ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்: அக்டோபர் 6ல் அறிமுகம்... எதிர்பார்க்கப்படும் 7 முக்கிய மாற்றங்கள்!
ஹோண்டா எலிவேட் எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட மாடல் வரும் 6-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவு ஹோண்டா டீலர்களில் நேற்றுமுதல் துவங்கப்பட்டுள்ளது. ரூ.21,000 முன்பதிவுத் தொகையுடன் வாடிக்கையாளர்கள் புதிய எலிவேட்டை முன்பதிவு செய்யலாம்.
சர்வதேச அளவில் இந்த புதுப்பிக்கட்ட ஹோண்டா எலிவேட் கார் இந்தியாவில்தான் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த காரில் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய அம்சங்கள் மற்றும் மாற்றங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. புதிய முன்பக்க வடிவமைப்பு
ஹோண்டா வெளியிட்டுள்ள முன்னோட்ட காணொளியில் புதிய பொலிவுடன் கூடிய முகப்பு கொடுக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. புதிய முன்பக்க கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் ஹோண்டா லோகோவும் பானட்டில் இடம்பெறுகிறது. மேலும், புதிய வடிவமைப்பில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படும். இதன் மூலம் தற்போதைய எலிவேட்டை விட புதிய மாடல் கூடுதல் வசீகரமான தோற்றத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. புதிய விளக்கு அமைப்பு
புதிய எலிவேட்டில் முன்பக்கத்தில் மாற்றியமைக்கப்பட்ட எல்இடி விளக்கு அமைப்பு இடம்பெறுவது முன்னோட்ட காணொளி மூலம் தெரியவந்துள்ளது. பின்புறத்திலும் இணைக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்ட புதிய எல்இடி பின்விளக்குகள் இடம்பெறலாம். இதன் மூலம் எலிவேட்டின் ஒட்டுமொத்த தோற்றம் மேலும் நவீனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. மேம்படுத்தப்பட்ட உட்புறம்
வெளிப்புற மாற்றங்களுடன் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு, புதிய அலங்கார அம்சங்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம். இதன் மூலம் தற்போதைய எலிவேட்டை விட புதிய மாடலின் உட்புறமும் கூடுதல் பிரிமீயம் தோற்றத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. 360 டிகிரி கேமரா
தற்போது எலிவேட்டில் 360 டிகிரி கேமரா கூடுதல் உபகரணமாக வழங்கப்படுகிறது. இதனை புதிய மாடலில் நேரடியாக வாகனத்திலேயே பொருத்தப்பட்ட வசதியாக ஹோண்டா வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத்தை குறுகிய இடங்களில் நிறுத்தும்போதும், நகரப் போக்குவரத்தில் இயக்கும்போதும் இந்த வசதி ஓட்டுநர்களுக்கு கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்.
5. வென்டிலேட்டட் முன் இருக்கைகள்
குளிர்ச்சியை தரும் வசதியுள்ள முன் இருக்கைகளும் புதிய எலிவேட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். தற்போதைய மாடலில் இந்த வசதி கூடுதல் உபகரணமாகக் கிடைக்கிறது. புதிய மாடலில் அதிக விலை கொண்ட வகைகளில் இந்த வசதியை ஹோண்டா நேரடியாக வழங்கக்கூடும். குறிப்பாக கோடை காலத்தில் நீண்ட பயணங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
6. கூடுதல் வசதிகள்
புதிய எலிவேட்டில் 2 ஸோன் தானியங்கி குளிர்சாதன வசதி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிய அளவிலான சன்ரூஃப் அமைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே அறிமுக நாளில் முழுமையான விபரங்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
7. எஞ்சின் தேர்வு
புதிய எலிவேட்டில் தற்போதைய 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் இயற்கையான காற்று உட்செலுத்தும் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் தொடரும். ஹைப்ரிட் மாடல் இப்போதைக்கு இருக்காது என்று தெரிகிறது.
கூடுதல் மதிப்பு
ஹோண்டா எலிவேட் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக இல்லாமல் சிறிய மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மாடலாகவே வர இருக்கிறது. தோற்றம், உட்புற வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மேம்பாடுகளைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக 360 டிகிரி கேமரா, குளிர்ச்சி தரும் வசதியுள்ள இருக்கைகள் உள்ளிட்டவை நேரடியாக வழங்கப்பட்டால், எலிவேட்டின் வசதிகள் மேலும் அதிகரிக்கும். விலை மற்றும் முழுமையான அம்சங்கள் குறித்த விபரங்கள் வரும் 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications


