அம்பாஸிடருக்கே அப்பன்! ஹோண்டாவை தூக்கி நிறுத்த அந்த காரே இந்தியாவுக்கு மறுபடியும் வருதா! போட்றா வெடிய!

உலகில் ஒரு சில செடான் ரக கார்களுக்கு (Sedan Cars) ரசிகர்கள் அதிகம். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) இதற்கு ஒரு உதாரணம். இந்த வரிசையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மற்றொரு செடான் ரக கார்களில் ஒன்று ஹோண்டா அக்கார்டு (Honda Accord).

கடந்த 1976ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா அக்கார்டு காருக்கு தற்போது 50 வயதாகி விட்டது. இதனால் அக்கார்டு காரின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் (Viral Video), அக்கார்டு காரின் சாதனைகள் நினைவு கூறப்பட்டுள்ளன.

Honda Accord

அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் ஹோண்டா அக்கார்டு கார் தற்போதும் விற்பனையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது ஹோண்டா அக்கார்டு கார் விற்பனையில் இல்லை. சர்வதேச சந்தைகளில் கடந்த 1976ம் ஆண்டே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டுதான் ஹோண்டா அக்கார்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அது ஹோண்டா அக்கார்டு காரின் 6வது தலைமுறை மாடல் ஆகும். 2.3 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை அது கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களின் போட்டி மாடல்களுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில் ஹோண்டா அக்கார்டு கிடைத்தது. அத்துடன் பயணிகளுக்கு சொகுசான பயணத்தையும் அது வழங்கியது.

Honda Accord Sedan

எனவே இந்திய சந்தையில் ஹோண்டா அக்கார்டு காருக்கு உடனடியாகவே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இதன் பின் ஹோண்டா நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டு அக்கார்டு காரின் 7வது தலைமுறை மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், 2.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து 2008ம் ஆண்டில் 8வது தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. ஆனால் 8வது தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்தியாவில் பல்வேறு சோதனைகளை சந்தித்தது.

டீசல் இன்ஜின் இல்லாதது அப்போது ஒரு குறையாக கருதப்பட்டது. அத்துடன் ஜெர்மனியை சேர்ந்த போட்டி நிறுவனங்களின் மாடல்கள் கடுமையான சவாலை வழங்க தொடங்கின. இதனால் கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் ஹோண்டா அக்கார்டு காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. அத்துடன் இந்தியாவில் இந்த காரை உற்பத்தி செய்வதையும் ஹோண்டா நிறுவனம் நிறுத்தியது.

இருப்பினும் 3 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 2016ம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் அக்கார்டு காரின் 9வது தலைமுறை மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் லித்தியம் அபான் பேட்டரியுடன் கூடிய 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யவில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்தது. இதன் காரணமாக அதிக இறக்குமதி வரிகள் போன்ற பிரச்சனைகளை ஹோண்டா அக்கார்டு காரின் 9வது தலைமுறை மாடல் சந்திக்க நேரிட்டது. இது அதன் அதிகப்படியான விலை நிர்ணயத்திற்கு காரணமாக அமைந்தது.

எனவே மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால், கடந்த 2020ம் ஆண்டில், அக்கார்டு காரின் விற்பனையை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மீண்டும் நிறுத்தியது. இது நடைபெற்று தற்போது சுமார் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் ஹோண்டா நிறுவனம் அக்கார்டு காரை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவில்லை.

இருப்பினும் ஹோண்டா நிறுவனம் கூடிய விரைவில் அக்கார்டு காரை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனேகமாக வரும் 2027 அல்லது 2028ம் ஆண்டில் ஹோண்டா அக்கார்டு கார் இந்திய சந்தைக்கு மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் எனவும், லெவல் 2 அடாஸ், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் மற்றும் பிரீமியர் பத்மினி ஆகிய செடான் ரக கார்களை போன்று, ஹோண்டா அக்கார்டு காரும் மிகவும் பிரபலம். எனவே இது இந்திய சந்தைக்கு மீண்டும் வந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது நடக்கும்பட்சத்தில், ஹோண்டா நிறுவனத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஹோண்டா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் தத்தளித்து கொண்டுள்ளது. அதன் விற்பனை எண்ணிக்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே அக்கார்டு போன்ற கார்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ரீ-லான்ச் செய்வது அவசியம். ஆனால் விலையை சரியாக நிர்ணயம் செய்தாக வேண்டிய பொறுப்பு ஹோண்டாவிற்கு உள்ளது.

Article Published On: Friday, June 12, 2026, 14:22 [IST]
English summary
Honda accord all set to make a comeback in india reports strong hybrid engine adas
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out