ஹூண்டாய் பிரம்மாண்ட ஜிவி90 சொகுசு எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை!
இந்திய கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாஸ் மார்க்கெட் கார்களில் வலுவான இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், தற்போது சொகுசு கார் சந்தையிலும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தனது ஜெனிசிஸ் பிரீமியம் கார் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான சொகுசு எஸ்யூவியான ஜிவி90 தொடர்பான காப்புரிமை வடிவமைப்பு படங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆடம்பர வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த செய்தி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக சர்வதேச சந்தைகளில் தனது சொகுசு கார்களை ஜெனிசிஸ் பிராண்டில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த பிராண்டை இந்தியாவில் வரும் 2027ம் ஆண்டு அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மாடலாக ஜிவி90 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட எஸ்யூவி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்ட ஜிவி90 எலக்ட்ரிக் மாடலின் அடிப்படையில் இந்தியாவிற்கான தயாரிப்பு உருவாக்கப்படும்.

ஜிவி90 காரின் முன்பக்க வடிவமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, நிறுவனத்தின் அடையாளமான வடிவத்தில் எல்இடி விளக்குகள் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இரண்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்குகள் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. முன்பக்கத்தில் பெரிய ஏர் டேம் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
பம்பரின் கீழ்ப்பகுதியில் மெஷ் டிசைன், குரோம் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பார்க்கிங் சென்சார்கள், ரேடார்கள் மற்றும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டுப் பகுதியில் பெரிய அலாய் வீல்கள் மற்றும் குரோம் அலங்காரங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பிரம்மாண்டமான சொகுசு எஸ்யூவி தோற்றத்துடன் இந்த கார் வசீகரிக்கிறது.
பின்புறத்தில் வளைவான வடிவமைப்பு, மெல்லிய எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் அவற்றை இணைக்கும் எல்இடி லைட் பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டெயில்கேட்டில் ஜெனிசிஸ் பிராண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கேபினில் சொகுசு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நப்பா லெதர் இருக்கைகள், 25 அங்குலத்தில் தகவல்களைா விண்ட்ஷீல்டில் தெரியும் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே வசதி, 24.6 அங்குல சென்ட்ரல் டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பிளியோஸ் கனெக்ட் மற்றும் க்ளியோ ஏஐ தொழில்நுட்பங்களும் இதில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, டிஜிட்டல் ஐஆர்விஎம், 25 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சன் ஆடியோ சிஸ்டம், டால்பி அட்மாஸ் வசதிகளும் கிடைக்கின்றன. இரண்டு வரிசை இருக்கைகளுக்கும் பவர் அட்ஜெஸ்ட்மென்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சன்ரூஃப் பகுதியில் ஏர்பேக்குகளும் இடம்பெற்றுள்ளன.
பயணத்தை மேலும் சொகுசாக மாற்ற ஏர் சஸ்பென்ஷன் மற்றும் ரியர் வீல் ஸ்டீயரிங் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரிய எஸ்யூவியாக இருந்தாலும் குறுகிய இடங்களில் திருப்புவதற்கும், பயணத்தின்போது சவுகரியத்தை அதிகரிப்பதற்கும் இந்த தொழில்நுட்பங்கள் உதவியாக இருக்கும்.
ஜெனிசிஸ் ஜிவி90 முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 123.5 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் பவர் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக செயல்திறனையும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும் எதிர்பார்க்கலாம்.
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி அதிகபட்சமாக 657 எச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜெனிசிஸ் பிராண்டை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஹூண்டாய் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. முதல் மாடலாக ஜிவி90 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் அறிமுகமானால், கியா இவி9 மற்றும் வால்வோ இஎக்ஸ்90 போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக ஜெனிசிஸ் ஜிவி90 இருக்கும்.


Click it and Unblock the Notifications



