மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கை ரீபேட்ஜ் செய்து களமிறக்கும் ஹோண்டா... இந்தியாவுக்கும் வர வாய்ப்பு?
கார்கள், பைக்குகள் எனப் பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வரும் ஹோண்டா நிறுவனம், அடுத்ததாகப் பிக்கப் டிரக் சந்தையிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது. இதற்காகப் புதிதாக ஒரு வாகனத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, மிட்சுபிஷி நிறுவனத்தின் பிரபலமான டிரைட்டன் பிக்கப் டிரக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த வாகனம் வரும் 2028ம் ஆண்டு தென்கிழக்கு ஆசியச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இந்த கூட்டணிக்காக கடந்த 22ந் தேதி மிட்சுபிஷி மற்றும் ஹோண்டாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், மிட்சுபிஷியின் வாகனத் தயாரிப்பு அனுபவத்தையும் ஹோண்டாவின் பிராண்ட் மதிப்பையும் இணைத்து புதிய பிக்கப் டிரக்கை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபலமான மாடல்
மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக் ஒரு டன் சுமையை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. வலுவான ஏணி வடிவச் சட்டக அமைப்பைக் (Ladder-frame chassis) கொண்ட இந்த வாகனம், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் கடினமான சாலை நிலைகளில் பயணிப்பதற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியச் சந்தைகளில் மிட்சுபிஷி நிறுவனத்தின் முக்கிய மாடலாகவும் இருக்கிறது.
இந்த டிரக்கை அடிப்படையாகக் கொண்டு ஹோண்டா புதிய மாடலை உருவாக்குவதால், வாகனத்தைத் தொடக்கம் முதல் வடிவமைத்து உருவாக்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க முடியும். அதேசமயம், ஹோண்டா பிராண்டுக்கு ஏற்ற வகையில் வெளிப்புறத் தோற்றம், உட்புற அமைப்பு மற்றும் வசதிகளில் மாற்றங்கள் இடம்பெறும்.
ஹோண்டாவின் ஆசை
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிக்கப் டிரக் ரக வாகனங்களுக்கு வணிகப் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்து மற்றும் தனிப்பட்ட பயன்பாடு எனப் பல்வேறு தேவைகளுக்காக அதிக வரவேற்பு உள்ளது. எனவே, இந்த சந்தையில் நுழைவதற்கு ஹோண்டா நிறுவனமும் முடிவு செய்துள்ளது. ஆனால், புதிதாக ஒரு பிக்கப் டிரக்கை உருவாக்குவதற்கான கால அளவு அதிகம் என்பதால், மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கின் அடிப்படையாகக் கொண்டு தனது மாடலை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், மிட்சுபிஷி டிரைட்டன் பிக்கப் டிரக்கிற்கு ஏற்கனவே இருக்கும் அறிமுகம், நம்பகத்தன்மை போன்றவையும் ஹோண்டாவுக்கு கூடுதல் பலமாக அமையும். வெளிப்புறத் தோற்றத்திலும், வசதிகளிலும் மட்டுமே அதிக மாற்றங்கள் இருக்கும். அதேவேளை, எஞ்சின், கியர்பாக்ஸ் போன்றவை தக்க வைக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவுக்கும் வர வாய்ப்பு?
இந்தியாவில் பிக்கப் டிரக் சந்தை வணிகப் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. டொயோட்டா ஹைலக்ஸ், இசுஸு வி க்ராஸ் போன்ற வாகனங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பிரீமியம் பிக்கப் பிரிவில் உள்ளன. மேலும், மஹிந்திராவும் கூட ஸ்கார்ப்பியோ அடிப்படையில் புதிய பிரிமீயம் ரக பிக்கப் டிரக்கை களமிறக்க உள்ளது.
எனவே, இந்த பிரிமீயம் பிக்கப் டிரக் சந்தை மெதுவாக வலுப்பெற்று வருகிறது. எனவே, இந்தியாவிலும் ஹோண்டா தனது பிக்கப் டிரக்கை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது நிச்சயம் ஹோண்டாவிற்கு கூடுதல் விற்பனை எண்ணிக்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தரும் என்று நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிதாக ஒரு வாகனத்தை உருவாக்கி அதனை சந்தைப்படுத்ததுவதில் அதிக காலமும், ரிஸ்க்கும் உள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் மிட்சுபிஷி கூட்டணியில் இந்த புதிய பிக்கப் டிரக்கை ஹோண்டா தயாரிக்கிறது. ஹோண்டாவுக்கு இந்தக் கூட்டணி புதிய சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications


