காட்சிகள் மாறுது... கார் தயாரிப்பில் டாடாவுடன் கைகோர்க்கத் துடிக்கும் ஹோண்டா, ஹூண்டாய்!

ஒரு காலத்தில் இந்தியாவில் கார் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களுக்காக வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சார்ந்திருந்தனர். வெளிநாட்டு நிறுவனங்களிடம் தொழில்நுட்ப உரிமம் பெற்று, அவர்களது உதவியுடன் கார்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிலை இருந்தது. ஆனால், இன்று இந்தியாவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வாகன உற்பத்தி, பொறியியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு எனப் பல துறைகளில் இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தியாவின் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையும், உற்பத்தித் திறனும் தற்போது உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களையே இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தூண்டியுள்ளன. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் புதிய கார் உருவாக்கம், உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tata Hyundai Honda Collaboration

ஹோண்டா - டாடா இடையே பேச்சுவார்த்தை

கடந்த 2025ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், ஜப்பானில் ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். இதில் ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ மிபே மற்றும் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பில் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து தொழில்நுட்பங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஹோண்டா நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, டாடா டெக்னாலஜிஸ், டாடா ஆட்டோகாம்ப், பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அக்ரடாஸ், டாடா எலெக்ஸி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் டாடா டெக்னாலஜிஸ், டிசிஎஸ் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

Also Read

இதில் டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் கார்களை ஹோண்டா நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முக்கியமானதாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் கார்களுடன் மின்சார வாகனங்களையும் இந்தக் கூட்டணியின் கீழ் பகிர்ந்துகொள்வது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனமும் டாடாவுடன் பேச்சுவார்த்தை

ஹோண்டாவைத் தொடர்ந்து தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனமும் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜோஸ் முனோஸ், டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனை மும்பையில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாகக் கூறப்பட்டாலும், எதிர்கால வர்த்தக ஒத்துழைப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

ஹூண்டாய் மோட்டார் குழுமம் இந்தியாவில் தனது உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் திறனை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டு முதல் வரும் 2032ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி, உள்ளூர் உதிரிபாக உற்பத்தி மற்றும் எதிர்கால வாகனத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

Also Read

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் 26 புதிய கார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் ஹூண்டாய் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் டாடா குழுமத்தின் உதிரிபாக உற்பத்தி, பொறியியல் சேவைகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஹூண்டாய்க்கு பயனுள்ளதாக அமையலாம்.

ஒரு புதிய காரை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆராய்ச்சி, பொறியியல் மேம்பாடு மற்றும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள வாகனத் தளம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் இந்தச் செலவுகளைக் குறைக்க முடியும். மேலும், புதிய கார்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டுவருவதுடன், உதிரிபாகங்களின் உள்ளூர் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.

டாடா குழுமம் வாகன உற்பத்தி மட்டுமின்றி, பேட்டரி தயாரிப்பு, உதிரிபாகங்கள், பொறியியல் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இதனால், ஒரே குழுமத்தின் கீழ் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளைப் பெற முடியும். சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும் என தெரிகிறது.

ஸ்டெல்லாண்டிஸுடன் கூட்டணி

டாடா மோட்டார்ஸ் ஏற்கெனவே ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்துடன் வாகனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, டாடாவின் வாகனத் தொழில்நுட்பம் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி ஜீப் உள்ளிட்ட பிராண்டுகளுக்கான புதிய மாடல்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் கூட்டணியின் கீழ் உருவாகும் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு சர்வதேசச் சந்தைகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தனது வாகனத் தொழில்நுட்பத்தை மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் வழங்கும் முக்கிய நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. இதேபோன்ற ஒத்துழைப்பு ஹோண்டா, ஹூண்டாய் நிறுவனங்களுடனும் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் வாகன உற்பத்தித் துறைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். தவிரவும், நிஸானும் டாடாவுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை நம்பியிருந்த இந்திய வாகனத் துறை, இன்று சர்வதேச நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஒத்துழைப்பை வழங்கும் நிலையை எட்டியுள்ளது. ஹோண்டா, ஹூண்டாய் நிறுவனங்களுடன் டாடா குழுமத்தின் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு முன்னேறுகின்றன என்பது முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது. இவை ஒப்பந்தங்களாக மாறினால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் சர்வதேச முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.

Via- Autocarindia

Article Published On: Thursday, November 19, 2026, 13:19 [IST]
English summary
Honda hyundai talks with tata motors for car development platforms technology collaboration india
மேலும்... #tata motors #hyundai #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out