புதிய ஹோண்டா கார்களை உருவாக்கப்போகும் டாடா டெக்... இந்தியா உள்பட உலகளாவிய மாடல்கள் உருவாக்க ஒப்பந்தம்?
இந்தியாவில் கார் சந்தையில் நீண்ட காலமாக வர்த்தகம் செய்து வந்தாலும் கடும் போட்டியால் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற முடியாத நிலையில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தையில் விற்பனையை வலுப்படுத்தும் திட்டத்தில் ஹோண்டா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, புதிய தலைமுறை கார்களை உருவாக்குவதற்கான புதிய கட்டமைப்புக் கொள்கை மற்றும் கார் உருவாக்க பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கான பணியை இந்தியாவை சேர்ந்த டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாக நிக்கெய் ஆசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய முடிவின்படி, இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் உலகளாவிய சந்தைக்கான புதிய தலைமுறை ஹோண்டா கார்களுக்கான கட்டமைப்பு, சேஸீ உருவாக்கம், எஞ்சின்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய கார் உருவாக்கப் பணிகளையும் டாடா டெக்னாலஜீஸ் வசம் ஒப்படைக்க ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஹோண்டா கார் நிறுவனத்துக்காக டாடா டெக்னாலஜீஸ் உருவாக்க இருக்கும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் பெட்ரோல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் என பல்வேறு விதமான எரிபொருள் தேர்வுகள் கொண்ட மாடல்களும் உருவாக்கப்படும். ஆசியா மற்றும் உலக அளவில் பல்வேறு நாடுகளில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு செல்லும். அதேநேரத்தில், வட அமெரிக்க சந்தைக்கு இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாது. இந்த புதிய ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் இதுவரை இல்லாததால் இதுகுறித்த முழுமையான விளக்கம் மற்றும் தகவல்கள் இதுவரை இல்லை.
புதிய தலைமுறை கார்களை உருவாக்கும் பணிகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கான செலவீனத்தை வெகுவாக குறைக்கவும், உரிய நேரத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும் இந்த முடிவை ஹோண்டா எடுத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைப்படி, ஹோண்டா கார் நிறுவனத்திற்கு 3.3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இழப்புகளையும், செலவீனங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானிற்காக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த 3 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகத் திட்டத்தை ஹோண்டா ரத்து செய்தது.
ஹோண்டா நிறுவனம் "Triple Half" என்ற பெயரில் கார் உருவாக்கப் பணிகளுக்கான செலவீனத்தை 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த பணிகளை வெளி நிறுவனங்களிடம் ஒப்படைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சந்தைப் போட்டி காரணமாக உலக அளவில் கார்களுக்கான புதுப்பொலிவு கொடுக்கும் சூழலுக்கான கால அளவு வெகுவாக குறைந்துவிட்டதும் ஹோண்டா நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாகும் கார்கள், அவை எப்போது சந்தையில் அறிமுகம் செய்யப்படும் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதேநேரத்தில், நிச்சயமாக செலவீனத்தை கட்டுப்படுத்தி வருவாயை பெருக்கும் முயற்சியாக இந்த முயற்சிகளில் ஹோண்டா தீவிரமாக இறங்கி உள்ளது.
இதுவரை ஹோண்டாவின் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுதான் கார்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், முதல்முறையாக இந்த முக்கியப் பொறுப்பை இந்திய நிறுவனத்தின் வசம் ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா ஒப்படைத்துள்ளது. இதில், மற்றொரு முக்கிய விஷயம், டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் டாடா குழுமத்தின் கீழ் தனித்தனி நிறுவனங்களாக செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications