ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியா ஹோண்டா வெளியிடும் புதிய எஸ்யூவி
கடந்த மாதம் தான் அப்டேட் செய்யப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் (City Facelift) மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா (Honda). தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் எலிவேட் (Elevate) மிட்-சைஸ் எஸ்யூவியை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் காரை ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யவும் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய கார் குறித்த கூடுதல் தகவல்கள் இப்போது நமக்குத் தெரிய வந்திருக்கின்றன.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு துணை முதல்வரான குனால் பெல், அப்டேட் செய்யப்படும் எலிவேட் எஸ்யூவியில் ஹோண்டா மேற்கொள்ளும் மாற்றங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். அதில் தான் புதிய கார் குறித்த தகவல்களையும், இந்தியவில் ஹோண்டாவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில், புதிய எலிவேட் எஸ்யூவி காரில் 360 டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், ஆம்பியன்ட் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளைக் கூடுதல் தேர்வாகவே ஹோண்டா கொடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிறைய கார்களில் இந்த வசதிகள் குறிப்பிட்ட வேரியன்ட்களுடன் ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே புதிய எலிவேட் எஸ்யூவியின் இடைநிலை மற்றும் உயர்நிலை வேரியன்ட்களில் 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் ஆகிய வசதிகளை ஸ்டாண்டர்டாகக் கொடுக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது. மேலும் இதுவரை லெவல் 2 ADAS வசதியானது எலிவேட்டின் டாப் எண்டு வேரியன்டில் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. அதனை புதிய காரில் கூடுதல் வேரியன்ட்களில் கொடுக்கவும் ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.

வெளிப்புற டிசைனைப் பொறுத்தவரை, புதிய எலிவேட் எஸ்யூவியின், கிரில், முகப்பு விளக்குகள், DRLகள், முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், அலாய் வீல்கள் ஆகியவை புதிய வடிவில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த மாற்றங்களை ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட எலிவேட் எஸ்யூவி மாடலை புதிதாகக் காட்ட உதவும்.
இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 1.5 லிட்டர், NA பெட்ரோல் இன்ஜின் தேர்வை மட்டுமே புதிய எலிவேட் எஸ்யூவி காருடனும் கொடுக்கவுள்ளது ஹோண்டா. கூடுதல் இன்ஜின் தேர்வுகளைக் கொடுப்பதைக் குறித்து அந்நிறுவனம் பரிசீலனை செய்யலாம். ஆனால் ஏனோ செய்யவில்லை. எலிவேட்டுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் முன்னணி கார்களில் எல்லாம் குறைந்தபட்சம் மூன்று இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
121 hp பவர் மற்றும் 145 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ஹோண்டா. புதிய காரிலும் இதே கியர்பாக்ஸ் தேர்வுகள் அப்படியே தொடரும் என்றே தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் மேம்படுத்தப்பட்ட புதிய எலிவேட் எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மிட்-சைஸ் எஸ்யூவியை வெளியிடுவதைத் தவிர்த்து, சப்-காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் திட்டமும் ஹோண்டாவிடம் இருக்கிறது. இந்தியாவில் அதிக கார்கள் விற்பனையாகும் பிரிவாக அதுவே இருக்கிறது. ஆனால் அதில் ஹோண்டாவின் பெயர் சொல்லும் போட்டியாளர்கள் இல்லை என்பது வருத்தம் தான். அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது ஹோண்டா.
இந்தியாவில் தற்போது சிட்டி (மிட்-சைஸ் செடான்), அமேஸ் (சப்-காம்பேக்ட் செடான்) மற்றும் எலிவேட் (மிட்-சைஸ் எஸ்யூவி) ஆகிய மூன்று கார்களை விற்பனை செய்து வருவதோடு, ZR-V என்ற ப்ரீமியம் எஸ்யூவியையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. கடந்த மாதம் தான் இந்த ZR-V-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. தற்போது இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலிவேட் சிறப்பான ஒரு கார் தான். ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது தனித்துத் தெரியும் வகையிலான அம்சங்கள் எதுவும் இல்லை. மற்ற கார்களில் அடிப்படையாகக் கிடைக்கும் நிறைய வசதிகளை இன்னுமே கூட எலிவேட்டில் ஹோண்டா கொடுக்காதது பெரிய ஆச்சரியம் தான். மேலும், மேலே கூறியது போல ஒரே ஒரு இன்ஜின் தேர்வு என்பது போதவே போதாது. அதனை ஹோண்டா உணரும் போது தான் எலிவேட்டின் விற்பனையிலும் மாற்றம் வரும்.


Click it and Unblock the Notifications