பெட்ரோல் விலை தலைகீழா மாற போகுது! எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் தற்போது E20 எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது. இது 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவை ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் E20 எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வேறு எந்த வகையான எத்தனால்+பெட்ரோல் கலவையும் இந்தியாவில் விற்பனையில் இல்லை.
எனவே வாகனம் இணங்குகிறதோ இல்லையோ, E20 எரிபொருளை பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய மக்கள் உள்ளனர். இது மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. E20 எரிபொருள் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, வாகனத்தின் மைலேஜ் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் வாகனத்தின் முக்கியமான பாகங்களும் E20 எரிபொருளால் சேதமடைந்து வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை எல்லாம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் மறுத்துள்ளது. நிலைமை இப்படி இருக்கும் நிலையில் இனி இந்திய பெட்ரோல் பங்க்குகளில் அதிரடியான மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்களான ஜியோ, நயாரா எனர்ஜி மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களுக்கும் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட பெட்ரோலிய நிறுவனங்கள் எல்லாம் இனி E20, E22, E25 மற்றும் E30 என பலதரப்பட்ட எத்தனால்+பெட்ரோல் கலவையின் வேரியண்ட்களை விற்பனை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பொதுத்துறை மற்றும் தனியார் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ஆகும்.
இந்தியாவில் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. தற்போது 20 சதவீதமாக இருக்கும் எத்தனாலின் அளவு வரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். மறுபக்கம் கரும்பு, சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.
இது போன்ற விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துதான், பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நேரத்தில் ஒரே ஒரு வேரியண்ட்டை மட்டும் விற்பனை செய்யாமல், பல்வேறு வேரியண்ட்களையும் விற்பனை செய்தால், அது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.
அதாவது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் எந்த வகையான வேரியண்ட்டிற்கு இணங்குகிறதோ, அதை வாங்கி கொள்ளலாம். எத்தனாலை அதிக அளவில் பயன்படுத்தும் பிரேசில் போன்ற நாடுகளில் இந்த முறை தற்போது அமலில் இருக்கிறது. அதாவது அங்கு வாகன ஓட்டிகள் தங்களுக்கு தேவையான வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். அந்த முறையை இந்தியாவிலும் பின்பற்ற மத்திய அரசு முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது குறித்து மிண்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் உடன் எவ்வளவு எத்தனால் கலக்கப்பட்டுள்ளது? என்பதை பொறுத்து, எரிபொருளின் விலை மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது வேரியண்ட்டை பொறுத்து எரிபொருளின் விலை மாறுபடலாம். இந்திய பெட்ரோல் பங்க்குகள் ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராகி கொண்டிருப்பதை தற்போதைய நிகழ்வுகள் மூலம் உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications