இந்தியாவில் ஹோண்டா புதிதாக வெளியிடவிருக்கும் 6 கார்கள் இவை தான்
சில தினங்களுக்கு முன்பு தான் சிட்டி ஃபேஸ்லிப்ட் வெளியிட்டை, ZR-V என்ற புதிய ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இந்தியாவிற்கான அந்நிறுவனத்தின் திட்டத்தின் முதலிரண்டு கார்களாக இவை வெளியாகியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இன்னும் நான்கு கார்களையும் திட்டத்தில் வைத்திருக்கிறது ஹோண்டா. அது குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
2027ம் நிதியாண்டில், அதாவது 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆறு புதிய கார்களை வெளியிடவிருப்பதாக முன்பே அறிவித்திருந்தது ஹோண்டா. அதில் முதல் இரண்டு கார்களாகவே சிட்டி ஃபேஸ்லிப்ட் மற்றும் ZR-V எஸ்யூவி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இன்னும் நான்கு கார்களை இந்த நிதியாண்டு முடிவிற்குள் இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அடுத்து வெளியாகும் நான்கு கார்களில் ஒரு எலெக்ட்ரிக் காரும் இருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஆட்டோ ஷோவில் '0 α' (0 ஆல்ஃபா) என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்யூவி காரை ஹோண்டா அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒன்றை உலகமெங்கும் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அந்தப் புதிய கார் இந்தியாவிலும் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் சோதனையையும் ஏற்கனவே இந்தியாவில் ஹோண்டா தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் தான் அதிகளவில் விற்பனையில் இருக்கின்றன, அவை தான் அதிகம் விற்பனையும் ஆகின்றன. எனவே மாருதி e விட்டாரா, மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாகவே ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் வெளியாகவுள்ளது.

இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை நடப்பு நிதியாண்டின் முதவில், அதாவது 2027 மார்ச் மாதத்தையொட்டி நாம் எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னதாக இந்தாண்டு ஏற்கனவே ஹோண்டா விற்பனை செய்து வரும் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யூவியின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலிவேட் எஸ்யூவியை ஹோண்டா வெளியிட்டு மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு மேம்பாடுகளுடன் புதிய எலிவேட் எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றைத் தவிர்த்து வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் அக்கார்டு, சிவிக் மற்றும் CR-V ஆகிய கார்களில் ஏதாவது இரண்டை இந்தியாவிற்குக் கொண்டு வருவது குறித்து ஹோண்டா பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நேம்பிளேட்டுகளுக்கு இந்தியாவிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகம் இருக்கிறது. எனவே இவற்றின் மூலம் இந்தியாவில் ஓரளவிற்கு விற்பனையை ஈட்ட முடியும் என நினைக்கிறது அந்நிறுவனம்.
ஹோண்டாவின் ப்ரீமியமான ப்ரீலூடு ஹைபிரிட் ஸ்போர்ட் காரினைக் கூட இந்தியாவில் CBU முறையில் இறக்குமதி செய்து வெளியிடுவது குறித்து பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றனவாம். ப்ரீலூடு மட்டுமின்றி, மேலே கூறிய மூன்று கார்களையுமே கூட முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டே இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து ஹோண்டா பரிசீலனை செய்து வருகிறதாம். அல்லது CKD முறையில் இந்தியாவில் அசெம்பிள் செய்தும் இந்தக் கார்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்யலாம். ஹோண்டா என்ன முடிவெடுக்கிறது என்பது விரைவில் தெரிந்து விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியளிக்கக்கூடிய நிலையில் இருந்து வந்தது ஹோண்டா. ஆனால் இப்போது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கார்களை விற்பனை செய்து வருகிறது புதிய மாடல்கள் மூலமாக கார்களின் விற்பனையை அதிகரிப்பதை விட பிராண்டு மதிப்பை உயர்த்துவதிலேயே மொத்த கவனத்தையும் ஹோண்டா செலுத்தி வருகிறது. பிராண்டின் மதிப்பு உயரும் போது விற்பனை தானாகவே உயரும்.


Click it and Unblock the Notifications