புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்: வேரியண்ட் வாரியாக விலை, வசதிகள் விபரம்
ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான எலிவேட் எஸ்யூவி காரை குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக அறிமுகம் செய்துள்ளது. புதிய முன்பக்க வடிவமைப்பு, இணைக்கப்பட்ட எல்இடி பின்புற விளக்குகள், மேம்படுத்தப்பட்ட உட்புறம் மற்றும் கூடுதல் வசதிகள் இதன் முக்கிய மாற்றங்களாக உள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ.11.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய எலிவேட் எஸ்வி (SV), வி (V), விஎக்ஸ் (VX), இசட்எக்ஸ் (ZX), இசட்எக்ஸ் பிளஸ் (ZX Plus) மற்றும் இசட்எக்ஸ் பிளஸ் பிளாக் (ZX Plus Black) என ஆறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. எஸ்வி வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது. மற்ற வேரியண்ட்டுகளில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

SV வேரியண்ட்
அடிப்படை அம்சங்கள் கொண்ட எஸ்வி வேரியண்ட்டிற்கு ரூ.11.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய மெஷ் கிரில், எல்இடி டெயில்லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் வீல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஏசி, பின்புற ஏசி வென்ட்டுகள் மற்றும் பிஎம்2.5 கேபின் ஏர் ஃபில்டர் ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பிலும் அடிப்படை வேரியண்ட் குறைவில்லாமல் உள்ளது. ஆறு ஏர்பேக்குகள், வாகனத்தின் நிலைத்தன்மையை பராமரிக்கும் தொழில்நுட்பம், சக்கரங்கள் தேவையில்லாமல் சுழல்வதை கட்டுப்படுத்தும் வசதி, மேடான பகுதியில் கார் பின்னோக்கி வராமல் தவிர்க்க உதவும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.

V வேரியண்ட்
அடுத்து வி வேரியண்ட்டின் மேனுவல் மாடல் ரூ.12.29 லட்சத்திலும், சிவிடி ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.13.79 லட்சத்திலும் கிடைக்கிறது. இதில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஹோண்டா கனெக்ட் ஆப் வசதி, பின்புற கேமரா மற்றும் பின்புற பயணிகளுக்கான யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வசதிகள் உள்ளன.
சிவிடி மாடலில் ஸ்டீயரிங் அருகே கியரை மேனுவலாக மாற்ற உதவும் பேடில் ஷிஃப்டர்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சிக்னலில் பிரேக்கை தொடர்ந்து அழுத்தாமல் காரை நிறுத்தி வைக்கும் ஆட்டோ பிரேக் ஹோல்டு மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கின்றன. நகரப் போக்குவரத்தில் அதிகம் பயணிப்பவர்களுக்கு இந்த வசதிகள் பயனுள்ளதாக இருக்கும்.

VX வேரியண்ட்
விஎக்ஸ் வேரியண்ட்டின் மேனுவல் மாடல் ரூ.13.93 லட்சத்திலும், சிவிடி மாடல் ரூ.15.39 லட்சத்திலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டிலிருந்து பிரீமியம் வசதிகள் கணிசமாக அதிகரிக்கின்றன. 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஒரே தொடுதலில் திறக்கும் எலக்ட்ரிக் சன்ரூஃப், இணைக்கப்பட்ட எல்இடி பின்புற விளக்குகள் மற்றும் கேபினுக்கான ஆம்பியன்ட் விளக்குகள் வழங்கப்படுகின்றன.
மேலும், கேபினுக்குள் காற்றின் தரத்தை காட்டும் பிஎம்2.5 குறியீடு, தானியங்கி காற்று சுத்திகரிப்பு வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர், காரின் இடதுபுறத்தை கேமரா மூலம் பார்க்க உதவும் லேன்வாட்ச் கேமரா, ஆறு ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் எல்இடி புரொஜெக்டர் பனி விளக்குகள் கிடைக்கின்றன.

ZX வேரியண்ட்
இசட்எக்ஸ் வேரியண்ட்டின் மேனுவல் மாடல் ரூ.15.39 லட்சத்திலும், சிவிடி மாடல் ரூ.16.89 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 17 அங்குல அடர் வண்ணப்பூச்சுடன் அலாய் வீல்கள், முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள், 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.
இந்த வேரியண்ட்டில் ஹோண்டா சென்சிங் ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் கிடைக்கிறது. முன்னால் செல்லும் வாகனத்திற்கு ஏற்ப வேகத்தை மாற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், காரை பாதைக்குள் வைத்திருக்க உதவும் லேன் கீப் அசிஸ்ட், மோதலை தவிர்க்க உதவும் பிரேக்கிங் வசதி மற்றும் ஆட்டோ ஹைபீம் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
ZX Plus வேரியண்ட்
டாப் வேரியண்ட்டான இசட்எக்ஸ் பிளஸ் மேனுவல் மாடலின் விலை ரூ.16.80 லட்சமாகவும், சிவிடி மாடலின் விலை ரூ.18.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுனருக்கான 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை, முன்புற பயணிக்கான 4 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை மற்றும் பின்புறத்திற்கு வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், காரை சுற்றியுள்ள பகுதிகளை திரையில் பார்க்க உதவும் 360 டிகிரி கேமரா மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் இந்த வேரியண்ட்டின் கூடுதல் வசதிகளாகும். குறுகிய இடங்களில் காரை நிறுத்தும்போது இவை பயனுள்ளதாக இருக்கும்.
ZX Plus Black வேரியண்ட்
இசட்எக்ஸ் பிளஸ் பிளாக் வேரியண்ட்டின் மேனுவல் மாடல் ரூ.16.90 லட்சத்திலும், சிவிடி மாடல் ரூ.18.40 லட்சத்திலும் கிடைக்கிறது. வழக்கமான இசட்எக்ஸ் பிளஸ் வேரியண்ட்டில் உள்ள அனைத்து முக்கிய வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற அலங்காரங்கள் இதன் முக்கிய தனிச்சிறப்பாக இருக்கின்றன.
இதில் பளபளப்பான கருப்பு நிறத்திலான 17 அங்குல அலாய் வீல்கள், முழுமையான கருப்பு நிற உட்புறம், கருப்பு லெதர் இருக்கைகள் மற்றும் கருப்பு நிற அலங்கார பாகங்கள் வழங்கப்படுகின்றன. வழக்கமான இசட்எக்ஸ் பிளஸ் வேரியண்ட்டை விட ரூ.10,000 மட்டுமே கூடுதல் என்பதால், தனித்துவமான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும்.

எலிவேட் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்
புதிய எலிவேட் எஸ்யூவியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் தொடர்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 எச்பி பவரையும் 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
எந்த வேரியண்ட் வாங்கலாம்?
குறைந்த பட்ஜெட்டில் எலிவேட் வாங்க நினைப்பவர்களுக்கு எஸ்வி போதுமானதாக இருக்கும். கூடுதல் கனெக்டிவிட்டி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைப்படுபவர்களுக்கு வி வேரியண்ட் பொருத்தமானது. சன்ரூஃப் மற்றும் கூடுதல் கேபின் வசதிகள் முக்கியம் என்றால் விஎக்ஸ் வேரியண்ட்டை பரிசீலிக்கலாம். பாதுகாப்பு மற்றும் பிரீமியம் வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இசட்எக்ஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.
மொத்தத்தில் புதிய ஹோண்டா எலிவேட்டின் முக்கியமான மாற்றங்கள் உயர் வேரியண்ட்டுகளில் அதிகமாக உள்ளன. குறிப்பாக மேம்பட்ட ஓட்டுனர் உதவி வசதிகள், முன்புறம் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை நடைமுறை பயன்பாட்டில் சிறப்பான அனுபவத்தை தரும். பட்ஜெட் பிரச்னை உள்ளவர்களுக்கு அடிப்படை வேரியண்ட்டிலேயே போதுமான வசதிகளை பெறும் வாய்ப்புள்ளது. நடைமுறை பயன்பாட்டில் அதிக வசதிகளையும், பாதுகாப்பையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இசட்எக்ஸ் பிளஸ் சிறந்த மதிப்பை தரும்.


Click it and Unblock the Notifications



