28 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா காரின் டெலிவரி தொடங்கியது! அவர் கையால சாவியை வாங்க குடுத்து வெச்சிருக்கணும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த இந்த காருக்கு இந்திய சந்தையில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுதான் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் ஆகும்.
கடந்த 1998ம் ஆண்டு ஹோண்டா சிட்டி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 28 ஆண்டுகள் கடந்திருந்தாலும் கூட, ஹோண்டா சிட்டி இந்திய சந்தையில் இன்னமும் சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது. ஹோண்டா நிறுவனம் சிட்டி காரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டிருப்பது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

இந்த வரிசையில் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி (Delivery) பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) நகரில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப்களில் ஒன்றான வைட்ஃபீல்டு ஹோண்டா இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. வைட்ஃபீல்டு ஹோண்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் டெலிவரி செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலானது, நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வீடியோவில் நாம் பார்ப்பது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மாடல் ஆகும். அத்துடன் இந்த டெலிவரி நிகழ்ச்சியில் ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான டகசி நகஜிமா (Takashi Nakajima) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்டெப் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், 6 ஸ்பீடு மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 17.77 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. மறுபக்கம் 7 ஸ்டெப் சிவிடி மாடல் ஒரு லிட்டருக்கு 17.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் ஆகும்.
இதனுடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 27.26 கிலோ மீட்டராக உள்ளது. இவை அனைத்தும் ஹோண்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதிநவீன வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.
இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மறுபக்கம் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரை, 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் (Level-2 Advanced Driver Assistance System - ADAS), 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை எல்லாம் இதன் முக்கிய அம்சங்களாகும்.
இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் போட்டி மாடல்கள் எதிலும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின்கள் இல்லை. இது ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.


Click it and Unblock the Notifications