இது ஃபெராரியும் இல்ல, லம்போவும் இல்ல... இந்தியா வரும் ஹோண்டாவின் ஸ்போர்ட்ஸ் கார்?
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ப்ரீலூட் (Honda Prelude) ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்போர்ட்டியான தோற்றம், ஹைபிரிட் தொழில்நுட்பம் எனப் பல சிறப்பம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வர இருக்கிறது.
ஹோண்டா என்றாலே இந்தியாவில் அமேஸ், சிட்டி, எலிவேட் போன்ற குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற கார்கள் நினைவுக்கு வரும். ஆனால், இந்த கார்கள் மூலமாக குறிப்பிடத்தக்க சந்தைப் பங்களிப்பை பெற முடியாமல் புதிய உத்திகளுடன் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பெறுவதற்கான திட்டங்களில் ஹோண்டா தீவிரமாக இறங்கி உள்ளது.

அண்மையில் ரூ.50 லட்சத்தில் இசட்ஆர்வி காரை அறிமுகம் செய்ததுடன், புக்கிங்கும் சிறப்பாக இருந்ததால் உற்சாகத்தில் இருக்கும் அந்நிறுவனம் தற்போது அடுத்த லெவலுக்கு செல்லும் வகையில் தனது ப்ரீலூட் ஸ்போர்ட்ஸ் காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கதவுகளுடன் கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் கார் கூபே ரகத்தில் வித்தியாசமான வடிவமைப்பையும், ஓட்டுவதில் தனித்துவமான அனுபவத்தையும் விரும்புபவர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எப்போது வரும்?
வரும் 2027ம் ஆண்டு புதிய ஹோண்டா ப்ரீலூட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதன் அறிமுகத் தேதி குறித்து ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வடிவமைப்பை பொறுத்தவரை, ப்ரீலூட் வழக்கமான செடான் கார்களில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
தாழ்வான முன்பகுதி, கூர்மையான ஹெட்லைட்டுகள், சரிவான கூரை அமைப்பு, இரண்டு கதவுகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காருக்கு உரிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சாலையில் தனித்து தெரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வடிவமைப்பு நிச்சயம் பிடிக்கும்.

ஹைப்ரிட் கார்
புதிய ப்ரீலூட் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்சார மோட்டார்கள் இணைக்கப்பட்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கிறது. இந்த ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக 200 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அதாவது, ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் அனுபவத்துடன் எரிபொருள் சிக்கனத்தையும் பெறும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஸ்போர்ட்டியான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இரண்டு கதவுகள் கொண்ட கூபே என்பதால் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், தினசரி பயணம் செய்வதற்கும் இது நடைமுறைக்கு ஏற்ற தேர்வாக இருக்காது.
எதிர்பார்க்கும் விலை
புதிய ஹோண்டா ப்ரீலூட் கார் வெளிநாட்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படும். இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் காரணமாக இதன் விலை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இடையில் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் ஸ்போர்ட்ஸ் கார் வாங்கும் கனவும் இருக்கும் இளம் பணக்காரர்களுக்கு ஏற்ற விலையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இன்றைய நிலையில் ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றாலே கோடிகளை தாண்டும் நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த புதிய ப்ரீலூட் மாடலை கொடுத்து இந்தியர்களை வசியம் செய்ய முடியும் என்று ஹோண்டா கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது. தனித்துவமான வடிவமைப்பு, ஹைப்ரிட் பவர்டிரெயின் உள்ளிட்ட அம்சங்கள் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமாக தேர்வாகவும் சரியான விலையுடன் மதிப்பையும் பெற்றுத் தரும் என்று நம்பலாம்.
கடந்த 1978ம் ஆண்டு ஹோண்டா ப்ரீலூட் ஸ்போர்ட்ஸ் கார் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2025ம் ஆண்டு மீண்டும் ஆறாம் தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் உள்ளது. தற்போது இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications


