அக்டோபரில் வருகிறது புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்? என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
இந்தியாவில் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது எலிவேட் எஸ்யூவிக்கு முக்கியமான அப்டேட்டுகளை வழங்க தயாராகி வருகிறது. இதன்படி, புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய அப்டேட்டுகள் நிச்சயம் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் அமையும் என தெரிகிறது. இது புதிய தலைமுறை மாடலாக இல்லாமல், தற்போதைய காரின் தோற்றம், வசதிகள் மற்றும் கேபின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இடைக்காலத்திற்கான மாற்றங்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

(Representational Image)
டிசைன் மாற்றம்
எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முகப்பு வடிவமைப்பில் சில மாற்றங்கள் இடம்பெறலாம். குறிப்பாக, எல்இடி ஹெட்லைட், புதிய கிரில் மற்றும் மறுவடிவமைப்புடன் புதிய பம்பர் அமைப்பு இடம்பெறும். தவிரவும், புதிய டிசைனில் 17 அங்குல அலாய் வீல்களும் வழங்கப்படலாம். சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டியின் வடிவமைப்பு மாற்றங்களைப் போலவே, எலிவேட்டிலும் பெரிய அளவிலான மாற்றங்களை விட சிறிய ஆனால் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.
கேபினில் புதிய வசதிகள்
தற்போதைய எலிவேட்டின் கேபின் லேஅவுட் பெரும்பாலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மூலமாக உட்புறம் புதுப்பொலிவு பெறும். முக்கியமாக, போட்டியாளர்களிடம் ஏற்கனவே கிடைக்கும் சில வசதிகளை ஹோண்டா புதிதாக சேர்க்க வாய்ப்புள்ளது. வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா இதில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.
தற்போதைய எலிவேட்டில் 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் சீட் வசதிகள் டீலர் மூலமாக கூடுதல் ஆக்சஸெரீகளாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பனோரமிக் சன்ரூஃப், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதே எஞ்சின்
எலிவேட் ஃபேஸ்லிஃப் மாடலில் தற்போதைய 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 எச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டியில் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன் இடம்பெற்றிருந்தாலும், எலிவேட்டில் இதுவரை அந்த ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. எனினும், புதிய எலிவேட் எஸ்யூவியில் இந்த வசதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், தற்போது ஹைப்ரிட் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இந்த தொழில்நுட்பத்தை ஹோண்டா வழங்கும் வாய்ப்பு உள்ளது.
விலை அதிகரிக்க வாய்ப்பு
புதிய வசதிகள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக, தற்போதைய மாடலைவிட ஃபேஸ்லிஃப்ட் எலிவேட் எஸ்யூவியின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். தற்போதைய எலிவேட் எஸ்யூவிக்கு ரூ.11.81 லட்சம் முதல் ரூ.16.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, மாருதி விக்டோரிஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications


