வெறும் 4 காரை வெச்சிக்கிட்டு ஹோண்டாவின் நிலைமை இப்படி ஆகிடுச்சே! முதல் எலெக்ட்ரிக் கார் கை கொடுக்குமா?
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 585 கார்களை விற்பனை செய்துள்ளது. மற்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், வெறும் 4 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து, ஒரே மாதத்தில் இத்தனை யூனிட் கார்களை விற்று இருப்பது பாராட்டத்தக்கதே. இருப்பினும், ஹோண்டாவின் 7,585 கார்கள் விற்பனை என்பது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வரும் நிறுவனம், ஹோண்டா கார்ஸ் என சொல்லலாம். ஏனெனில், சுஸுகி (Suzuki), டொயோட்டா (Toyota) போன்ற மற்ற ஜப்பானிய கார் நிறுவனங்கள் அளவிற்கு ஹோண்டாவால் இந்திய கார் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

ஹோண்டா சிட்டி (City), அமேஸ் (Amaze) உள்ளிட்ட சில கார்கள் இந்தியர்களை கவர்ந்தாலும் மற்ற ஹோண்டா கார்கள் பெரியதாக சோபிக்கவில்லை. இதன் வெளிப்பாடே இந்தியாவில் தற்போதைக்கு 4 கார் மாடல்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்வதாகும். இருப்பினும், ஏற்கனவே கூறியதுபோல் அந்த 4 கார் மாடல்களை வைத்தே கடந்த மார்ச் மாதத்தில் 7 ஆயிரத்து 585 யூனிட் கார்களை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இது 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 5% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 7 ஆயிரத்து 228 கார்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைகள் யாவும் உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்தவை ஆகும். இது இல்லாமல், கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 451 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஹோண்டா கார்ஸ் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை அதிகரித்து இருந்தாலும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. ஏனென்றால், 2025 மார்ச் மாதத்தில் 4 ஆயிரத்து 656 கார்களை இந்தியாவில் இருந்து ஹோண்டா ஏற்றுமதி செய்திருந்தது.
உள்நாட்டு விற்பனைக்கு இணையாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு ஏற்றுமதியும் முக்கியமாகும். ஏனெனில், இந்த நிறுவனத்திற்கு 25%-இல் இருந்து 30% விற்பனை வெளிநாட்டு ஏற்றுமதி மூலமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு வெளிநாடுகளுக்கு கார்களை உற்பத்தி செய்து அனுப்பவதற்காகவே இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுள் ஹோண்டாவும் ஒன்றாகும்.
இதனாலேயே ராஜஸ்தானில் உள்ள தபுகரா தொழிற்சாலையை பெரியதாக விரிவுப்படுத்தும் திட்டத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் உள்ளது. மேலும், இந்தியாவிற்கான புதிய கார்களை உற்பத்தி செய்வதற்காகவும் தபுகரா தொழிற்சாலையை ஹோண்டா விரிவுப்படுத்துகிறது. உள்நாட்டு விற்பனையில் 5% வளர்ச்சியை கண்டிருப்பதற்கு, அனைத்து ஹோண்டா கார் மாடல்களுக்கும் மக்கள் மத்தியில் உள்ள தேவையே காரணம் என ஹோண்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் துணை தலைவர் குணால் பெஹ்ல் கூறுகையில், குறிப்பாக அமேஸ் மற்றும் எலிவேட் (Elevate) கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், புதிய 2026-27ஆம் நிதியாண்டிற்குள் எங்களது முதல் பேட்டரி கார் உள்பட கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் திட்டங்களுடன் நுழைய ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு 4 கார் மாடல்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்தாலும், அவை நான்கும் தரமான தயாரிப்புகளாக விளங்குகின்றன. அதில் ஒரு கார், ஹைப்ரீட் (Hybrid) கார் வேற. இத்தகைய சூழலில் முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவது, இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








