இந்தியாவில் வெளியாகும் புதிய ஹோண்டா எஸ்யூவி.. மைலேஜ் தரமா கொடுக்கும்
இந்தியாவில் இதுவரை வெளியிடப்படாத புதிய கார் ஒன்றை ஹோண்டா விரைவில் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் புதிய டீஸர் ஒன்றை ஹோண்டா வெளியிட்டுள்ளது. இந்த டீஸரை வைத்தே புதிய கார் என்ன என்பதை நம்மால் கூறி விட முடியும். அது வேறெதுவும் இல்லை வெளிநாடுகளில் ஹோண்டா விற்பனை செய்து வரும் ZR-V எஸ்யூவி தான்.
இந்தக் காரை எதிர்பார்த்ததைப் போலவே வரும் மே 22ம் தேதியன்று ZR-V e:HEV என்ற பெயரில் வெளியிடவுள்ளது ஹோண்டா. அதாவது அடுத்த சில நாட்களில் இந்தப் புதிய ஹோண்டா காரை நாம் பார்த்துவிடலாம். இது சற்று ப்ரீமியமான கார் என்பதால் CBU (Completely Built Unit) முறையில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட வடிவில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படவுள்ளது. இதனால் சற்று கூடுதல் விலையில் இது வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்த ZR-V எஸ்யூவியை 40 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய்க்கு உள்ளான விலையில் ஹோண்டா வெளியிடலாம் எனத் தெரிகிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ப்ரீமியமான எஸ்யூவிக்களான ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த ஹோண்டா ZR-V விற்பனை செய்யப்படவுள்ளது.
வெளிநாட்டில் இருந்து முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுவதால் அங்கே விற்பனை செய்யும் அதே அம்சங்களுடனேயே இந்தப் புதிய கார் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பேட்டரி செட்டப் அடங்கிய ஹைபிரிட் பவர்ட்ரெயின் பயன்படுத்தப்பட்டிருக்கும். e-CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த பவர்ட்ரெயினானது 180 hp பவர் மற்றும் 240 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.

இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயினின் உதவியுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 8 நொடிகளில் அடையும் திறனை புதிய ZR-V எஸ்யூவி கொண்டிருக்கும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 170 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் பெற்றிருக்கும். இந்த அதிகபட்ச வேகம் எலெக்ட்ரானிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாடர்னான, ஸ்டைலான எஸ்யூவியாக, அனைத்து வகையான ப்ரீமியமான வசதிகளையும் கொண்ட எஸ்யூவியாக இந்த ஹோண்டா ZR-V இருக்கும். 4,568 மிமீ நீளம், 1,840 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரத்துடன் நல்ல இடவசதி கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவியாகவும் புதிய ZR-ன V எஸ்யூவி இருக்கும். 180 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் இந்திய சாலைகளுக்குப் போதுமனதாகவே இருக்கும். ஒரு ப்ரீமியம் எஸ்யூவிக்கு 390 லிட்டர் பூட் ஸ்பேஸ் குறைவு தான். ஆனால் அதற்கேற்ப காரினுள் நல்ல இடவசதி பயணிகளுக்கு இருக்கும்.
டேஷ்போர்டில் இரண்டு ஸ்கிரீன்கள், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகள் இந்த ZR-V எஸ்யூவியில் இருக்கும். இது ஒரு ப்ரீமியமான 5 சீட்டர் கார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு ஹேலோ தயாரிப்பாக இந்த ZR-V எஸ்யூவியை ஹோண்டா வெளியிடுகிறது. இது வாடிக்கையாளர்களின் மனதில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது ஹோண்டா எதிர்பார்ப்பது போல பிராண்டின் இமேஜ் எந்தளவிற்கு உயரும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த ZR-V-யின் வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியாவிற்காக ஹோண்டா திட்டமிட்டிருக்கும் பிற விலை குறைவான தயாரிப்புகள் தான் இந்த ZR-V இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் எத்தகைய தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள உதவும். ஹோண்டா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications