ரேஞ்ச் முக்கியம் பிகிலு... முதல் EV காரை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா தீவிரம்... எப்போது அறிமுகம்?
இந்திய வாகன சந்தையில் மின்சார கார்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, எம்ஜி மோட்டார் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பல புதிய மின்சார மாடல்களை சந்தையில் களமிறக்கி வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றன. இந்த சூழலில், ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் இந்திய மின்சார வாகன சந்தையில் தனது கால்தடத்தை பதிக்க தீவிரமாகத் தயாராகி வருகிறது.
தற்போது வரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் மாடல்களான அமேஸ், எலிவேட் மற்றும் சிட்டி கார்களை மட்டுமே விற்பனை செய்து வரும் ஹோண்டா, தனது முதல் மின்சார எஸ்யூவி (Electric SUV) மாடலை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அல்லது வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

எலிவேட் பிளாட்ஃபார்ம்
ஹோண்டா நிறுவனம் தனது புகழ்பெற்ற எலிவேட் மிட்சைஸ் எஸ்யூவி மாடலின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மின்சார எஸ்யூவியை உருவாக்கி வருவதாக வாகன துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ACE' (Asian Compact Electric) என்ற திட்டத்தின் கீழ் இந்த எலக்ட்ரிக் காரின் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் எலிவேட் காரின் கட்டமைப்பு, அதன் வலுவான உருவாக்கம் மற்றும் உள்நாட்டு சாலைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, அதே பிளாட்ஃபார்மில் பேட்டரி மற்றும் மின்சார மோட்டாருக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்து, குறைந்த செலவில் சிறந்த எலக்ட்ரிக் காரை வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
ரேஞ்ச் முக்கியம் பிகிலு
இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை மின்சார கார் வாங்கும் போது முதன்மையாக கவனிப்பது அதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதை கருத்தில்கொள்கின்றனர். நகரப் பயன்பாடு மட்டுமின்றி, நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனை மனதில் வைத்து புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 50kWh முதல் 60kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 450 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைப் பயணங்களின் போது விரைவாக சார்ஜ் செய்ய ஏதுவாக 'டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்' (DC Fast Charging) செய்யும் வாய்ப்புடன் இந்த எஸ்யூவி வருகிறது.
இந்திய சாலைகளுக்கு ஏற்ற அம்சங்கள்
இந்திய நகர்ப்புற சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகளை எளிதில் கடக்க ஏதுவாக, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும். மேலும், காரின் உள் பகுதியில் பின்புற இருக்கை பயணிகளுக்கு போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதி அளிக்கப்படும் வகையில் இதன் வீல்பேஸ் நீளம் வடிவமைக்கப்படும்.
காரின் உட்புறத்தில் நவீன தொடுதிரை தகவமைப்பு அமைப்பு (Infotainment System), டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்டட் வசதியுடன் இருக்கைகள் (Ventilated Seats) மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
இந்த புதிய ஹோண்டா எலக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (ABS), இபிடி (EBD), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ISOFIX குழந்தைகள் இருக்கை பொருத்துவதற்கான ஆங்கர்கள் ஆகியவை வழங்கப்படும். ஹோண்டாவின் அதிநவீன 'ஹோண்டா சென்சிங்' (Honda Sensing) என்று அழைக்கப்படும் ஏடிஏஎஸ் (ADAS) தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது. இது லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் தானியங்கி அவசரகால பிரேக்கிங் போன்ற வசதிகள் மூலம் நெடுஞ்சாலைகளில் ஓட்டுனருக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும்.
எதிர்பார்க்கப்படும் விலை
ஹோண்டா நிறுவனம் இந்த காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதால், இதன் விலையை மிகவும் சவாலாக நிர்ணயிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.22 லட்சத்திற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இது டாடா கர்வ் EV, எம்ஜி ZS EV, மாருதி இ-விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய பிரபல மாடல்களுக்கு கடுமையான போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications


