ஹோண்டாவின் பாச்சா இனி பலிக்காதுனு நிறைய பேர் சொன்னாங்க! ஏப்ரலில் 700 கார்கள் கூடுதலாக விற்பனை!
ஹோண்டா கார்ஸ் (Honda Cars - HCIL) நிறுவனம் இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடி வருகிறது. இதற்காக, சிட்டி (City), அமேஸ் (Amaze) போன்ற வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹோண்டா கார்களை அறிமுகம் செய்தும் பயனில்லை. இந்தியாவில் தற்போதைக்கு சிட்டி, அமேஸ் மற்றும் எலிவேட் (Elevate) என்கிற மூன்று ஹோண்டா கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பினும், கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 21% வளர்ச்சியை கண்டுள்ளது. அதாவது, இந்தியாவில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் இந்த ஏப்ரல் மாதத்தில் 21% கூடுதல் எண்ணிக்கையிலான கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

நடந்து முடிந்த கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 938 ஆகும். இதில், 869 ஹோண்டா கார்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். மீதி 4 ஆயிரத்து 69 ஹோண்டா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
இதில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 4,069 கார்கள் எண்ணிக்கையில் தான் ஹோண்டா நிறுவனம் 21% வளர்ச்சியை கண்டுள்ளது. ஏனெனில், 2025 ஏப்ரலில் 3 ஆயிரத்து 360 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. ஆனால், அந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாக இருந்தது.

மொத்தம் ஆயிரத்து 511 யூனிட் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளிநாடுகளுக்கு ஹோண்டா ஏற்றுமதி செய்திருந்தது. அந்த மாதத்தில், உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து மொத்தமாக 4 ஆயிரத்து 871 கார்களை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 67 கார்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் கூடுதலாக விற்பனை செய்துள்ளது. இருப்பினும், புதிய 2026-27ஆம் நிதியாண்டை நேர்முகமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் குணால் பெஹ்ல், அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் என அனைத்து கார்களும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், "2026 ஏப்ரல் மாதத்தில் HCIL நிறுவனம் தனது உள்நாட்டு விற்பனையில் 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றார்.
ஹோண்டா நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும், ஹோண்டா சிட்டி ஆனது ஹைப்ரீட் (Hybrid) ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதேபோல், ஹோண்டா அமேஸ் காரும் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற மற்ற முன்னணி கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் ஹோண்டாவின் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கலாம். இருப்பினும், கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனையில் குறிப்பிடத்தக்க 21% வளர்ச்சியை கண்டுள்ளது. இது ஹோண்டா நிறுவனத்தின் மெதுவான முன்னேற்றத்தை காட்டுகிறது.
ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்த மே மாதத்தில் சிட்டி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்சன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் அறிமுகத்தினால் வரும் மாதங்களில் இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், இந்த மே மாதத்தில் இசட்.ஆர்-வி ஹைப்ரீட் (ZR-V Hybrid) என்கிற சற்று பிரீமியம் தரத்திலான கார் ஒன்றையும் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications