உள்ளே தியேட்டர் மாதிரி இருக்கும்னு அடிச்சு சொல்லலாம்... ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார்!
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, தனது 0 ஆல்ஃபா (0 Alpha) கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வரும் அதிநவீன எலக்ட்ரிக் SUV காரின் சாலை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடு தழுவிய அளவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இமயமலைப் பகுதியான மணாலியில் இந்த எலெக்ட்ரிக் காரை ஓட்டிப் பார்க்கும் காட்சிகள் கேமராவில் சிக்கியுள்ளன.
pxrtth.gpt என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த படங்களில், காரின் அசாத்திய கேபின் வடிவமைப்பு முதன்முறையாக மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட திரைகள், ஹோண்டாவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் முழுக்க முழுக்க தொழில்நுட்பப் புரட்சியுடன் களமிறங்கப் போவதை உறுதி செய்கின்றன.

மேலும், இந்த ஹோண்டா எலெக்ட்ரிக் காரின் டாஷ்போர்டு பகுதியில், மிக அகலமான மற்றும் தனியாக மிதப்பது போன்றதான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதற்கு இணையாக, ஸ்டீயரிங் சக்கரத்திற்கு பின்னால் மற்றொரு முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹோண்டா இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில் உள்ள திரைகளை விட, இவை பல மடங்கு பெரியதாக உள்ளது.
இந்தத் திரைகள் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நவீன கனெக்டெட் கார் அம்சங்கள், நேவிகேஷன் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே உரிய பிரத்யேக தொழில்நுட்பக் கண்ட்ரோல்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏசி போன்ற வசதிகளைக் கட்டுப்படுத்த வழக்கமான பட்டன்களும் இதில் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது.

0 ஆல்ஃபா கான்செப்ட் மாடலை ஒத்த கம்பீரமான வெளிப்புறத் தோற்றத்தை பெறும் இந்த கார் இந்த சோதனை ஓட்டத்தில் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தாலும், இதன் பிரம்மாண்டமான பாக்ஸி (boxy) வடிவம் பார்ப்போரைக் கவரும் வகையில் உள்ளது. காரின் முன்பக்கத்தில் செவ்வக வடிவிலான LED விளக்குகளும், அவற்றை இணைக்கும் வகையிலான மெல்லிய கருப்பு பேனலும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்பக்கத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட டெயில் விளக்குகள் மற்றும் நேர்த்தியான பின்புற கதவு (tailgate) கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரமான ரூஃப்லைன் மற்றும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், காருக்குள் மிகத் தாராளமான இடவசதி இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில், இதன் அலாய் சக்கரங்களின் வடிவமைப்பு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால், இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவிலேயே தயாரித்து, உள்நாட்டு விற்பனை மற்றும் உலகளாவிய ஏற்றுமதிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார், பிரீமியம் மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் பிரிவில் களம் காணவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜப்பான் மற்றும் வட அமெரிக்காவிற்கு இணையாக இந்தியாவையும் ஹோண்டா தனது மிக முக்கியமான சந்தையாக கருதுகிறது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே 2026இல் புதிய சிட்டி காரை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ZR-V ஹைபிரிட் எஸ்யூவி காரையும் அண்மையில் காட்சிப்படுத்தியுள்ளது. இவற்றை தொடர்ந்து, 2027இல் 0 ஆல்பா எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது.
இதற்கிடையில், பல்வேறு விதமான இந்திய நிலப்பரப்புகளில் இந்த எலெக்ட்ரிக் காரின் தரம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், இது இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா இவி (Creta EV) மற்றும் டாடா சியரா இவி (Sierra EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications