அடிமாட்டு விலையில் ஹோண்டா கார்கள்... ரூ.2.15 லட்சத்தை கழித்துவிட்டால், காரின் விலையில் ஒண்ணுமே இருக்காதே!
ஹோண்டா கார்ஸ் இந்தியா அதன் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சுமார் ரூ.2.15 லட்சம் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் இந்தியா என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. விற்பனை செய்யும் கார் மாடல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவில் அவ்வப்போது சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிக்கும் நிறுவனங்களுள் ஹோண்டாவும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டும் சலுகைகள், தள்ளுபடிகளை ஹோண்டா அறிவித்துள்ளது.

இந்த சலுகைகள் ஜூலை 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்ச ரூ.2.15 லட்சம் சலுகை ஆனது ஹோண்டாவின் காம்பாக்ட்டான SUV ரக காரான எலிவேட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோண்டாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார் மாடலாக எலிவேட் விளங்குகிறது.
இந்த நிலையில் தற்போது அதிரடியாக சுமார் ரூ.2.15 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது எலிவேட்டிற்கான கஸ்டமர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. அதேநேரம், எலிவேட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இந்த ரூ.2.15 லட்சம் சலுகையை பெற முடியாது. குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹோண்டா எலிவேட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11,59,890-இல் இருந்து துவங்குகின்றன. அதுவே, ஹோண்டாவின் காம்பாக்ட்டான செடான் வகையை சேர்ந்த காரான அமேஸ் வெறும் ரூ.7,51,390 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. அமேஸ் காருக்கு ஜூலை மாதத்தை முன்னிட்டு ரூ.67,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பழைய 2ஆம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரை வாங்குபவர்களுக்கு ரூ.58,000 வரையில் மட்டுமே சலுகைகள் கிடைக்கும். அதற்கேற்ப, பழைய அமேஸ் காரின் விலைகளும் இன்னும் குறைவாக ரூ.6,97,700-இல் இருந்து துவங்குகின்றன. எலிவேட், அமேஸ் கார்களை தவிர்த்து, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காருக்கு எந்தவொரு சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.
ஏனெனில், மிக சமீபத்தில்தான் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் ஷோரூம்களை வந்தடைய துவங்கின. இருப்பினும், இந்த புதிய காரில் லாயலிட்டி மற்றும் கார்ப்பிரேட் சலுகைகள் கிடைக்கும். அதாவது, ஏற்கனவே ஹோண்டா காரை வாங்கியவர்கள் மற்றும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சலுகைகள் உடன் இந்த காரை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான சலுகைகளுள் ஒன்று இது என்றாலும், இந்த சலுகைகளை பயன்படுத்தி இந்த ஜூலை மாதத்தில் குறைந்த விலையில் ஹோண்டா கார்களை வாங்கலாம். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும். இவ்வாறு சலுகைகளை அறிவிப்பதற்கு மத்தியில் புதிய அறிமுகங்களுக்கும் ஹோண்டா தயாராகி வருகிறது.
அந்த வகையில், ஹோண்டாவின் அடுத்த புதிய SUV காராக ZR-V களமிறக்கப்பட உள்ளது. முற்றிலுமாக வெளிநட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த கார் ஆனது ஹோண்டாவின் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரீட் கார் ஆகும். புதிய ZR-V காரில் 2 லிட்டர் என்ஜின் மற்றும் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications