பல வருஷா கார் மார்க்கெட்டில் இருந்தும் பெருசா வளரல! இந்தியாவில் 3 கார் மாடல் மட்டும்தான் சேல்ஸில் இருக்கு!
இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited), நடந்து முடிந்த கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 7,212 கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது வழக்கத்தை விட குறைவா, அதிகமா என்பது உள்ளிட்ட இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்திய கார்கள் சந்தையில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. சிட்டி (City), அமேஸ் (Amaze) போன்ற அருமையான மற்றும் தரமான கார்களை அறிமுகப்படுத்திய போதிலும் ஹோண்டாவால் இந்திய கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதை அதன் ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.

மற்ற ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகி (Suzuki), டொயோட்டா (Toyota) உள்ளிட்டவை மாதந்தோறும் பல ஆயிரக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் நிலையில், ஹோண்டா கடந்த பிப்ரவரி மாதத்தில் 7,212 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை 5,629 கார்கள் மட்டுமே ஆகும்.
மீதி 1,583 கார்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். அதுவே கடந்த 2025ஆம் ஆண்டில் இதே பிப்ரவரியில், ஹோண்டா 5,616 கார்களை உள்நாட்டு சந்தையிலும், 4,707 கார்களை ஏற்றுமதியும் செய்திருந்தது. கடந்த பிப்ரவரி மாத விற்பனை குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் திரு.குணால் பெஹ்ல் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "அமேஸ் காரின் பாதுகாப்பு மற்றும் நடைமுறை அம்சங்களால் விற்பனை வேகம் பிப்ரவரியிலும் தொடர்ந்தது. சிட்டி மற்றும் எலிவேட் (Elevate) கார் மாடல்கள் சலுகைகளுடன் நிலையான விற்பனையைப் பதிவு செய்துள்ளன. நிதி ஆண்டின் இறுதி மாதத்தை (மார்ச்) நெருங்குகையில், சந்தை குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்" என்றார்.
1995 டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் நிறுவப்பட்ட HCIL நிறுவனம், கிரேட்டர் நொய்டாவில் தலைமை அலுவலகத்தையும், ராஜஸ்தானின் தபுகராவில் உற்பத்தி ஆலையையும் கொண்டுள்ளது. ஹோண்டா கார்கள் மேம்பட்ட வடிவமைப்பு, தொழில்நுட்பம், நீடித்துழைப்பு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் திறனுக்கு உலகளவில் பெயர் பெற்றவையாக உள்ளன.
புதிய கார்களுக்கு அப்பால், ஹோண்டா ஆட்டோ டெரஸ் (Auto Terrace) மூலம் யூஸ்டு கார்களை வாங்கவும் விற்கவும் முழுமையான தீர்வை வழங்குகிறது. சான்றளிக்கப்பட்ட ஹோண்டா யூஸ்டு கார்கள், வாங்குபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தர உறுதி மற்றும் மன அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா தற்சமயம் பெரிதும் அதன் அமேஸ் காரையே சார்ந்துள்ளது. இதனாலேயே ஹோண்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் சில ஆயிரங்களாக பதிவாகி உள்ளது. இருப்பினும், இதையே பெரிய வளர்ச்சியாக ஹோண்டா கருதுவது குணால் பெஹ்லின் கருத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது. ஹோண்டா இவ்வாறான சிறு சிறு வளர்ச்சியுடன் நிற்காமல், முன்னணி கார் நிறுவனமாக வளர்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








