'மினி' எலிவேட் எஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா? டாடா நெக்ஸானுக்கு அடுத்து ஒரு போட்டி!!
இந்திய கார் மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு எகிடுதகிடாக இருந்து வருகிறது. குறிப்பாக, 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. இதனால், ஏறக்குறைய இந்தியாவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்த சந்தையில் தங்களது தயாரிப்புகளை நிலைநிறுத்தி நல்ல காசு பார்த்து வருகின்றன.
அந்த வகையில், எலிவேட் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் ஹோண்டா, தற்போது காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை தாமதமாக உணர்ந்து கொண்டு கூடிய விரைவில் களமிறங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

(Representational Purpose Image)
இந்திய சந்தைக்கான பிரத்யேக அம்சங்களுடன் இது 4 மீட்டருக்குக் குறைவான நீளம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் இந்தப் பிரிவில் எஸ்யூவி இல்லாததால், புதிய மாடல் அதன் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்த உதவும் எனவும் அந்நிறுவனம் நம்புகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புதிய காரின் பெயர், வெளிப்புற வடிவமைப்பு, உட்புற வசதிகள் உள்ளிட்ட விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. எனவே, தற்போதைக்கு அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் புதிய மாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா அமேஸ் காரில் பயன்படுத்தப்படும் எஞ்சின் தேர்வு இதிலும் புதிய ட்யூனிங்கில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேனுவல் மறும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும். தவிரவும், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் மாடல்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிஎன்ஜி தொழில்நுட்பம் இப்போதைக்கு ஹோண்டாவிடம் இல்லை. எனினும், அதுவும் கூட பரிசீலனை செய்யப்படலாம்.
மேலும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விசாலமான கேபின் இடவசதி, பின் இருக்கைகளுக்கு ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட பல அத்தியாவசியமான தொழில்நுட்பம் மற்றும் சிறப்பம்சங்களுடன் வரும். இதனால், இந்த எஸ்யூவி குறித்து ஹோண்டா பிரியர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் கோலோய்ச்சி வரும் டாடா நெக்ஸான் உள்பட ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அடுத்து ஆண்டு துவக்கத்தில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த கையோடு, இந்த புதிய எஸ்யூவியை கூடிய விரைவாக கொண்டு வருவதற்கு ஹோண்டா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாடிக்கையாளர்களை கவரும் சரியான விலை, நம்பகமான எஞ்சின், அதிக மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் ஹோண்டாவின் நம்பகத்தன்மையுடன் போட்டியாளர்களை இந்த புதிய எஸ்யூவி எதிர்கொள்ளும். அடுத்த பிற்பாதியில் அல்லது 2028ம் ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக சந்தைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் வந்த ஹோண்டா எலிவேட் காரின் டிசைன் அம்சங்கள், ஓட்டுதல் அனுபவத்தை தரும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியிலும் வழங்குவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நிச்சயம் இந்த சந்தையில் அடுத்து ஒரு சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications


