கடைசி சீட் இனி தண்டனை அல்ல... புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேனின் அசத்தலான 10 விஷயங்கள்!
சுற்றுலா மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஃபோர்ஸ் அர்பானியா வேன் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஒரு டிரிப் செல்கிறோம் என்றால் வாகனத்தில் ஏறி பயணித்து இறங்குவது வரை மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும். அந்த வகையில், சிறப்பான இடவசதி, சொகுசு அம்சங்களுடன் காரில் செல்வதை விட மிகச் சிறந்த பயண அனுபவத்தை இந்த வேன் தரும் என்றால் மிகையாகாது. இந்த நிலையில், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில் ஃபோர்ஸ் அர்பானியாவின் புதிய டீலக்ஸ் மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த மாடலுக்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய மாடல் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும், சுற்றுலா திட்டமிடுவோர் மத்தியிலும் அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய அர்பானியா மாடலின் சிறப்பான 10 விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
விசாலமான இடவசதி
பெரும்பாலும் கார் அல்லது சில வேன்களில் செல்லும்போது நெருக்கடியான உணர்வை தரும். ஆனால், இந்த வேனில் ஏறுவது முதல் அமர்ந்து செல்லும்போதும் சிறப்பான இடவசதியை அளிக்கும். மேலும், வேனின் உயரமும் உட்புறத்தில் தலை இடிக்காமல் நடந்து செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால், பயணிகளுக்கு அசகவுரியமான உணர்வு தவிர்க்கப்படும். வயது முதிர்ந்தோருக்கும் இந்த வேன் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கடைசி இருக்கை தண்டனை
பொதுவாக பல வேன் அல்லது மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும்போது கடைசி இருக்கையில் அமர்ந்து செல்வோர் பாடு திண்டாட்டமாகி விடும். அலுங்கல் குலுங்கல் என்பதுடன், மோசமான சாலைகள், வேகத்தடைகளை கடக்கும்போது தூக்கிப் போட்டு மோசமான பயண அனுபவத்தை கொடுத்துவிடும். ஆனால், இந்த வேனில் கடைசி இருக்கையில் கூட சிறப்பான பயணத்தை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
ஸ்லைடிங் கதவுகள்
பிற வாகனங்களை போல அல்லாமல் இந்த வாகனத்தில் பக்கவாட்டில் அகலமான நுழைவாயிலுடன் ஸ்லைடிங் வகை கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது நெருக்கடியான இடங்களிலும் பயணிகளை எளிதாக, ஏறி இறங்கும் வாய்ப்பை வழங்கும். மேலும், சாய்வான சாலைகளில் நிற்கும்போது கதவு மூடுவதை தவிர்ப்பதற்கான எலெக்ட்ரிக் ஹோல்டு வசதி இருப்பதால் பயணிகள் அச்சமின்றி ஏற உதவும். மேலும், கால் வைத்து ஏறுவதற்கு வசதியாக எலெக்ட்ரிக் ஃபுட்போர்டு வசதியும் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும். மேலும், புடவை கட்டிக் கொண்டு ஏறும் பெண்களுக்கும் இது பிரச்னையை தராது.

குளிர்ச்சி பிரச்னை இருக்காது...
சாதாரண வேன்களில் முன்புறம் இருக்கும் ஏசி வென்ட்டுகள் மூலமாகவே உட்புறம் முழுமையாக செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், இந்த வாகனத்தில் காரில் இருப்பதுபோன்று ஒவ்வொரு வரிசை இருக்கைக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், கேபின் முழுவதும் குளிர்ச்சி சிறப்பாக இருப்பதுடன் கேபின் முழுமையான குளிர்ச்சியை சீராக இருப்பதற்கு உதவுகிறது. குறிப்பாக, கோடைக்காலங்களில் இதன் நன்மை பயணிகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.
அகலமான ஜன்னல்கள்
போர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேனின் மற்றொரு முக்கிய அம்சமாக அதன் பெரிய கண்ணாடி ஜன்னல்களை கூறலாம். பயணத்தின்போது வெளிப்புறத்தை நன்றாக பார்த்து செல்ல உதவும். குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்களுக்கு செல்லும்போது இந்த வேன் மிகச் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும். குழந்தைகளும், பெரியவர்களும் சிரமம் இல்லாமல் வெளிப்புற அழகை கண்டு ரசிக்க முடியும்.
இருக்கை அமைப்பு
புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேன் ரூ.28.7 லட்சம் எக்ஸ்ஷோரும் விலையில் வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள வேரியண்ட்டுகளுக்கு நடுத்தர விலை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், பயணிகளின் வசதிகளை மனதில் வைத்து பல கூடுதல் சிறப்பம்சங்கள் இந்த வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டீலக்ஸ் மாடலிலும் மூன்று வீல் பேஸ் கொண்ட 9+D முதல் 16+D இருக்கைகள் கொண்ட வெவ்வேறு வேரியண்ட்டுகளிலும் வாங்க முடியும்.
பென்ஸ் எஞ்சின் தொழில்நுட்பம்
புதிய அர்பானியா டீலக்ஸ் வேனில் 134 எச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஞ்சின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த புதிய எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனை வழங்கும். குறிப்பாக, முழுமையான அளவில் பயணிகள் மற்றும் உடைமைகளுடன் செல்லும்போது மலைச்சாலைகளிலும் திக்கித் திணறாமல் செல்வதை உறுதி செய்யும்.

மோனாகாக் சேஸீ
புதிய அர்பானியா டீலக்ஸ் மாடலானது மோனோகாக் சேஸீ அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், புவியீர்ப்பு மையம் குறைவாக இருக்கும். வழக்கமாக வர்த்தக வாகனங்கள் கட்டமைக்கப்படும் பாடி ஆன் ஃப்ரேம் சேஸீயைவிட இந்த மோனோகாக் கட்டமைப்பு கொண்ட இந்த வாகனம் நிலைத்தன்மையுடன் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இது ஓட்டுனருக்கு எளிதான கையாளுமையை கொடுப்பதால் விபத்துக்களை தவிர்க்கவும், பயணிகளுக்கு குறைவான அலுங்கல் குலுங்கல் மற்றும் அதிர்வுகள் இல்லாத பயண அனுபவத்தை பெற உதவும்.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் மாடலில் வழங்கப்படும் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டமும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. இந்த பிரிமீயம் ஆடியோ சிஸ்டத்தின் மூலமாக நீண்ட தூர பயணங்களின்போது பாடல்கள் கேட்பதில் புதிய அனுபவத்தை வழங்கும்.
கார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள்
மைலேஜ் எவ்வளவு என்பதை தாண்டி இப்போது இந்தியர்கள் என்னென்ன பாதுகாப்பு வசதிகள் என்பதை கார் தேர்வு செய்யும்போது கவனித்து பார்த்து பார்த்து வாங்குகின்றனர். அதேபோன்று, கார் போன்ற சிறப்பான பயண அனுபவத்தை பெற வேண்டும் என்று பார்த்து உருவாக்கப்பட்டுள்ல இந்த வேனிலும் பாதுகாப்பு அம்சங்கள் கார்களில் இருப்பது போன்றே இடம்பெற்றுள்ளன. அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் திறனை சரியான விகிதத்தில் செலுத்தும் EBD, பிரேக் பிடிக்கும்போது சக்கர சுழற்சியில் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது சரிவான சாலைகளில் நிறுத்தி எடுக்கும்போது பின்னோக்கி நகராமல் பார்த்துக் கொள்ளும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் தொழில்நுட்பம், பின்னால் இருக்கும் பொருட்கள், தடைகள் குறித்து எச்சரிக்கும் ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், வேன் கட்டுப்பாட்டை இழந்துவிடும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து அதனை EBD தொழில்நுட்பத்துடன் சேர்ந்து தவிர்க்க உதவும் ROM தொழில்நுட்பம் இதற்கு மிகப்பெரிய வலு சேர்க்கும் அம்சங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications
