மாருதியால பக்கத்துல கூட வர முடியாது.. லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரக்கூடிய கார்!
எந்த நாட்டு கார் வாடிக்கையாளர்களை எடுத்துக் கொண்டாலும் மைலேஜ் என்பது கார் வாங்கும் முடிவில் முக்கியமான அளவுகோலாக இருந்து வருகிறது. இதனால் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்குவதில் எப்போதுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியே வருகின்றன. சமீப காலங்களில் கார்களின் மைலேஜ் அளவை உயர்த்துவதில் ஹைபிரிட் சிஸ்டம்கள் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியிருக்கின்றன.
ஹைபிரிட் சிஸ்டம் உள்ள கார்கள், முழுமையான எரிபொருள் கார்களை விட அதிக மைலேஜ் தருக்கின்றன. எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான பாலமாகவும் இவையே இருக்கின்றன. முழுமையான எலெக்ட்ரிக் எதிர்காலத்தை நோக்கி நடை போடும் அதே நேரத்தில், ஹைபிரிட் பவர்ட்ரெயின்களிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

மேம்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் தயாரிப்பதிலும் சீனா தற்போது முன்னணியில் இருந்து வருகிறது. அந்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது தங்கள் பார்வைை ஹைபிரிட் பவர்ட்ரெயின் பக்கமும் திருப்பியிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் சீன ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்று யாரும் எதிர்பார்க்காத வகையிலான மைலேஜைக் கொடுக்கும் வகையிலான ஹைபிரிட் பவர்ட்ரெயினை உருவாக்கியிருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் கீலி (Geely). இந்த நிறுவனம் லிட்டருக்கு சுமார் 45.05 கிமீ மைலேஜ் தரக்கூடிய i-HEV என்ற புதிய ஹைபிரிட் சிஸ்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேலே கூறிய மைலேஜ் அளவுடன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது கீலி. தாங்கள் உருவாக்கியிருக்கும் இந்தப் புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை, 'Intelligent Energy' ஹைபிரிட் சிஸ்டம் என அழைக்கிறது அந்நிறுவனம்.

AI அடிப்படையிலான ஆற்றல் நிர்வாக அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய ஹைபிரிட் சிஸ்டம் செயல்படுகிறது. எலெக்ட்ரிக், சீரிஸ் ஹைபிரிட் மற்றும் பேரலல் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களின் தரவுகளைக் கொண்டு இந்த AI சிஸ்டம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் உதவியைக் கொண்டு அதிக அளவிலான மைலேஜைத் தரும் வகையில் செயல்படுகிறது கீலியின் புதியி i-HEV ஹைபிரிட் சிஸ்டம்.
இந்தப் புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை மொன்ஜாரோ (Monjaro) மற்றும் ப்ரீஃபேஸ் (Preface) ஆகிய இரண்டு கார்களில் பயன்படுத்த கீலி திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புதிய கார்கள் இந்தாண்டு இறுதியில் சந்தையில் அறிமுகமாகவிருக்கின்றன. இந்த இன்டலிஜன்ட் ஹைபிரிட் சிஸ்டத்தைக் கொண்டிருக்கும் கீலி ப்ரீஃபேஸ் மாடலானது லிட்டருக்கு 25.1 கிமீ மைலேஜையும், மொன்ஜாரோ மாடலானது லிட்டருக்கு 21.05 கிமீ மைலேஜும் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது கீலி.
இரண்டுமே 4.8 மீட்டர்கள் அளவில் பெரிய ரக கார்கள் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய i-HEV ஹைபிரிட் சிஸ்டமானது, 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என எந்த வகையான இன்ஜினுடனும் இணைத்துப் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் இருப்பதாகக் கீலி குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் வாடிக்கையாளர்களிடையே ஹைபிரிட் கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனாலேயே வாகன தயாரிப்பாளர்களும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஓடிக் கொண்டிருக்கின்றனர். கீலியைத் தொடர்ந்து, செரி, சாங்கன் உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதிக மைலேஜ் தரும் வகையிலான ஹைபிரிட் சிஸ்டத்தை மேம்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் பயன்படுத்தும் போது லிட்டருக்கு 25 கிமீ என்பது குறைவான மைலேஜ் போலத் தெரிந்தாலும், அது பவர்ஃபுல்லான இன்ஜினையும் உள்ளடக்கியிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஃபார்ச்சூனர் அளவுடைய கார் ஒன்று, பவர்ஃபுல்லான பெர்ஃபாமன்ஸுடன், சிறப்பான மைலேஜையும் தரும் போது, அது தவிர்க்க முடியாத காம்பினேஷனாகிவிடுகிறது. இந்தியாவிலும் இது போன்ற சிறப்பான மைலேஜ் தரக்கூடிய ஹைபிரிட் கார்கள் வெளியாக வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








