இந்த மாதிரி உத்தரவு போட்டா ஒருத்தரும் எலெக்ட்ரிக் வண்டி வாங்க மாட்டாங்க! ஷோரூம்லாம் காத்து வாங்க போகுது!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் விரும்புகின்றன. ஆனால் இங்கு பெட்ரோல் பங்க்குகளின் (Petrol Bunks) எண்ணிக்கைக்கு நிகராக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை உயர்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி கொண்டுதான் உள்ளனர். அவர்கள் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு வீடுகளில் பொருத்தப்படும் சார்ஜர்களையே பெரிதும் நம்பியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இந்த சார்ஜர்களை பார்க்கிங் ஏரியாவில் பொருத்தி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது அவற்றை நீக்க வேண்டும் என அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் ஒன்று குடியிருப்புவாசிகளை வலியுறுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கான் நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் ஒன்று, குடியிருப்புவாசிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு:
குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால், பார்க்கிங் பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களை பொருத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களை பொருத்த டிடிசிபி (DTCP) மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். எனவே பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சார்ஜர்களை எல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும்.

தீயணைப்பு துறையானது, எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதையும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற எரிபொருட்களை நிரப்புவதையும் ஒன்றாகவே வகைப்படுத்தியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் இருப்பதற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நமது அடுக்குமாடி குடியிருப்பிற்கு, அவர்கள் இன்னும் தடையில்லான சான்றிதழை புதுப்பித்து வழங்கவில்லை. புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்தும், அது இன்னும் நிலுவையில் உள்ளது. தீயணைப்பு துறையிடம் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், பார்க்கிங் பகுதியில் உள்ள சார்ஜர்களை நாம் உடனடியாக அகற்ற வேண்டும்.
அதற்கு பிறகே தடையில்லா சான்றிதழை புதுப்பிப்பதற்கான பணிகளை நாம் மீண்டும் தொடர முடியும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த 7 நாட்களுக்குள் சார்ஜர்களை அகற்றும்படி இந்த கடிதம் மூலமாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமல்லாது, குர்கான் நகரை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது இதே பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. பார்க்கிங் பகுதியில் சார்ஜர்கள் இருப்பதால், தீயணைப்பு துறை, அவர்களுக்கும் தடையில்லா சான்றிதழை புதுப்பித்து வழங்கவில்லை என தெரிகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வீட்டு சார்ஜர்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், இது கண்டிப்பாக எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவர்கள் இனி தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு, பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை நாட வேண்டியதிருக்கும். இதற்கு அதிக செலவு ஆகும் என்பதுடன், எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications