் மூன்று பவர் லெவல்களை இந்தக் காரில் ஃபெராரி கொடுத்திருக்கிறது. ரேஞ்சு மோடில் அதிக ரேஞ்சுக்காக 430 hp பவரை மட்டுமே வெளிப்படுத்தவும் இந்த லூஸ் காரால் முடியும், டூர் மோடில் 617 hp பவரை உற்பத்தி செய்யவும் முடியும். பெர்ஃபாமன்ஸ் மோடிலேயே அதிகபட்சமாக 986 hp பவரை வெளிப்படுத்துகிறது லூஸ். 1050 hp பவரை லாஞ்ச் கண்ட்ரோல் வசதியைப் பயன்படுத்தி வெளிப்படுத்த வைக்கலாம்.
முழுமையாக 1050 hp பவரையும் பயன்படுத்தும் போது மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 2.5 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த ஃபெராரி லூஸ். அதேபோல் அதிகபட்ச பவரைப் பயன்படுத்தும் போது அதிகபட்சமாக மணிக்கு 310 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கிறது.
இந்தக் காரில் 122 kWh பேட்டரி பேக்கை 800V கட்டமைப்பில் கொடுத்திருக்கிறது ஃபெராரி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 530 கிமீ வரை பயணம் செய்யும் அளவிற்கான ரேஞ்சை இந்த லூஸ் எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது ஃபெராரி. வழக்கமான ஃபெராரி கார்களை விட சற்று அதிகமாக 2,260 கிலோ எடையை இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
5,026 மிமீ நீளம், 1,999 மிமீ அகலத்துடன் டொயோட்டா ஃபார்ச்சூனரை விட பெரிய காராகவே இந்த ஃபெராரி லூஸ் இருக்கிறது. உயரம் மட்டும் தான் ஃபார்ச்சூனரை விடக் (ரொம்பவே) குறைவு, 1,544 மிமீ ஆக இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் முன்பக்கம் 23 இன்ச் மற்றும் பின்பக்கம் 24 இன்ச் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஃபெராரி கார்களில் பயன்படுத்தப்பட்டதிலேயே இவை தான் பெரிய வீல்கள் ஆகும்.
காரின் உட்புறமும் ரெட்ரோ தீமிலேயே வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. உட்புறமும் சரி வெளிப்புறமும் சரி, ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த டிசைன் லாங்குவேஜை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு. பின்பு தான் தெரிந்தது இந்தக் காரை டிசைன் செய்தது ஃபெராரி அல்ல, மூன்றாம் தரப்பு நிறுவனமான லவஃப்ரம் (LoveFrom) என்று. ஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவராக இருந்த ஜான் ஐவியின் நிறுவனம் தான் இந்த லவ்ஃபர்ம்.
இதனால் தான் ஒட்டுமொத்த காரிலும் ஆப்பிள் டச் இருப்பதை உணர முடிகிறது. காரின் உட்புறம் இது நமக்கு நன்றாகவே தெரிகிறது. குறிப்பாக 12.5 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அப்படியே ஆப்பிள் தயாரிப்புகளைப் போலவேயான டிசைனைக் கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரிக் காராக இருந்தாலும், உட்புறம் அதிகளவு ஸ்கிரீன்களைப் பயன்படுத்தாமல், ஃபிசிக்கல் கண்ட்ரோல்களை நிறைய கொடுத்திருக்கிறது ஃபெராரி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக ரெட்ரோல் தீமில் ப்ரீமியமாக காட்சியளிக்கக்கூடிய ஒரு எலெக்ட்ரிக் காராக தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காரான லூஸை உருவாக்கியிருக்கிறது ஃபெராரி. ஐந்து பேர் வரை சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஃபெராரி தயாரித்திருக்கும் முதல் 5 சீட்டர் காரும் இது தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் நாம் எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications