இந்தியாவில் அறிமுகமானது ஃபெராரியின் முதல் எலக்ட்ரிக் கார் லூஸ்!
சொகுசு கார் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஃபெராரி (Ferrari) நிறுவனம், தனது முதல் முழுமையான மின்சார காரான லூஸ் (Ferrari Luce) காரை இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெறும் யுனிவர்சோ ஃபெராரி (Universo Ferrari) கண்காட்சியில் இந்த கார் இடம்பெற்றுள்ளது. வழக்கமான ஃபெராரி கார்களின் வடிவமைப்பிலிருந்து மாறுபட்ட தோற்றத்துடன் வந்துள்ள இந்த கார், அதன் அதிவேகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களால் கவனத்தை பெறுகிறது.
ஃபெராரி நிறுவனம் தனது முதல் யுனிவர்சோ ஃபெராரி என்ற பெயரில் தனது பிரத்யேக கார் கண்காட்சியை டெல்லியில் உள்ள யஷோபூமியில் (Yashobhoomi) இன்றுமுதல் வரும் நவம்பர் 1 வரை நடத்துகிறது. இதில் லூஸ் எலெக்ட்ரிக் காருடன் ஃபெராரியின் மற்ற முக்கிய மாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதில், அதிக கவனம் பெற்றிருப்பது லூஸ் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெராரி லூஸ் கார் நான்கு கதவுகளைக் கொண்ட ஃபாஸ்ட்பேக் (Fastback) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் காற்றியக்கத் திறனை மேம்படுத்தும் வகையிலான வடிவமைப்பு, தனித்துவமான எல்இடி விளக்குகள் மற்றும் பின்புறத்தில் வித்தியாசமான விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. காரின் வெளிப்புற வடிவமைப்பில் பாரம்பரிய ஸ்போர்ட்ஸ் கார்களின் தோற்றத்தைவிட எதிர்காலத்துக்கான வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் நீளம் 5,026 மிமீ., அகலம் 1,999 மிமீ. மற்றும் உயரம் 1,544 மிமீ. ஆகும். முன்புறத்தில் 23 அங்குல சக்கரங்களும் பின்புறத்தில் 24 அங்குல சக்கரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு கதவுகள் மற்றும் ஐந்து இருக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், இது ஃபெராரி நிறுவனத்தின் வழக்கமான இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

இதில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனியாக என மொத்தம் நான்கு மின்சார மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இணைந்து அதிகபட்சமாக சுமார் 1,050 எச்பி ஆற்றலையும் 990 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடும் என ஃபெராரி தெரிவித்துள்ளது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 310 கி.மீ. ஆக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு சக்கரங்களுக்கும் ஆற்றலைப் பகிர்ந்தளிக்கும் தொழில்நுட்பம், நான்கு சக்கரத் திசைமாற்றி வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை வேகமான பயணத்தின்போது காரின் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.
இந்த எலக்ட்ரிக் காரில் 122kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 800 வோல்ட் மின்சாரக் கட்டமைப்பில் இயங்கும் இந்த பேட்டரி, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 530 கிமீ வரை செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகபட்சமாக 350 கிலோவாட் திறனில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இந்த கார் சப்போர்ட் செய்யும்.
இன்றைய பல எலக்ட்ரிக் கார்களில் தொடுதிரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், ஃபெராரி லூஸ் காரில் சாதாரண வகையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. உலோகக் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மற்றும் தனித்துவமான டயல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய கார்களின் உணர்வையும் இணைக்க ஃபெராரி முனைந்துள்ளது.
காரில் 10 அங்குல தொடுதிரை, 12.5 அங்குல டிஜிட்டல் ஓட்டுனர் தகவல் திரை மற்றும் தனித்துவமான ஸ்டீயரிங் அமைப்பு வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஆப்பிள் வடிவமைப்புத் தலைவர் ஜோனி ஐவ் இணைந்து நிறுவிய லவ்ஃப்ரம் (LoveFrom) நிறுவனத்தின் வடிவமைப்பு பங்களிப்பும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சந்தையில் இந்த காரின் ஆரம்ப விலை சுமார் 5.5 லட்சம் யூரோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி வரை இருக்கும். இந்திய அறிமுகம், விற்பனை மற்றும் விலை தொடர்பான விவரங்களை ஃபெராரி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications


