புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேன் அறிமுகம்... என்னென்ன புதிய வசதிகள்? முழு விபரம்!
சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல் ஷட்டில் சேவைகள், கார்ப்பரேட் ஊழியர்களுக்கான போக்குவரத்து என அதிக எண்ணிக்கையிலான பயணிகளை வசதியாக அழைத்துச் செல்லும் வேன்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பிரிவில் ஏற்கனவே Urbania மாடல் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Force Motors, தற்போது கூடுதல் வசதிகள் மற்றும் அதிக திறன் கொண்ட என்ஜினுடன் புதிய Urbania Deluxe மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Urbania Deluxe மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், என்ஜின் திறன், கேபின் வசதிகள் மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களில் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இப்போது இந்த என்ஜின் 134 ஹெச்பி பவர் மற்றும் 350 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இதன் மூலமாக அதிகபட்ச பயணிகளுடன் நீண்ட தூரம் செல்லும்போதும், மலைப்பாதைகளில் பயணிக்கும்போதும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்கு அதிக முக்கியத்துவம்
இந்த Urbania Deluxe மாடலில் ஓட்டுநரை விட பயணிகளின் வசதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பயணத்திலும் சோர்வு ஏற்படாத வகையில் மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், தரமான கேபின் ஃபினிஷ், தனித்தனி ஏசி வென்ட்கள் மற்றும் நேர்த்தியான உட்புற வடிவமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அதோடு, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Apple CarPlay, Android Auto, USB சார்ஜிங் போர்ட்கள், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய பிரிமீயம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா மற்றும் கார்ப்பரேட் பயணங்களில் பயணிகளுக்கு மேலும் சவுகரியமான அனுபவம் கிடைக்கும்.
பாதுகாப்பிலும் கவனம்
வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்களில் பாதுகாப்பு மிக முக்கியமான அம்சமாக மாறிவரும் நிலையில், Urbania Deluxe மாடலிலும் அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ABS, EBD, ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், Urbania-வின் மோனோகோக் (Monocoque) உடல் அமைப்பு இந்த வேனின் முக்கிய பலங்களில் ஒன்றாகும். பாரம்பரிய லேடர்-ஃபிரேம் வேன்களுடன் ஒப்பிடும்போது, இது அதிக நிலைத்தன்மையையும், சீரான பயண அனுபவத்தையும் வழங்க உதவுகிறது.
யாருக்கு இந்த வேன் பொருத்தமானது?
Urbania Deluxe, குடும்ப பயன்பாட்டை விட தொழில்முறை பயணிகள் சேவையை வழங்குபவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள், விமான நிலைய ஷட்டில் சேவைகள், கார்ப்பரேட் ஊழியர் போக்குவரத்து மற்றும் VIP டிராவல் சேவைகளுக்கு இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.
பயணிகளுக்கு அதிக வசதியுடன் கூடிய பிரீமியம் வேனைத் தேடும் நிறுவனங்களுக்கு இந்த புதிய மாடல் நல்ல மாற்றுத் தேர்வாக அமையக்கூடும். அர்பானியா மாடலானது ரூ.26.34 லட்சம் முதல் ரூ.31.83 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய அர்பானியா டீலக்ஸ் மாடலுக்கு ரூ.28.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் இருக்கும் பல்வேறு Urbania வேரியண்ட்களுக்கு இடைப்பட்ட நிலையில் (mid-range) இந்த புதிய Deluxe பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கூடுதல் வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதிக விலை கொண்ட வேரியண்டுக்கு செல்லாமல் ஒரு சமநிலையான தேர்வாக இது அமைகிறது. இந்த மாடலானது மூன்று வீல்பேஸ்களுடன், 9 முதல் 16 இருக்கைகள் (டிரைவர் தவிர்த்து) கொண்ட 8 விதமான இருக்கை அமைப்பு வசதிகளுடன் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
Urbania Deluxe மூலம் Force Motors, வெறும் புதிய வேரியண்டை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. அதிக வசதிகள் வேண்டும், ஆனால் அதிக விலை கொண்ட உயர்நிலை வேரியண்டுக்கு செல்ல விரும்பாத வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மாடலை கொண்டு வந்துள்ளது. இதனால் Urbania வரிசையில் ஒரு இடைநிலை (mid-range) தேர்வாக இது முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications