அடுத்த ஒரு மாதத்தில் இந்தியாவில் வெளியாகும் நான்கு புதிய எஸ்யூவிக்கள் இவை தான்!

அடுத்த ஒரு மாதத்தில் நான்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் நான்கு புதிய எஸ்யூவிக்களை வெளியிடவுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக எஸ்யூவிக்களின் சந்தையாக இந்தியா மாறி வரும் நிலையில், புதிய புதிய ரகங்களில் விதவிதமான எஸ்யூவிக்களை யோசித்து யோசித்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களமிறக்கி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக வெளியாகும் நான்கு எஸ்யூவிக்கள் எவை எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

டாடா சியரா EV

இந்த வரிசையில் முதலில் இருப்பது டாடாவின் சியரா எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Sierra EV). இதனை இன்று (ஜுன் 30) வெளியிடுகிறது டாடா மோட்டார்ஸ். இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, டாடா சியரா EV வெளியாகியிருக்கலாம். டாடாவிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு எலெக்ட்ரிக் காராக சியரா EV உள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் டாடா வெளியிட்ட எரிபொருள் சியரா காரின் எலெக்ட்ரிக் வடிவமாக புதிய சியரா EV வெளியாகவுள்ளது.

Tata Sierra EV

அனைத்து விதமான மேம்பட்ட அம்சங்களையும் கொண்டு, 650 கிமீ வரையிலான ரேஞ்சுடன், பவர்ஃபுல்லான 5 சீட்டர் எஸ்யூவிக்களில் ஒன்றாக சியரா EV இருக்கும் எனத் தெரிகிறது. 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி e விட்டாரா, மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது டாடா சியரா EV.

நிஸான் டெக்டான்

பல ஆண்டுகளுக்கு பிறகு நிஸானின் பெயர் சொல்லும் காராக வெளியாகவிருக்கிறது டெக்டான் (Nissan Tekton) எஸ்யூவி. ஜூலை 9ம் தேதியன்று இந்தப் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடுகிறது நிஸான். புதிது என்று சொன்னாலும், இது ஏற்கனவே நாம் பார்த்த ஒன்று தான். ஆம், ரெனோ டஸ்டரின் அடிப்படையிலேயே இந்த டெக்டான் எஸ்யூவியை நிஸான் வடிவமைத்துள்ளது.

Nissan Tekton

பிளாட்ஃபார்ம், பவர்ட்ரெயின் தேர்வுகள், வசதிகள் என பெரும்பான்மை அம்சங்கள், டஸ்டர் மற்றும் புதிய டெக்டான் இரண்டிலும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் டிசைன் தனித்துவமான ஒன்றாகவே இருக்கும். டஸ்டரின் இருந்து தனித்துத் தெரியும் வகையில் டெக்டானை வடிவமைத்து வருவதாக நிஸான் முன்பே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 10.50 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி டெக்டான் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ், கியா செல்டோஸ் ஆகியவை இதன் போட்டியாளர்கள்.

எம்ஜி ஸ்டார்லைட் 560

இந்த எஸ்யூவியைப் பற்றி மிகவும் குறைவாகவே நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எம்ஜி இந்தியாவில் வெளியிடும் புதிய ஹைபிரிட் எஸ்யூவி இந்த ஸ்டார்லைட் 560 (Starlight 560). ஜூலை 16ம் தேதியன்று இந்தப் புதிய ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடுகிறது எம்ஜி மோட்டார். ஸ்டார்லைட் 560 என்ற பெயர், சர்வதேச சந்தைகளில் இந்த எஸ்யூவிக்குப் பயன்படுத்தப்படும் ஒன்று. இந்தியாவில் என்ன பெயரில் வெளியிடவுள்ளது என்பது வெளியீடு நெருங்கும் போதே தெரிய வரும்.

இது மாருதி கிராண்டு விட்டாரா அல்லது ஹோண்டா சிட்டி போல ஸ்ட்ராங் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தது கிடையாது. மாறாக பிளக்-இன் ஹைபிரிட் வகையறாவைச் சேர்ந்தது. அதாவது இதில் இருக்கும் பேட்டரியை நாம் தனியாக பிளக் செய்து எலெக்ட்ரிக் கார் போலவே சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இந்தக் காரில் பெட்ரோல் டேங்கும் இருக்கும். எரிபொருள் காரின் இலகுவான பயன்பாட்டோடு, எலெக்ட்ரிக் காரின் அனுபவத்தையும் இந்த ஸ்டார்லைட் 560 ஹைபிரிட் எஸ்யூவி கொடுக்கும்.

அளவில் சஃபாரி, XUV 7XO ஆகிய கார்களுக்கு இணையான எஸ்யூவியாக இருக்கும். அதாவது கிரெட்டாவை விட சற்று பெரிதாக இருக்கும். இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவியை வெளியிடுவதை பரிசீலனை கூட செய்யவில்லை. காரணம் இதன் தயாரிப்புச் செலவு அதிகம், மேலும் இதற்கு வரிச்சலுகையும் கிடையாது. ஆனால் எம்ஜி துணிந்து இறங்கியிருக்கிறது. என்ன விலையில் இந்தக் கார் வெளியாகும் என்தைப் பார்க்கத் தான் இந்திய சந்தை ஆர்வமாக இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட்

இந்தியாவில் ஏற்கனவே மாருதி விற்பனை செய்து வரும் பிரெஸ்ஸா சப்-காம்பேக்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் வடிவத்தை ஜூலை 23ம் தேதியன்று அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் பட்டியலில் இருக்கும் நான்கு கார்களில் குறைவான விலையைக் கொண்ட ஒன்று என்றால், அது இந்த பிரெஸ்ஸாவாகத் தான் இருக்கும்.

புதிய ஃபேஸ்லிப்ட் அப்டேட்டில், டர்போ பெட்ரோல் இன்ஜின், அண்டர்பாடி CNG டேங்க் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை பிரெஸ்ஸாவில் கொடுக்க மாருதி சுஸூகி திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்துடன் வழக்கமான டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளும் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் கொடுக்கப்பட்டிருக்கும். விலையும் கொஞ்சம் மட்டுமே கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

ஒரு சப்-காம்பேக்ட், ஒரு மிட்-சைஸ், ஒரு பிளக்-இன் ஹைபிரிட் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் என நான்கும் நான்கு வகையைச் சேர்ந்த எஸ்யூவிக்களாக இருக்கின்றன. மேலும் நான்கில் மூன்று எஸ்யூவிக்கள் புதிது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தை இதனால் இந்தாண்டின் எஸ்யூவிக்களுக்கான மாதமாகக் கூட நாம் குறிப்பிடலாம். நீங்களும் இந்தப் புதிய எஸ்யூவிக்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்களா!

Article Corrections

தலைப்பில் 'மாதத்திற்கு' என இருந்தது 'மாதத்தில்' என மாற்றப்பட்டது.
Article Published On: Tuesday, June 30, 2026, 12:25 [IST]
English summary
Four new suvs to launch in next 30 days in india what are they
மேலும்... #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out